கடந்த சில ஆண்டுகளாக கசந்து வந்த இந்தியா – கனடா உறவு, கனடாவில் நடந்த நிஜ்ஜார் கொலைக்கு பிறகு, மிகவும் மோசமாகிவிட்டது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், கனடாவில் காலிஸ்தான் புலிப் படை தலைவர் என்று கூறப்படுகிற நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையில் இந்திய அரசாங்கத்துக்குத் தொடர்பிருக்கிறது என்று கனடா நாடாளுமன்றத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியா, நிஜ்ஜார் கொலையில் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அறிவித்தது. இருந்தும் தொடர்ந்து, இந்தக் கொலையில் இந்தியாவை குற்றம் சாட்டி வந்த கனடா, சமீபத்தில் நிஜ்ஜார் கொலையில் கனடாவில் இருக்கும் இந்திய தூதரான சஞ்சய் குமார் வர்மா உள்ளிட்ட சில இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளது என்று கூறியது.
இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த இந்தியா, கனடாவில் இருக்கும் இந்திய தூதர்களை திரும்ப பெற்றது. மேலும், இந்தியாவில் இருக்கும் கனடா தூதர்களையும் வெளியேறுமாறு இந்திய அரசு உத்தரவிட்டது. இதன் பிறகு, இரு நாடுகளின் உறவும் மிகவும் மோசமடைந்தது.
கடந்த அக்டோபர் 16-ம் தேதி, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நிஜ்ஜார் கொலையில் இந்தியாவிற்கு எதிரான எந்த ஆதாரமும் தங்களிடம் இல்லை என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், நேற்று, கனடா துணை நிதி அமைச்சர் டேவிட் மோரிசன், நிஜ்ஜார் கொலையில் இந்திய அமைச்சர் அமித் ஷாவிற்கு எதிரான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளது என்று அமெரிக்க செய்தி தாள் நேர்காணலில் கூறியுள்ளார்.
நிஜ்ஜார் கொலையான தினத்தில் இந்திய தூதர்களுக்குள் அனுப்பிக்கொண்ட மெசேஜ்கள், அவர்களிடம் இருந்து கனடாவிற்கு வெளியே போன மெசேஜ்கள், அமித் ஷாவிற்கு அனுப்பப்பட்ட மெசேஜ்கள் ஆகிய ஆதாரங்கள் தன்னிடம் உள்ளது என்று கூறியுள்ளார். முதலில், அந்த செய்தி தாள், ‘யார் அந்த இந்திய அமைச்சர்?’ என்று குறிப்பிடவில்லை. பின்னர், அமைச்சரின் பெயர் வெளியிடப்பட்டது.