TVK: “என்னை ட்ரோல் பண்றவங்களுக்கு ஒன்னு சொல்லிக்கிறேன்” – தவெக மாநாட்டுத் தொகுப்பாளரின் பளீச் பதிலடி

விஜய்யின் பிரமாண்ட தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய்க்கு ஈக்குவலாக வைரலாகி, விமர்சனங்களுக்கும் ஆளாகிக் கொண்டிருக்கிறார் தொகுப்பாளர் துர்காதேவி.

‘தளபதி இதோ வந்துவிட்டார்… அதோ வந்துவிட்டார்’ என ஆரவாரத்தோடு துர்காதேவி தொகுத்து வழங்கியது, மீம்ஸ்களாக இணையமெங்கும் பரவியது. அதேநேரத்தில், துர்காவுக்கு ஆதரவுக் குரல்களும் அரவணைத்தன. தனது ஆர்ப்பரிப்புக் குரலால் ட்ரெண்டிங் ஆன தொகுப்பாளர் துர்காதேவியிடம் பேசினேன்.

துர்கா தேவி

“முதல்ல நான் ஒரு கவிஞர். சின்ன வயசுலிருந்தே நல்லா கவிதைகள் எழுதுவேன். ஜெயலலிதா அம்மா கையால மாநில அளவுல முதல் பரிசெல்லாம் வாங்கியிருக்கேன். ‘கலைஞர் 90’ புத்தகத்திலும் எனது கவிதை இடம்பெற்றிருக்கு. இப்படி கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டின்னு நிறைய போட்டிகளில் கலந்துகிட்டு பரிசுகள் வென்றிருக்கேன். எங்கப்பா, என்னை எப்பவுமே ஊக்கப்படுத்திக்கிட்டே இருப்பார். அந்த ஊக்கம்தான், இன்னைக்கு தளபதியோட முதல் மாநாட்டை தொகுத்து வழங்குற அளவுக்கு என்னை முன்னேற்றியிருக்கு.

மக்கள் இயக்க மேடைகள்

நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்தே நான் தளபதியோட ரசிகைதான். அவரோட ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ரத்ததானம் செய்றது, ஏழைகளுக்கு உதவுறதுன்னு இருப்பேன். அதனாலதான், காலேஜ் படிச்சு முடிச்சதும் தளபதியோட மக்கள் இயக்கத்துல அஞ்சு வருடத்துக்கு முன்பே இணைச்சுக்கிட்டேன். இப்போ, எனக்கு 28 வயசு ஆகுது. திருமணத்துக்குப் பிறகும் கணவரோட ஊக்கம் என்னை இன்னும் தீவிரமா இயங்க வெச்சது. தளபதி மக்கள் இயக்கம் சார்பா, விருதுநகரில் நடக்கும் கூட்டங்களில் எல்லாம் பேசுவேன். எல்லோரும் ரொம்ப போல்டா பேசுறன்னு பாராட்டுவாங்க. அந்த அறிமுகம்தான், எங்க பொதுச்செயலாளர் ஆனந்த் பார்வை வரைக்கும் கொண்டு போச்சு.

துர்கா தேவி

திடீர்னு ஒருநாள் கழகப் பேச்சாளரா உங்களைத் தேர்ந்தெடுத்திருக்காங்கன்னு அழைப்பு வந்துச்சு. ஆனா, மாநாட்டை தொகுத்து வழங்கப் போறேன்னு யோசிச்சுக்கூடப் பார்க்கல. ஏன்னா, ‘நாம ஒரு சாதாரண மனுஷி. நம்மளையெல்லாம் தேர்ந்தெடுக்கமாட்டாங்க’ன்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். ஆனா, திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்கிற கட்சிங்குறதை செயல்ல காட்டிட்டாங்க.

மாநாட்டுக்கு ரெண்டுநாள் முன்னாடி ‘நீங்கதான் தளபதியோட மாநாட்டை தொகுத்து வழங்கப்போறீங்க’-னு போன் வந்துச்சு. தலைகால் புரியாம கைய எல்லாம் கிள்ளிப் பார்த்துக்கிட்டேன். நார்மலாக கொஞ்ச நேரம் ஆனதுன்னுதான் சொல்லணும். ஏன்னா, தளபதியை ரொம்ப பிடிக்கும். மக்கள் இயக்கத்துல இருந்தாலும், அவரை இதுவரைக்கும் நேர்ல மீட் பண்ணினது கிடையாது. அவரை நேர்ல பார்க்கிறதுதான் என்னோட வாழ்நாள் கனவு; லட்சியம்; தவம் எல்லாமே. அப்படிப்பட்ட தளபதியோட முதல் மாநாட்டை தொகுத்து வழங்குறது சாதாரண விஷயமா? ரொம்ப எக்ஸைட்மெண்ட் ஆகிட்டேன்.

விஜய்யின் பாராட்டு

அதேநேரம், அவரைப் பார்த்ததும் மேடைல எமோஷனல் ஆகிடக்கூடாதுன்னு நினைச்சேன். ஆனா, என்னால கன்ட்ரோல் பண்ண முடியல. கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன். அதனால்தான், குரல் கொஞ்சம் சேஞ்ச் ஆகிடுச்சு. ஆனா, அவரைப் பார்த்த அந்த செகண்ட் மட்டும்தான் அப்படி. அதுக்கப்புறம் என் பொறுப்பை உணர்ந்து சிறப்பாவே தொகுத்து வழங்கினேன். தளபதியே ‘ரொம்ப நல்லா பேசுனீங்கம்மா’ன்னு ரெண்டு தடவைப் பாராட்டினது மனசுக்கு நிறைவா சந்தோஷமா இருக்கு” என்று உற்சாகமாக பேசுகிறவரிடம், “நீங்கள் தொகுத்து வழங்கியது விமர்சிக்கப்படுகிறதே?” என்றோம்,

துர்கா தேவி

“அந்த விமர்சனங்களையெல்லாம் பார்த்துட்டு சிரிப்பு வந்துடுச்சு. எனக்கு ஒரு பின்புலம், ஒரு நிறம் இருந்தாதான் ரசிப்பீங்களா? பாராட்டுவீங்களா? ரெஸ்பான்ஸ் கொடுப்பீங்களா? நல்ல குரல்; வெளீர் நிறம் இருக்கணும்னு நினைப்பதே தவறான சிந்தனை. நான் தமிழச்சி. தமிழ் மண்ணை; தமிழ் மக்களை நம்பித்தான் பேசினேன். எல்லா மேடையிலும் ‘தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும்’ அப்படின்னுதான் பேசவே ஆரம்பிப்பேன். அப்படியிருக்கும்போது, என்னோட குரலை, நிறத்தை வெச்சு விமர்சிக்கிறதை ஏற்றுக்க முடியாது.

நல்ல தமிழ் உச்சரிப்பு

திறமையைத்தான் பார்க்க வேண்டும். மாநாட்டுக்கு 8 லட்சம் பேர் வந்திருந்தார்கள். அத்தனை ஆண்கள் கூட்டத்தை ஒரு 28 வயசு இளம்பெண் குரலால் கட்டுக்குள் வெச்சிருந்ததைத்தான் முக்கியமா பார்க்கணும்.

சில தொகுப்பாளர்கள் ‘எனக்கு அந்த வாய்ப்பு வந்திருக்கலாம். இதுக்கு நானே பேசிருப்பேன்’ அப்படின்னெல்லாம் சொல்றாங்க. பிரபலமானவங்கதான் மேலும் பிரபலமாகணும்னா, என்னை மாதிரி கிராமத்துப் பெண்கள் என்னைக்கு வெளியில் தெரிவது? வெளியில் வருவது? எங்களுக்கெல்லாம் என்னைக்கு அங்கீகாரம் கிடைக்கிறது? பாரதி சொன்ன மாதிரி அடுப்பூதிக்கிட்டே இருக்கணுமா? இதெல்லாம் ரொம்ப பின்னோக்கிய சிந்தனைகள்.

அத்தனை ஆர்ப்பரிப்பு குரல்களையும் ஓவர்டேக் செய்து, நம் குரல் ஓங்கி பவர்ஃபுல்லா இருக்கணும்னு நினைச்சு அதை சாதிச்சும் காட்டிட்டேன். நல்ல தமிழ் உச்சரிப்போட பேசினேன். அதுக்காக, நிறைய பேர் பாராட்டவும் செய்றாங்க. என் அப்பா, கணவர், ரெண்டு வயசு பொண்ணுன்னு எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷம்.

துர்காதேவி

விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டித்தான் என்னோட சொந்த ஊர். திருமணத்துக்கப்புறம் மூணு வருடமா கணவரோட மதுரைல இருக்கேன். கணவரும் நானும் தனியார் கல்லூரிகளில் விரிவுரையாளரா இருக்கோம். இப்போ, குழந்தை பிறந்ததால நான் லீவ்ல இருக்கேன். மாநாட்டுக்காக, என் மகளை அம்மாக்கிட்ட விட்டுட்டுத்தான் வந்தேன். ஒரு கிராமத்துப் பெண்ணா, ஒரு குழந்தையோட தாயா அத்தனை ஆண்களின் குரல்களையும் பீட் பண்ணி நான் பேசினது ரொம்பவே பெருமையா சந்தோஷமா இருந்தது. இதுக்கே, பேசுறதுக்காக எனக்கு எந்த முன் தயாரிப்பும் கொடுக்கல. எல்லாமே, அந்த சூழலையொட்டி நானே பேசினது. அதனாலதான், சொல்றேன் ரொம்ப பெருமையா இருக்கு.

பொதுச்செயலாளருக்கு நன்றி

என்னை தேர்ந்தெடுத்த பொதுச்செயலாளர் ஆனந்த்துக்கு, இந்த நேரத்துல நன்றியைத் தெரிவிச்சுக்கிறேன். என் பேக்ரவுண்ட் பத்தியெல்லாம் யோசிக்காம ‘நீங்க பேசுங்க’ன்னு மோட்டிவேட் பண்ணி பேசச் சொன்னார். இது அரசியல்மேடை. இப்படித்தான் இருக்கும்.

பிரபல தொகுப்பாளர் தொகுத்து வழங்கியிருந்தா, அது சினிமா நிகழ்ச்சி மாதிரி ஆகியிருக்கும். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ அப்படின்னு தளபதி சொன்னது வெறும் வார்த்தை இல்லை. ஒரு கிராமத்து பெண்ணான என்னைப் பேசவெச்சு சாதிச்சுட்டார். சாமானிய பெண்ணைக்கூட சபையில் ஏற்றி ரசிச்சிருக்கார். தளபதிக்கு எத்தனையோ பேரைத் தெரியும். ஆனா, என்னை ஏன் மேடை ஏற்றனும்? எல்லோரும் சமம்னு நினைக்கிற தளபதியோட நல்ல மனசை விரைவில் ஒட்டுமொத்த மக்களும் புரிஞ்சுக்குவாங்கங்குற நம்பிக்கை எனக்கு இருக்கு.

துர்கா தேவி

கடைசியா, என்னை ட்ரோல் பண்றவங்களுக்கு ஒன்னு சொல்லிக்கிறேன். “என் குரல்தான் என்னோட பலம். நீங்க எதிர்பார்க்கிற குரல்ல நான் பேச முடியாது. எனக்கு கடவுள் கொடுத்தக் குரல்லதான் பேச முடியும். இன்னொருத்தர் மாதிரி நான் ஏன் பேசணும்? அந்தமாதிரி என்கிட்டே எதிர்பார்க்க வேண்டாம். அது காப்பியடிக்குற மாதிரி ஆகிடும். என் திறமையை மட்டும் பாருங்க. அதுதான் அழகு!” என்கிறார் அழுத்தமாக.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs