அமெரிக்க அதிபர் தேர்தல் களம் அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளனது. உலகின் மிகப் பெரிய பொருளாதார நாட்டின் அடுத்த அதிபர் ஜனநாயக கட்சியின் கமலாவா, குடியரசுக் கட்சியின் ட்ரம்ப்பா என்பது இன்னும் சில நாட்களில் முடிவாகி விடும். உலகமே ஆவலுடன் உற்று கவனித்து வரும் இந்தத் தேர்தலில் கமலா, ட்ரம்ப் இருவருக்கும் ஆதரவாக ஏராளமான பிரபலங்கள் களமிறங்கினர்.
குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் கமலாவுக்கு ஆதரவாக பிரபல பாப் இசைக் கலைஞர் டெய்லர் ஷிஃப்ட் குரல் கொடுத்தது தேர்தல் களத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இவர் தவிர்த்து, நடிகர் ஜார்ஜ் க்ளூனி, பாப் கலைஞர் எமினெம், பியோன்ஸே போன்றோர்களும் கமலாவுக்கு ஆதரவு தந்துள்ளனர்.
அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக களமிறங்கும் டொனால்டு ட்ரம்ப்பின் பக்கம் பெரிய அளவு பிரபலங்கள் யாரும் இல்லை என்றாலும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கின் ஆதரவு அவருக்கு பக்கபலமாக இருக்கிறது. பல்வேறு காரணங்களுக்காக ட்ரம்ப அதிபர் ஆகவேண்டும் என மஸ்க் விரும்புவதாக தெரிகிறது.
ஒரு பக்கம் ‘ஆப்டிமஸ்’ ஹ்யூமனாய்ட் ரோபோக்கள், டெஸ்லா சைபர்டிரக், வானிலிருந்து இறங்கும் ராக்கெட்டை ஈர்ப்பு விசையை எதிர்த்து ‘கேட்ச்’ பிடிக்கும் ‘சாப்ஸ்டிக்ஸ்’ கரங்கள் என அறிவியல் ஆர்வலர்களால் ஒரு ஹீரோவாக கொண்டாடப்படும் மஸ்க், இன்னொருபுறம், ட்ரம்ப் எதிர்பார்ப்பாளர்கள் மற்றும் முற்போக்குவாதிகளால் வில்லனாக பார்க்கப்படுகிறார்.
உலகின் பெரும் தொழிலதிபர்களில் ஒருவரான எந்நேரமும் பரபரப்பாக இருக்க வேண்டிய மஸ்க், அதற்கு மாறாக தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் ஒரு நாளைக்கு குறைந்தது 10 சர்ச்சை ட்வீட்களையாவது பதிவிட்டு விடுகிறார். அவற்றில் பெரும்பாலானவை ஜனநாயக கட்சி ஆதரவாளர்களை, கமலா ஹாரிஸை அல்லது தன்னை விமசிப்பவர்களை கிண்டலடிக்கும் பதிவுகள்.
தனது தீவிர வலதுசாரி கருத்துகளை, ஆப்ரிக்க அமெரிக்க மக்கள், தன்பாலின ஈர்ப்பாளர்கள் மீதான வன்மங்களை எந்நேரமும் எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் வாரி இறைத்துக் கொண்டிருக்கிறார் என்பதே ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்களின் குற்றச்சாட்டு.
முன்னதாக, டொனால்டு ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு முயற்சி நடைபெற்ற போது தீவிரமாக எக்ஸ் தளத்தில் களமாடிய மஸ்க், ‘பைடன் அல்லது கமலாவை யாரும் கொலை செய்ய முயற்சிப்பதில்லை’ என்று பதிவிட்டு பின்னர் அதனை நீக்கினார். ஆனாலும் அவருடைய சாடல்கள் நின்றபாடில்லை.
2022-ஆம் ஆண்டு எக்ஸ் தளத்தை வாங்கிய பிறகு அந்த நிறுவனத்தையே தலைகீழாக புரட்டிப் போட்டார் எலான் மஸ்க். அவர் எடுத்த முடிவுகளில் நிறுவனம் மற்றும் ஊழியர்களின் நலன் தாண்டி தன்னுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்பே அதில் வெளிப்பட்டதை காணமுடிந்தது. 2020-ஆம் ஆண்டு தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடனை ஆதரித்த எலான் மஸ்க், என்ன காரணங்களுக்காகவோ தன்னுடைய நிலைபாட்டை மொத்தமாக மாற்றி கடந்த ஜூலையில் தான் ட்ரம்ப்பை ஆதரிப்பதாக அறிவித்தார்.
இதற்கு முன்பும் அமெரிக்காவின் பெரும் தொழிலதிபர்கள் பலரும் அரசியல்ரீதியாக தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியிருந்தாலும், ட்ரம்ப்புக்கு எலான் மஸ்க் கொடுக்கும் இந்த கண்மூடித்தனமான ஆதரவு மிகவும் புதிது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
அண்மையில் ட்ரம்ப்புக்கு ஆதரவான பிரச்சாரங்களில் ஈடுபடும் அமெரிக்க அரசியல் நடவடிக்கைக் குழுவை (Pac) தொடங்க மஸ்க் 75 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்தார். பென்சில்வேனியாவில் அதிபர் தேர்தல் முடியும் வரை தினமும் ஒருவருக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு வழங்க இருப்பதாக அறிவித்திருந்தார். மஸ்க்கின் இந்த அறிவிப்பை பலரும் சட்டவிரோதமானது என்று விமர்சித்த நிலையில், இது தேர்தல் நடத்தை விதிகளை மீறும் செயல் என்று அமெரிக்க நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
ட்ரம்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக தனது இருப்பிடத்தை தற்காலிகமாக பென்சில்வேனியாவுக்கு மாற்றியிருந்தார் எலான் மஸ்க். அங்குள்ள பட்லர் நகரத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் ஒரு ‘சர்ப்ரைஸ்’ என்ட்ரியும் கொடுத்தார். இதே இடத்தில்தான் ட்ரம்ப் மீதான கொலை முயற்சி நடத்தப்பட்டது.
அதேபோல ட்ரம்ப் ஜெயிக்கவில்லை என்றால் என்னவெல்லாம் நடக்கும் என்றும் தொடர்ந்து மஸ்க் பயமுறுத்தவும் செய்கிறார். சமீபத்தில் பிரபல செய்தி ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “ஒருவேளை இந்தத் தேர்தலில் ட்ரம்ப் ஜெயிக்காமல் போனால், அதுதான் அமெரிக்காவில் நடக்கும் கடைசி தேர்தலாக இருக்கும்” என்று கூறினார்.
தேர்தல் பிரசாரம் தாண்டி, ட்ரம்ப் 2.0 நிர்வாகத்தில் தனக்கு ஒரு முக்கிய பதவி உண்டு என்பதையும் மஸ்க் மிக வெளிப்படையாகவே பேசிவருகிறார். இதனை உறுதி செய்யும் வகையில், ட்ரம்ப் தனது பிரசாரத்தின்போது, தான் மீண்டும் அதிபர் ஆனால் அரசின் நிதி மற்றும் செயல்திறன் தணிக்கை மற்றும் கடுமையான சீர்திருத்தங்களுக்கான பரிந்துரைகளை வழங்குவதற்கு மஸ்க் ஒரு பணிக்குழுவுக்கு தலைமை ஏற்பார் என்று ஏற்கெனவே அறிவித்துவிட்டார்.
இது உண்மையானால் தன்னுடைய பொது சேவை பூமியின் வெளிப்புற சுற்றுப்பாதையோடு நின்றுவிடாது என்று தெரிவித்திருக்கிறார் மஸ்க்.
“வாஷிங்டன் நகரம் பிரேக் பெடல்களின் பெருங்கடல் ஆகிவிட்டது. அந்த பிரேக் பெடல்களை ‘ஆக்ஸெலரேட்டர்கள்’ (accelerators) ஆக மாற்றுவோம். இதன் மூலம் மிகப் பெரிய விஷயங்களை அமெரிக்காவில் நிகழ்த்தி, ஒரு விண்வெளி நாகரிகமாக மாறுவோம்” என்கிறார் எலான் மஸ்க்.
ஒன்று மட்டும் புரிகிறது, இந்த அதிபர் தேர்தலில் எலான் மஸ்க் இவ்வளவு தீவிரமாக களமாடுவதன் நோக்கம் பூமியை மையப்படுத்தியது மட்டுமல்ல.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb