TVK Vijay: ` சில முறை நடந்த சந்திப்புக்குப் பிறகு…’ – தவெக மாநாட்டில் கொள்கை வாசித்த சம்பத்குமார்

விக்கிரவாண்டியில் சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக வெற்றிக் கழக மாநாடும் அதில் விஜய்யின் பேசும் அரசியல் களத்தில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. அந்த மாநாட்டில் விஜய் பேசுவதற்கு முன், கட்சியின் கொள்கைகளை மேடையில் வாசித்தவர் பேராசிரியராக இருந்து தற்சமயம் கட்சிப் பணிக்காக அந்த வேலையை உதறி இருக்கிற சம்பத்குமார்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் அந்த மாவட்டத்திலுள்ள நாகம்பட்டி, நாகலாபுரம் ஆகிய ஊர்களில் இயங்கி வரும் அரசுக் கல்லூரிகளில் தற்காலிக பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தவர். பிறகு எட்டயபுரம் அருகே இருக்கும் தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகத்திலும் சில காலம் பணிபுரிந்து வந்தாராம். தற்சமயம் முழுக்க முழுக்க கட்சிப் பணிகளில் தன்னை ஈடுபடுத்தி கொள்வதற்காகவே கல்லூரிப் பணியை ராஜினாமா செய்து விட்டதாகச் சொல்கிறார்.

சம்பத்குமார்

தேர்தல் நேரங்களில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர், ஜோனல் ஆபீஸர், வாக்குகள் எண்ணும் மையத்தில் கண்காணிப்பாளர் முதலான அரசு ரீதியான தேர்தல் பணிகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையத்தில்  வேட்பாளர்களின் முகவர் பொறுப்பு என இவருக்கு நிறைய தேர்தல் அனுபவம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

விஜய்யின் ரசிகர் மன்றத்தில் இருந்தவர் இல்லை. அதேநேரம் பொதுச்சேவை மற்றும் அரசியல் ஈடுபாடு அதிகம் இருந்ததால் பொதுநலன் தொடர்பான பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வந்திருக்கிறார்.

வந்தே பாரத் ரயில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நின்று செல்ல கோரிக்கை வைத்தல் போன்ற நிறைய மக்கள் நலன் சார்ந்த விஷயங்களுக்கு குரல் கொடுத்து வந்திருக்கிறார்.

”தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் ஏற எப்படி வாய்ப்புக் கிடைத்தது’ என அவரிடமே கேட்டோம். ”என்னுடைய சொந்தக்காரங்க ஏற்கெனவே ‘நாம் தமிழர்’ கட்சியில் தேர்தலில் போட்டியிட்டு இருக்காங்க. எனக்கு அரசியல் ஆர்வம் பள்ளிப் பருவத்தில் இருந்தே இருந்து வருது. தளபதி விஜய் அவர்கள் கட்சி தொடங்கப் போறார்ங்கிற தகவல் வந்ததும் அவர் அரசியலுக்கு வந்தால் எப்படி இருக்கும்னு சமூக வலைதளங்களில் சில கருத்துகளை பதிவு செய்திருந்தேன்.

அதைப் பார்த்துட்டு தவெக பொதுச் செயலாளர் திரு.ஆனந்த் அவங்க கிட்ட இருந்து அழைப்பு வந்தது. தேர்தல் களத்தில் பணிபுரிந்த அனுபவம் எனக்கிருக்கறதால அவரைச் சந்திச்சப்ப அதுபற்றிப் பேசினேன். தென் மாவட்டங்களில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பா அவர்கிட்ட பேசினேன்.

TVK மாநாடு

இரண்டு மூணு முறை நடந்த சந்திப்புக்குப் பிறகு மாநாட்டில் கொள்கைகளை வாசிக்கும் வாய்ப்பு தந்தாங்க. இனி தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்துல தீவிரமா இயங்கறதுனு முடிவு செய்திருக்கிறேன். கல்லூரி பேராசிரியர் பணி அதற்கு இடையூறாக இருந்ததால அதை உதறியாச்சு” என்றவர், “தெளிவான ஒரு நோக்கத்துடன் அரசியலுக்கு வர்றார் விஜய் சார். மாநாடு வெற்றிகரமா முடிஞ்சதால பொறாமையில் பலரும் பலவிதமா பேசத்தான் செய்வாங்க. ஆனா தளபதி ஒரு முடிவோட இருக்கார். அதனால இந்த மாதிரியான சர்ச்சைகள் எங்களை எதுவும் செய்ய முடியாது” என்கிறார்.