விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டி வி. சாலையில் நேற்று நடைபெற்று முடிந்தது. மாநாட்டில் உரையாற்றிய விஜய், பிரிவினைவாதம் செய்பவர்களையும் பெரியார், அண்ணா பெயரில் தமிழ்நாட்டைக் கொள்ளையடிக்கும் கூட்டத்தையும் தங்களின் அரசியல் எதிரிகள் என்று கூறினார்.
மேலும், தம்மை நம்பி வருபவர்களுக்கு ஆட்சியதிகாரத்திலும் பங்கு என்று மறைமுகமாக 2026 தேர்தல் கூட்டணி அழைப்பையும் விடுத்திருக்கிறார்.
விஜய் இவ்வாறு கூறியிருப்பது, தமிழக அரசியல் வட்டாரத்தில் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. இப்படியிருக்க, தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான இருக்கும் திருச்சி சரவணன், ஆட்சியில் பங்கு கேட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது. இந்த நிலையில், காங்கிரஸ் அனைத்து அதிகாரத்தையும் பார்த்த கட்சி என்றும், அதிகாரத்தில் பங்கு என்பதில் கட்சி மேலிடம் முடிவெடுக்கும் என்றும் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருக்கிறார்.
சென்னையில் காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் விஜய் குறித்துப் பேசிய செல்வப்பெருந்தகை, “கட்சி ஆரம்பிக்கும்போது கொள்கை, கோட்பாடு என பேசுகிறார்கள். ஆனால், அதற்குப் பிறகு வேறு திசையில் போய்விடுகிறார்கள். அப்படி திசை மாறாமல், வகுப்புவாத மற்றும் பாசிச சக்திகளுக்கு எதிரான குரலில் உறுதியாக இருக்க வேண்டும். நேற்று பிறந்த குழந்தை, புதிய கட்சி, விமர்சனம் அதிகம் செய்ய வேண்டாம்.
போகப் போக எப்படி அரசியல் செய்கிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம். விஜய் போன்ற பிரபலமானவர்கள் கட்சி ஆரம்பித்தால், அது எதிர்நிலை வாக்குகளை எதிரணிக்குச் செல்லவிடாமல், மடைமாற்றம் செய்வதற்குத்தான் அது உபயோகப்படும். திமுக எதிர்ப்பு ஓட்டுகள் விஜய்க்குப் போனாலும் போகலாம்.” என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து, ஆட்சியதிகாரத்தில் பங்கு என்பது 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியிலிருப்பவர்களுக்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு செல்வப்பெருந்தகை, “காங்கிரஸ் அனைத்து அதிகாரத்தையும் பார்த்த கட்சி. அதிகாரம் என்பது நாங்கள் ஒன்றும் சுவைக்காதது கிடையாது. ஒன்றிய அளவிலும், மாநில அளவிலும் அனைத்து அதிகாரத்தையும் பார்த்தவர்கள் நாங்கள்.
அதிகாரத்தின்மீது பெரிய நாட்டம் கிடையாது. அதிகாரத்தை ஒதுக்கிவைத்து விட்டு மக்களுக்கு சேவை செய்வதுதான் காங்கிரஸ். அதிகாரத்தில் அமருங்கள் என்று மக்கள் கூறினால் அமருவோம். அதிகாரம் பெறாதவர்கள் அதற்கு முயற்சி செய்யலாம். மேலும், அதிகாரத்தில் பங்கு என்பதைக் கட்சி மேலிடம்தான் முடிவுசெய்யும்” என்று தெரிவித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs