TVK: `விஜய்யின் படம் வெளியாக உதவிய எடப்பாடி பழனிசாமி’ – ஆர்.பி.உதயகுமார் சொல்லும் புதுக்கணக்கு

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற்று முடிந்திருக்கிறது. அந்த மாநாட்டில் விஜய் பேசியது அரசியல் களத்தில் விவாதமாகி இருக்கிறது.

“ஒட்டுமொத்த தமிழ்நாடும் திமுகவுக்கு எதிராக இருக்கிறது என்பதற்கு, அதிமுக முன்னெடுத்த போராட்டங்கள் எப்படி சான்றாக உள்ளதோ, அதேபோல் தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டைப் பார்க்கமுடிகிறது” என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ஆர்.பி உதயகுமார் நடத்திய பயிற்சி முகா.

வருகின்ற 30 ஆம் தேதி பசும்பொன்னில் நடைபெறுகின்ற முத்துராமலிங்க தேவர் ஜெயந்திக்கு வருகை தரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிப்பதற்காக அதிமுக அம்மா பேரவை சார்பில் தொண்டர்களுக்கு பயிற்சி முகாம் மதுரையில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியை தலைமையேற்று நடத்திய ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தேசியம்,தெய்வீகமும் எனது இரு கண்கள்’ என்று பிரகடனப்படுத்தி தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117 -வது பிறந்தநாள் மற்றும் 62 வது குருபூஜையை முன்னிட்டு வருகின்ற 30 ஆம் தேதி காலை பசும்பொன்னுக்கு எடப்பாடி பழனிசாமி வருகை தந்து அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்.  அவரை உற்சாகமாக வரவேற்கும் வகையில் அதிமுக அம்மா பேரவை சார்பில் 2000-க்கும் மேற்பட்ட தொண்டர் படையினர், சீருடை அணிந்து வரவேற்பு அளிக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமியுடன் பசும்பொன் வரை தொண்டர் படையினர் சொல்கிறார்கள். அறிஞர் அண்ணா சொல்லி கொடுத்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றை கடைபிடித்து ஆற்ற வேண்டிய பணிகள் குறித்துப் பயிற்சி முகாம் நடத்துகிறோம்.

ஆர்.பி.உதயகுமார்

விஜய்யின் மாநாடு சிறந்த துவக்கம், கொடியேற்றி, பிறந்த குழந்தைக்குப் பெயர் வைத்துள்ளார். இளைஞர்கள் தன்னெழுச்சியாகக் கலந்து கொண்டுள்ளனர். ஒட்டுமொத்த தமிழ்நாடும் திமுகவுக்கு எதிராக இருக்கிறது என்பதற்கு, அதிமுக முன்னெடுத்த போராட்டங்கள் எப்படி சான்றாக உள்ளதோ, அதேபோல் தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டைப் பார்க்க முடிகிறது.

இளைஞர்களுக்கு ஐந்து லட்சம் அரசு வேலை வாய்ப்பு வழங்குவோம் என்பதுபோல பல்வேறு வாக்குறுதிகளைக் கூறிவிட்டு பூர்த்தி செய்யாமல் இருந்த திமுக அரசைக் கண்டித்து எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, அம்மா பேரவை சார்பில் நடைபெற்ற மாபெரும் உண்ணாவிரதத்தில், இதேபோன்று இளைஞர்கள் திரண்டு பங்கேற்றனர்.

திமுக, உதயநிதியை துணை முதலமைச்சராக்கி ஜனநாயகத்தைக் குழி தோண்டி புதைத்ததை இன்றைக்கு இளைஞர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, அம்மா பேரவை சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதம் போல விஜய் மாநாடும் வெற்றி பெற்றுள்ளது.

திமுக மெஜாரிட்டியாக உள்ள காரணத்தால் தகுதி இல்லாதவர்களுக்கு பதவி வழங்கி, குடும்ப அரசியல் நடத்துவதால் இளைஞர்கள் அரசுக்கு எதிராகத் திரும்பி விட்டார்கள்.

ஆர்.பி உதயகுமார் – விஜய்

நடிகர் விஜய், சமதர்ம கொள்கை என்று கூறியுள்ளார். இதை எம்ஜிஆர் ஏற்கெனவே கடைப்பிடித்தார். கருணாநிதி மகனை முன்னிறுத்தியதால், ஒரு குடும்பத்தின் பிடியில் தமிழகம் சிக்கக் கூடாது என்று இந்த இயக்கத்தை ஆரம்பித்தார். அப்படிப்பட்ட எம்ஜிஆரை சுட்டிக்காட்டி வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டார் விஜய்.

தமிழகத்தில் திமுக அரசுக்கு எதிராக அலை உருவாகி உள்ளது

2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க மக்கள் தயாராகி விட்டனர். எங்கு சென்றாலும் எடப்பாடியாருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

கலைத்துறை, ஆக்டோபஸ் பிடியில் சிக்குவதுபோல கருணாநிதி குடும்பத்தில் சிக்கி சின்னாபின்னம் ஆகியுள்ளது, தொழில்துறை சபரீசன் பிடியில் சிக்கியுள்ளது. புதிதாக யாரும் தொழில் தொடங்க வேண்டுமென்றால் சபரீசன் மனது வைத்தால்தான் முடியும். தமிழகமே திமுக ஆட்சியால் துயரப்பட்டு வருகிறது.

TVK Vijay | த.வெ.க – விஜய்

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபொழுது விஜய்யின் திரைப்படம் வெளியிட அரசிடம் உதவி கேட்டபோது அதற்கு உதவினார். திமுகவின் அட்டூழியம் அராஜகத்திற்கு முடிவுரை எழுத எடப்பாடியார் தொடர்ந்து மன உறுதியுடன் போராடி வருகிறார், திமுகவின் எதிர்ப்பு அலை காட்டுத்தீயாக பரவி வருகிறது.

விஜய் கட்சி தொடங்கியதால் அதிமுகவுக்கு எள்முனை அளவுகூட பாதிப்பு இல்ஸை. எங்களுடைய போராட்டத்தின் மறு வடிவமாக விஜய்யினுடைய தவெக மாநாட்டை பார்க்கிறோம்.

அதிமுக நிரந்தர வாக்கு வங்கி வைத்துள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற 21 சதவிகிதம் வாக்குகளில் கூடுதலாக இரண்டு சதவிகித வாக்குகளை பெற்றோம், ஆனால் திமுகவுக்கு கடந்த 7 சதவிகித வாக்குகள் குறைந்துள்ளது,

காலத்திற்கு ஏற்றவாறு முன்னேற்றம், பின்னடைவு எல்லாம் சந்தித்திருக்கிறோம். அதிமுக 53 ஆண்டுகால வரலாற்றில் 32 ஆண்டு ஆட்சியில் மக்களுக்கு பணியாற்றி உள்ளது. இன்றைக்கு அமைச்சர் ரகுபதி அதிமுகவின் தாய்ப்பாலை குடித்துவிட்டு அதிமுகவுக்கு எதிராக பேசுகிறார்” என்றார்.