US Election: “கமலா ஹாரிஸ் அதிபராக வேண்டுவது எங்கள் அன்பின் வெளிப்பாடு” – நெகிழும் மன்னார்குடி மக்கள்

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி இன்று (நவம்பர் 5) மாலை சுமார் 5 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதிபருக்கான போட்டியில் ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபர் ட்ரம்பை எதிர்த்துப் போட்டியிடுகிறார். இருவரும் அனல் பறக்கப் பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது. தேர்தலில் யார் வெற்றி பெற்று அதிபராகப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அமெரிக்க மக்கள் மட்டுமின்றி, உலக நாடுகள் முழுவதும் ஏற்பட்டுள்ளது.

கமலா ஹாரிஸ்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமம் கமலா ஹாரிஸின் பூர்வீக ஊர் என்பதால் அமெரிக்கத் தேர்தல் மன்னார்குடியிலும் பேசு பொருளாக இருக்கிறது. கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது தொடங்கி, தற்போது வரை கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக ப்ளக்ஸ் போர்டு வைத்து வாழ்த்து தெரிவிப்பது, அவர் வெற்றிபெறுவதற்காகக் குலதெய்வ கோயிலில் சிறப்புப் பூஜைகள் செய்து வழிபடுவது எனத் தங்கள் ஆதரவைத் துளசேந்திரபுரம் கிராம மக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த தகவல் அமெரிக்காவிலுள்ள கமலா ஹாரிஸ்க்குச் செல்ல தம் சொந்த மண்ணில் தன்னுடைய வெற்றிக்காக உருகும் உறவுகளை நினைத்து நெகிழ்ந்து போனாராம். கமலா ஹாரிஸின் தாத்தா பி.வி. கோபாலன் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த அரசாங்கத்தில் ஸ்டெனோகிராபராக இருந்தவர். அதன் தொடர்ச்சியாக சிவில் சர்வீஸ் அதிகாரியாகவும் பணியாற்றினார். அகதிகளைக் கணக்கெடுப்பதற்காக ஆங்கிலேய அரசு, பி.வி. கோபாலனை ஷாம்பியா நாட்டுக்கு அனுப்பியது. குடும்பத்துடன் ஷாம்பியா நாட்டுக்குச் சென்றவர் பணி முடிந்ததும் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.

துளசேந்திரபுரம் கோயிலில் கிராம மக்களுடன் கமலா ஹாரிஸ் ஆதரவாளர்கள்

பி.வி. கோபாலனின் இரண்டாவது மகள் சியாமளா. இவருடைய மகள் தான் கமலா ஹாரிஸ். வழக்கறிஞராகப் பணியாற்றிக் கொண்டே அரசியலில் ஈடுபட்டு வந்தார் கமலா ஹாரிஸ். கலிபோர்னியாவின் முதல் பெண் உறுப்பினராகப் பதவி வகித்தது இவருக்கான சிறப்பு. படிப்படியாக அரசியலில் வளர்ந்தவர் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில், துணை அதிபராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் நாளான இன்று துளசேந்திரபுரம் வீடுகளில் கமலா ஹாரிஸ் பெயரைக் கோலமிட்டு வெற்றி பெற வாழ்த்தினர். குலதெய்வ கோவிலில் சிறப்புப் பூஜைகள் செய்தனர். கமலா ஹாரிஸ் ஆதரவாளர்களான மூன்று அமெரிக்கப் பெண்கள் சென்னையிலிருந்து இன்று துளசேந்திரபுரம் வந்தனர்.

கமலா ஹாரிஸ்க்கு வாழ்த்து கோலம் போடும் பெண்கள்

கிராம மக்களுடன் சேர்ந்து கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டிக் கொண்டனர். சொந்த ஊரில் கமலா ஹாரிஸ்க்கு இருக்கும் ஆதரவைக் கண்டு மகிழ்ந்தனர். ’வின் ஃபார் கமலா ஹாரிஸ்” என மக்களுடன் சேர்ந்து முழக்கமிட்டனர். இதனால் ஊரே களைக்கட்டியது. இதுகுறித்து துளசேந்திரபுரம் கிராமத்தினர் கூறுகையில், “அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டாலும் பூர்வீக ஊரான துளசேந்திரபுரத்தை மறக்காதவர் கமலா ஹாரிஸ். அவரது உறவினர்கள் சென்னையிலும் துளசேந்திரபுரத்திலும் வசிக்கின்றனர்.

குலத்தெய்வமான தர்மசாஸ்தா கோயிலில் திருப்பணிகள் நடைபெற்றபோது தனது பங்களிப்பாக நன்கொடை வழங்கி நான் இந்த ஊரைச் சேர்ந்தவள் என உணர்த்தினார். அதற்கான அடையாளமாக நன்கொடை வழங்கியவர்களின் பெயர் பட்டியலில் கமலா ஹாரிஸ் பெயரைக் குறிப்பிட்டுள்ளோம். அரசியலுக்குப் பெயர் போன மன்னார்குடி மண்ணை சேர்ந்தவர் கமலா ஹாரிஸ். துணை அதிபராக இருந்தபோது திறம்படச் செயல்பட்டு அமெரிக்க மக்களின் நன்மதிப்பைப் பெற்றார்.

கமலா ஹாரிஸ்

எங்கள் மண்ணின் மகள் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவது எங்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சியைத் தந்துள்ளது. அவர் நிச்சயமாக வெற்றி பெற்று அமெரிக்கா அதிபர் ஆவார் என்கிற நம்பிக்கை எங்களுக்குள்ளது. அவருக்காக வாழ்த்துவதும், வேண்டுவதும் எங்களுடைய அன்பின் வெளிப்பாடு. அமெரிக்க அதிபரான பிறகு அவர் சொந்த ஊருக்கு வருவார். அதை இந்தியா மட்டுமல்ல மன்னார்குடியும் கொண்டாடும். கமலா ஹாரிஸ் வருகைக்காக நாங்களும் காத்திருக்கிறோம். அவர் அதிபராக வெற்றி பெறுவதற்கு வாழ்த்துகிறோம்” என்றார்.

மேலும் புகைப்படங்களுக்கு பின்வரும் ஆர்டிக்கிளை க்ளிக் செய்யவும்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb