அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து, ‘மதரஸா கல்வி சட்டம் 2004’-ஐ அரசியலமைப்பின்படி உறுதி செய்துள்ளது உச்ச நீதிமன்றம்.
இந்த வழக்கைத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு விசாரித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது.
2004ஆம் ஆண்டு சமாஜ்வாதி கட்சி தலைமையிலான உத்தரப்பிரதேச அரசு, ‘மதரஸா கல்வி சட்டம் 2004’ என்ற சட்டத்தைக் கொண்டுவந்தது. பல ஆண்டுகளுக்குப்பிறகு, கடந்த மார்ச் மாதம் அலகாபாத் உயர் நீதிமன்றம், “மதரஸா கல்வி சட்டம் அரசியலமைப்புக்கும் மதச் சார்பின்மைக்கும் எதிரானது” என்று கூறி ரத்து செய்ததது.
உயர் நீதிமன்ற தீர்ப்பால் 17 லட்சம் மதராஸா மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியானது. தற்போது உச்ச நீதிமன்றம் அந்த தீர்ப்பை ரத்து செய்திருப்பது மாணவர்களைப் பெருமூச்சு விட வைத்திருக்கிறது.

இந்த வழக்கை கடந்த ஏப்ரல் மாதம் முதல் விசாரித்து வருகிறது உச்ச நீதிமன்றம். ஏப்ரல் 5ம் தேதி நடந்த வழக்கு விசாரணையில், “மதச்சார்பின்மை என்பதன் அர்த்தம் ‘வாழு வாழவிடு’ என்பதுதான்” என்று நீதிமன்றம் எடுத்துரைத்தது.
“மதச்சார்பின்மையின் அடிப்படையை மதரஸா கல்வி சட்டம் மீறுவதாக அலகாபாத் நீதிமன்றம் கூறியது தவறு. இந்த சட்டம் மதரஸாக்களில் கல்வித் தரத்தைத் தரப்படுத்தவே செய்கிறது” என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
மதரஸாக்களில் 12ம் வகுப்புக்கு மேல் அளிக்கப்படும் ஃபாசில், கமில் பட்டங்கள் யு.ஜி.சி சட்டங்களுடன் முரண்படுவதையும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. மேலும், மதரஸா கல்வி சட்டம் சிறுபான்மையினர் பாதுகாப்புக்கு உதவுவதாகவும், கல்வியுடன் சில மதச் சடங்குகள் கற்றுக்கொடுக்கப்படுவதனால் மதரஸாக்களை அரசியலமைப்புக்குப் புறம்பானதாகக் கருத முடியாதெனவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

மதரஸாக்கள் என்பன இஸ்லாமியர்கள், அரபு, உருது, பாரசீகம், இஸ்லாமிய ஆய்வுகள், திப் (பாரம்பரிய மருத்துவம்), தத்துவம் மற்றும் சில பாடங்களைக் கற்றுக்கொள்ளும் பள்ளியாகும்.
உத்தரப்பிரதேசத்தில் 23,500 மதரஸாகள் உள்ளன. அவற்றில் 16,513 மட்டுமே அரசால் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 560 மதரஸாக்கள் உத்தரப்பிரதேச அரசால் நிறுவப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs