TVK Vijay: நடிகர் விஜய்யின் அரசியல் மாநாடு; – S.A.C பூர்வீக ஊர் மக்கள் ஷேரிங்ஸ்

அரசியல் களத்துக்குள் விஜய் வரப்போகிறார் என்ற தகவல்கள் பேசப்பட்டபோதே பல்வேறு விவாதங்கள் தொடங்கியது. தொடர்ந்து, அரசியல் தொடர்பான படங்களில் நடித்தும், அவ்வப்போது சினிமா மேடைகளில் அரசியல் பேசியும் தன்னுடைய கண்ணோட்டத்தை ரசிகர்களிடம் தெரிவித்தார். இந்த நிலையில்தான் தமிழக வெற்றிக்கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கி, அதற்கான அதிகாரப்பூர்வ முதல் மாநாட்டை நாளை நடத்த திட்டமிட்டிருக்கிறார். அதற்கு முழுமூச்சாக வேலைகள் நடந்து வருகிறது.

புனித வனத்து அந்தோணியார் தேவாலம் – விஜய்யின் பூர்வீடு அமைந்துள்ள பகுதி

இதற்கிடையில், நடிகர் விஜய்யின் பூர்வீக கிராம மக்கள் என்ன நினைக்கிறார்கள், அந்தப் பகுதியில் எந்த மாதிரியான மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள முயன்றோம். அதற்காக ராமநாதபுர மாவட்டம் பெரியப்பட்டினம் அருகே அமைந்திருக்கும் முத்துப்பேட்டை எனும் கிராமத்தில் நுழைந்தோம். விஜய்யின் தாத்தா சேனாதிபதி பிள்ளை தன் கடைசி காலம் வரை இங்குதான் வாழ்ந்தார். விஜய்யின் தாத்தா சேனாதிபதி பிள்ளை ராமநாதபுரம், சத்திரக்குடி போன்ற ஊர்களில் ரயில் நிலைய அதிகாரியாக பணியாற்றியவர். இங்குள்ள புனித வனத்து அந்தோணியார் தேவாலய கல்லறை தோட்டத்தில்தான் சேனாதிபதி பிள்ளையின் கல்லறை அமைந்துள்ளது.

அவரின் மறைவுக்குப் பிறகு விஜய்யின் தந்தையான இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இந்த கிராமத்தை விட்டு சென்றுவிட்டார். ஆனால் அவ்வப்போது கிராமத்துடன் தொடர்பில் இருந்திருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். சில மாதங்களுக்கு முன்கூட முத்துப்பேட்டைக்கு வந்த எஸ்.ஏ.சந்திரசேகர் தன் தந்தையின் கல்லறையில் வழிபாடு நடத்தியதுடன், அங்கு வந்திருந்தவர்களுக்கு அன்னதானம் வழங்கியுள்ளார். ஆனால், நடிகர் விஜய்யிக்கும் முத்துப்பேட்டை கிராமத்துக்கும் பெரிதாக எந்தத் தொடர்பும் இல்லை.

பிரான்சிஸ் லவ்ஜா – சேனாதிபதி பிள்ளை கல்லறை

இந்த நிலையில், விஜய்யின் அரசியல் வருகை குறித்து, முத்துப்பேட்டையில் வசிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகரின் நண்பரான ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பிரான்சிஸ் லவ்ஜாயிடம் பேசினோம். அவர், “சந்திரசேகரின் அப்பாவும், எங்க அப்பாவும் நெருங்கிய நண்பர்கள். அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார். அப்போது அவரின் மகனான சந்திரசேகரையும் அழைத்து வருவார். அவர்கள் வீடு புனித வனத்து அந்தோணியார் கோயில் எதிர்புறம் இருந்தது. சேனாதிபதி பிள்ளையின் மறைவுக்கு பின் அவர்கள் வசித்த வீட்டினை விற்றுவிட்டனர். அதனால் அவர்களுடனான தொடர்பு நீடிக்கவில்லை.

கடந்த சில மாதங்களுக்கு முன் சந்திரசேகர் இங்கு வந்திருந்தார். அப்போதுகூட அவரை சந்திக்க முடியவில்லை. விஜய் புதிய அரசியல் கட்சி துவங்கியிருப்பதை பாராட்டுகிறோம். அதே நேரத்தில் போட்டிகள் அதிகம் உள்ள தமிழக அரசியல் களத்தில், என்ன காரணத்தை முன்னிட்டு அரசியலுக்கு வருகிறார் என தெரியவில்லை. மற்ற கட்சியினரிடம் இல்லாத புது கொள்கை, மக்களை அவர் அணுகும் முறையை பொறுத்துத்தான் அவரின் வளர்ச்சி இருக்கும். அதற்கு பத்திரிக்கை ஊடகங்களின் ஆதரவும் தேவை. மக்கள் மத்தியில் நேரிடையாக இறங்கி பேசுவதுடன், முழுநேர அரசியலிலும் அவர் ஈடுபட வேண்டும். மற்ற நிர்வாகிகள் மூலம் மக்களிடம் தொடர்பு கொள்ள கூடாது.

சேனாதிபதி குடியிருந்த நிலம் – லூக்காஸ்

ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள கட்சியின் அடிப்படை தொண்டர்களை பெயர் சொல்லி அழைக்கும் அளவிற்கு அவர்களுடனான தொடர்பை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். அவரது கட்சியை வளர்க்க முழுநேர தொண்டர்கள் தேவை. எப்போதாவது வந்து போகும் தலைவராக விஜய் இருக்க கூடாது’’ என்றார்.

விஜய்யின் தாத்தாவுக்கு சொந்தமான நிலத்தில் தற்போது குடியிக்கும் லூக்காஸ் என்பவர், “அரசியலுக்கு கொள்கையை விட பணமே முக்கியம். விஜய்க்கு பணம் தேவை இல்லை என்றாலும் அவரை சுற்றியிருப்பவர்கள் பணம் பதவியை எதிர்பார்த்துதான் இருப்பார்கள். எனவே விஜய் என்ற ஒற்றை நபருக்கான கட்சியாகத்தான் இதனை மக்கள் பார்ப்பார்கள்’’ என்றார்.

கோவிந்தம்மாள்

அப்போது அந்த கிராமத்தில், நூறு நாள் வேலைக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த கோவிந்தம்மாளிடம் விஜய் கட்சியின் மாநாடு குறித்து கேட்டபோது, “விஜய்யை ரொம்ப புடிக்கும். அவரு படங்கள ரசிச்சு பாப்பேன். ஆனா அவரு கட்சி ஆரம்பிச்சது தெரியாது. ஓட்டு கேட்டு வர்ற எல்லாருக்கும் ஓட்டு போட்டுருக்கோம். அதே போல விஜய்யும் ஓட்டு கேட்டா ஓட்டுபோடலாம்’’ என சிரித்துக்கொண்டே பேசினார்.

கிராம மக்களின் மனவோட்டம் ஆதரவு, எதிர்ப்பு என்பதைத் தாண்டி, ‘விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார். இனி என்ன செய்கிறார் பார்க்கலாம்’ என்ற ரீதியில்தான் இருக்கிறது.

அதனால் தொடர்ந்து விஜய்யின் பூர்வீகமான ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் சிலரை சந்தித்துப் பேசினோம். முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் அன்வர்ராஜா, “விஜய் இப்பத்தான் கட்சி ஆரம்பிச்சு முதல் மாநாட்டை கூட்டியிருக்காரு. அவர் பின்னால் இளைஞர்கள் அதிகம் பேர் இருக்காங்க. இது ஆளும் தி.மு.க-வுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்துமே தவிர எங்க கட்சிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. வரும் காலங்களில் அவரது எண்ணம் செயல்பாடு போன்றவற்றை பொறுத்துத்தான் அவரது கட்சியின் வளர்ச்சி இருக்கும்’’ எனக் குறிப்பிட்டார்.

அன்வர்ராஜா – ரவிச்சந்திர ராமவன்னி

திமுக மாநில மீனவரணி துணை செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான ரவிச்சந்திர ராமவன்னி, “சினிமாவிலிருந்து அரசியலில் சாதித்தவர்கள் எம்.ஜி.ஆரும், என்.டி.ஆரும் மட்டுமே. ஜெயலலிதா கூட எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசாக வந்தவர்தான். இவர்களுக்கு மத்தியில் இங்கு சிவாஜி கணேசன், டி.ராஜேந்தர், பாக்கியராஜ், சரத்குமார் போன்றவர்களும், கேரளத்தில் பிரேம் நஸீரும், கர்நாடகாவில் ராஜ்குமாரும் கூட கட்சி ஆரம்பித்து நிலைக்க முடியவில்லை. விஜயகாந்தின் நிலை வேறு. பல தேர்தலை சந்தித்த சீமானால் கூட இன்னும் ஒரு எம்.எல்.ஏ சீட் கூட ஜெயிக்க முடியவில்லை. இந்த வரிசையில் கட்சி ஆரம்பித்துள்ள விஜய்யும் சேருவார். அல்லது ஒன்றிரண்டு சீட்டை எதிர்பார்த்து பெரிய கட்சிகளின் கூட்டணியில் சேருவார்’’ என உறுதியான குரலில் பேசினார்.

ம.தி.மு.க மாநில மீனவரணி செயலாளர் எம்.பேட்ரிக், “கணிசமான ரசிகர்களை கொண்டிருக்கும் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம். நடிகன் நாடாளலாமா என்ற கேள்வி அர்த்தமற்றது. ஏனெனில் நடிகர்களும் மக்களில் ஒருவரே. அரசியலை வைத்து சம்பாதிக்க வேண்டிய அவசியம் விஜய்க்கு இல்லை. அதே நேரத்தில் தமிழக அரசியலை தீர்க்கமாக தெரிந்து கொள்ள வேண்டும். சினிமா கவர்ச்சி மட்டுமே வெற்றிக்கு கை கொடுக்காது. அவரது செயல்பாடுகளும், அடுத்து வரும் தேர்தல்களும்தான் தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை தீர்மானிக்கும்’’ எனத் தெரிவித்தார்.

ஜேம்ஸ் ஸ்டாலின் – எம்.பேட்ரிக்

அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிர்வாகி ஜேம்ஸ் ஸ்டாலின், “விஜய் பக்குவம் இல்லாதவர்களை வைத்துக்கொண்டு கட்சி நடத்துவது கஷ்டம். முதலில் மக்கள் பிரச்னைகளுக்காக அவர் களத்தில் இறங்கி குரல் கொடுக்க தயாராக வேண்டும். அரசியலில் வெற்றி பெற ரசிகர்கள் பலம் மட்டுமே போதாது. அந்த வகையில் விஜய் கட்சியின் எதிர்காலம் ஏமாற்றமாகவே அமைய கூடும்’’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

தே.மு.தி.க வார்டு கவுன்சிலர் ஜெபமாலை ஆரோக்கிய தாஸ், “அரசியலை தீர்மானிப்பது பதவி பணம் என்ற சூழல் இங்கு நிலவுகிறது. எல்லாம் அறிந்த எங்கள் கேப்டனுக்கே, உடன் இருந்தவர்கள் பணத்திற்காக துரோகம் செய்தனர். அப்படிபட்ட சூழலில் களத்தில் இறங்காமல் கட்சி நிர்வாகியின் மூலம் அரசியலில் கால் பதிக்க நினைக்கும்

ஜெபமாலை ஆரோக்கிய தாஸ்

விஜய்யின் அரசியல் பிரவேசம் ஏமாற்றத்தையே தரும். இன்றைக்கு அவரது கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் கூட பணத்திற்காகவும், பதவிக்காகவும் நாளை கட்சியை விட்டு ஓடும் நிலை உருவாகலாம். எனவே அடுத்தவர்களை நம்பாமல் தானே நேரடியாக களத்தில் இருந்தால் மட்டுமே அவரது கட்சி ஓரளவாவது தாக்கு பிடிக்க முடியும்’’ எனத் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs