Adani: `நவம்பர் 7-க்குள் ரூ.7,200 கோடி செலுத்தாவிட்டால்…’ – வங்க தேச அரசுக்கு கெடு விதித்த அதானி

வங்காள தேசம் நாட்டுக்கு மின்சாரம் வழங்கி வரும் அதானி நிறுவனம் கடன் கொகையை செலுத்தவில்லை என்றால் மின்சாரத்தை நிறுத்திவிடுவதாக அறிவித்துள்ளது. நிலுவையில் உள்ள 850 மில்லியன் டாலரைக் (7,200 கோடி ரூபாய்) கொடுக்க நவம்பர் 7ம் தேதி வரை கெடு விதித்துள்ளது.

முன்னதாக அதானி நிறுவனம் வாங்காள தேசம் மின்சார வளர்ச்சி வாரியத்துக்கு கடன் தொகையை செலுத்தவும், கடன் பாதுகாப்பை உறுதிசெய்ய 170 மில்லியன் டாலர்களுக்கான கடன் கடிதம் (LC) வழங்கவும் அக்டோபர் 31ம் தேதி வரை கெடு அறிவித்திருந்தது.

வங்காள தேச மின்சார வாரியம், கிருஷி வங்கி வழியாக கடன் கடிதம் செலுத்த முற்பட்டிருக்கிறது. இந்த நடவடிக்கை மின்சார விநியோக ஒப்பந்தத்துக்கு எதிரானது என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா வலைதளம். மேலும் கிருஷி வங்கியில் டாலர் கையிருப்பு இல்லாததால் கடன் தொகையை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

முகமது யூனுஸ்

பங்களாதேஷுக்கு மின்சாரம் வழங்கும் மிகப்பெரிய நிறுவனமாக திகழ்கிறது அதானி நிறுவனம். தற்போது ஜார்க்கண்ட் மின்சார நிலையத்தில் இருந்து அனுப்பப்படும் மின்சாரத்தின் அளவு, கிட்டத்தட்ட சரிபாதியாக குறைக்கப்பட்டுள்ளது.

அதானியின் ஒருவருட கால துணை ஒப்பந்தம் ரத்தாகியிருப்பதால் மின்சாரத்தின் விலை அதிகரித்திருக்கிறது. ஆஸ்திரேலியா, இந்தோனேசியா நாடுகளின் நிலக்கரி வரத்தும் விலை நிர்ணயிப்பதில் முக்கிய தாக்கம் செலுத்துகிறது.

வங்காள தேச அதிகாரிகள் வாரம் 18 மில்லியன் டாலர்கள் வழங்குவதாக தெரிவித்திருக்கின்றனர். ஆனால் மின்சார விலை 22 மில்லியன் டாலர்களைத் தாண்டுவதால் தொடர்ந்து கடன் தொகை அதிகரித்து வருகிறது.

முகம்மது யூனுஸ் தலைமையிலான வங்காள தேசத்தின் இடைக்கால அரசிடம் தொடர்ந்து பேசி வருகிறார் அதானி.