`ஒன்னு அந்த பக்கம்… இல்ல இந்த பக்கம் நில்லுங்க, நடுவுல நின்னா…’ – விஜய் குறித்து சீமான் காட்டம்!

நேற்று சென்னை பெரம்பூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், தமிழ்நாடு நாள் கொண்டாட்டக் கூட்டம் நடைபெற்றது. த.வெ.க தலைவர் விஜய் கட்சி தொடங்கியதில் இருந்து சீமான் அவருக்கு ஆதரவாக பேசி வந்தார். ஆனால், த.வெ.க முதல் மாநாட்டிற்கு பிறகு சீமான் தன் நிலைப்பாட்டை மாற்றினார். இந்த நிலையில், சீமான் தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் விஜய் குறித்து சீமான் என்ன பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சீமான்

இந்தக் கூட்டத்தில் விஜய் குறித்து சீமான் பேசுகையில், “தமிழ் தேசியமும், திராவிடமும் ஒண்ணு…எங்க கண்ணு என்று புதிய தத்துவம் கூறியதும் பயந்துட்டேன். இப்போது காட்டுக்கோழியும், நாட்டுக்கோழியும் ஒண்ணு என்று கூறுகிறார். இப்படி ஏன் உணர்கிறார் என்றால் அண்மையில் வெளிவந்த திரைப்படத்தில் வில்லனும், கதாநாயகனும் ஒருத்தரே நடித்ததால் இப்படி நினைத்துவிட்டார்.

திராவிடம் வேறு, தமிழ் தேசியம் வேறு. தமிழர்களுக்கு திராவிடம் அயல்மை. தமிழ் தேசியமே பொருந்தும்…பேருண்மை. இரண்டும் ஒன்று எனக் கூறும் அடிப்படையே தவறு. இது கொள்கை அல்ல. ஒன்று சாலையின் அந்தப் பக்கம் நிற்க வேண்டும் அல்லது இந்தப் பக்கம் நிற்க வேண்டும். நடுவில் நின்றால் லாரி அடித்து செத்துவிட வேண்டியதுதான். இது நடுநிலை அல்ல…கொடுநிலை.

நான் குட்டிக்கதை சொல்பவன் அல்ல

நான் குட்டிக்கதை சொல்பவன் அல்ல. வரலாற்றை சொல்ல வந்தவன். நான் கருவிலேயே யார் என் எதிரி என்று தீர்மானித்து பிறந்தவன். நான் குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து சிந்தித்து வந்தவன் அல்ல…கொடும் சிறையில் இருந்து சிந்திந்து வந்தவன். சத்தமாகப் பேசுகிறேனா…ஆமாம், சரக்கு இருக்கிறது, கருத்து இருக்கிறது. அதனால் சத்தமாகப் பேசுகிறேன்.

ஆவின் பாலோடு கருப்பட்டி பால் தருவது. நான் இப்படியொரு கொள்கையை கேட்டதே கிடையாது” என்று பெரும்பாலும் விஜய் கூறிய `தமிழ் தேசியமும் திராவிடமும் ஒன்று’ என்ற கொள்கைக் கருத்தை எதிர்த்தே சீமான் பேசியிருந்தார்.