த.வெ.க முதல் மாநாட்டில் பேசிய அந்தக் கட்சியின் தலைவர் விஜய், “கட்சியின் கோட்பாடாக ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதை அறிவித்த போதே எதிரியை அறிவித்துவிட்டேன். சாதி, மதம், இனம், மொழி, பாலினம், பணம், எனப் பிரிக்கும் பிளவுவாத அரசியலையும், ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தையும்தான் எதிர்க்கப் போகிறேன். ஒரு கூட்டம் யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் மீது குறிப்பிட்ட கலரைப் பூசி, பாசிசம் என்று பேசிக்கொண்டு, சிறுபான்மை, பெரும்பான்மை பயத்தைக் காட்டுகிறார்கள். அவர்கள் பாசிசம் என்றால், நீங்கள் பாயசமா?

இந்த மக்கள் விரோத ஆட்சியை ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று கூறி ஏமாற்றுகிறார்கள். பிளவுவாத அரசியல் செய்பவர்கள் த.வெ.க-வின் கொள்கை எதிரி. திராவிடம், பெரியார், அண்ணா பெயரை வைத்துக்கொண்டு, தமிழ் நாட்டைச் சுரண்டும் ஒரு குடும்பச் சுயநலக் கூட்டம் நமது அரசியல் எதிரி. திராவிட சித்தாந்தத்தை அனைவரிடமும் கொண்டு சேர்த்தது சினிமாதான். கொள்கை கோட்பாட்டளவில் திராவிடம், தமிழ் தேசியம் ஆகிய இரண்டுக்கும் பிரிவினை இல்லை. இரண்டும் நமது இரண்டு கண்கள்.” எனப் பேசினார்.
இந்த நிலையில், நமது விகடன் வலைப்பக்கத்தில், “த.வெ.க மாநாட்டில் நடிகர் விஜய் எந்தக் கட்சியை எதிரியாக நிலைநிறுத்தி அதிகம் தாக்கிப் பேசியதாக நீங்கள் நினைக்கிறீர்கள்” என்றக் கேள்வியுடன் பாஜக , திமுக, அதிமுக என்ற மூன்று விருப்பத் தேர்வுகளையும் கொடுத்து, கருத்துக்கணிப்பு நடத்தினோம்.
இதில் கலந்துகொண்ட நம் வாசகர்களில், பாஜக என 15 சதவிகித வாசகர்களும், திமுக என 84 சதவிகித வாசகர்களும், அதிமுக என 1 சதவிகித வாசகர்களும் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.