“விஜய் அதிமுக-வை விமர்சிக்கவில்லை’ என, ஏன் துடிக்கிறார்கள்?’ – எடப்பாடி கொந்தளிப்புக்கு பின்னால்..?

முதல் அரசியல் மாநாட்டை நடத்தி முடித்திருக்கிறார் தவெக கட்சியில் தலைவரும் நடிகருமான விஜய். மாநாட்டில் திமுக-வையும் பாஜக-வையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் சாடிய விஜய், தமிழ்நாட்டை அதிக ஆண்டுகள் ஆண்ட அ.தி.மு.க குறித்து ஒருவார்த்தைக்கூட பேசாதது, கவனம் பெற்றது.

இதுதொடர்பாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் பத்திரியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அ.தி.மு.க-வை பற்றி ஒருவர் பேசாமல் இருக்கிறார் என்றால் உங்களுக்கு ஏன் கஷ்டமாக இருக்கிறது. எல்லாரும் துடிக்கிறாங்க.. அ.தி.மு.க என்பது மக்களுக்காக தொடங்கப்பட்ட கட்சி. மக்களுக்கு உழைக்கிற கட்சி.

விஜய்

அ.தி.மு.க அரசு இருந்தபோது தான் நிறைய திட்டங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட கட்சியை அப்படிப்பட்ட அரசை அவர் எப்படி விமர்சனம் செய்வார்? அதில் என்ன குற்றம் கண்டுபிடிப்பார்?. ஒவ்வொரு கட்சி தலைவர்களுக்கு ஒவ்வொரு குறிக்கோள் இருக்கும். அந்த அடிப்படையில் தான் பேசுவார்கள். அதனால் இந்த கட்சியை பேசவில்லை. அந்த கட்சியை பேசவில்லை என்று மற்றவர்கள் ஆதங்கப்பட வேண்டிய அவசியமே இல்லை.” என்று கொதித்திருந்தார் எடப்பாடி.

எடப்பாடியின் இந்த கொந்தளிப்புக்கு பின்னால் சில ஆசையும் பயமும் இருக்கிறது என்கிறார்கள் அதிமுக சீனியர்கள். தொடர்ந்து அவர்கள் பேசும்போது, “அ.தி.மு.க-வின் தற்போதைய நிலைமையில் தேர்தல் வெற்றி என்பது மிக முக்கியம். இதை மனதில் வைத்துதான், அ.தி.மு.க தொடக்க நாள் விழாவுக்கான மடலில், ‘2026-ல் ஆட்சியமைக்க எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறேன்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார் எடப்பாடி. இருப்பினும், சசிகலா, தினகரன், ஓ.பி.எஸ்ஸை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவர எண்ணம் அவருக்கு துளியும் இல்லை. இதை முன்னெடுக்கும் சீனியர்களை அவர் எதிர்ப்பதால், அவருக்கு நெருக்கடியும் ஏற்படுகிறது. இதெற்கெல்லாம் சர்வலோக நிவாரணி, பலமான கூட்டணி அமைப்பதுதான் என்று எடப்பாடி எண்ணுகிறார்.

தனிக்கட்சித் தொடங்கிய முதல் தேர்தலிலேயே மிகப்பெரிய வெற்றிப் பெறவேண்டும் என்று விஜய்க்கு ஆசை இருக்கிறது. அதற்கு அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தால்தான் முடியும். இதற்கு விஜய் ஒத்துபோவார் என்று எடப்பாடிக்கு ஆசையும் நம்பிக்கையும் இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி

எனவேதான், தொடக்கத்தில் இருந்தே, அவருக்கு நேசக்கரம் நீட்டுகிறார் எடப்பாடி. அதேநேரத்தில், அ.தி.மு.க இடத்துக்கு நாம் வரவேண்டும் என்பது விஜய்யின் எண்ணமாக இருந்தால், அது அதிமுகவுக்கு பேராப்பத்தாக அமைந்துவிடும் என்ற அச்சமும் எடப்பாடிக்கு இருக்கிறது.

எனவே விஜய் கூட்டணி குறித்து தனது நிலைப்பாட்டை உறுதியாக தெரிவிக்காதவரை, அமைதியாக இருந்து அரசியல் லாபத்தை எடுக்க முடித்தெடுத்து இருக்கிறார் எடப்பாடி. அதன் ஒருபகுதியாதான், அதிமுகமீது விமர்சனம் வைக்க எதுவுமே இல்லையென்று பாதுகாப்பாக அரசியல் செய்கிறார் எடப்பாடி.” என்றனர் விரிவாக.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY