விஜய்யின் த.வெ.க கட்சியின் முதல் மாநில மாநாடு 27 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இன்னும் இரண்டே நாட்கள்தான் இருக்கும் நிலையில் மாநாட்டுக்கான வேலைகள் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், மாநாட்டைப் பற்றிய லேட்டஸ்ட் நிலவரத்தை அறிந்துகொள்ள முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.
மாநாட்டுத்திடலில் ஏறக்குறைய 50,000 இருக்கைகளை போடவிருப்பதாகத்தான் த.வெ.க சார்பில் காவல்துறையிடம் கொடுக்கப்பட்ட அனுமதிக் கடிதத்தில் சொல்லப்பட்டிருந்தது. ஆனால், இப்போது திடலில் நெருக்கிப் பிடித்து 75,000 இருக்கைகள் வரை போடும் திட்டத்தில் இருக்கிறார்களாம். ஆனால், இந்த 75,000 இருக்கைகளுமே கூட கூடப்போகும் கூட்டத்துக்கு போதுமானதாக இருக்காது என்றே அவர்கள் தரப்பில் சொல்கிறார்கள். தொகுதிக்கு 1500 லிருந்து 2500 பேர் வரைக்கும் மாநாட்டுக்கு வரக்கூடும் என்பது த.வெ.க முகாமின் கணிப்பாகவும் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.
மேற்கு மண்டலத்தில் கோயம்புத்தூரில் ஒரு தொகுதியிலிருந்து மட்டும் 70 வேன்களை பிடித்திருக்கிறார்கள். அதேமாதிரி, தெற்கில் முக்கிய தொகுதி ஒன்றில் 40 வேன்களும் 20 கார்களிலும் ஆட்களை திரட்டி வரவிருக்கிறார்கள். சென்னை உட்பட வட மாவட்டங்களிலிருந்து இன்னும் அதிகமான ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள். இந்த மண்டலங்களில் சில தொகுதிகளில் 100 க்கும் மேலான வேன்களுக்கு அட்வான்ஸ் கொடுத்து வைத்திருக்கிறார்கள். தென் மாவட்டங்களிலிருந்து கிளம்புபவர்கள் நாளை மாலைக்கு மேல் வண்டிகளை கிளப்ப திட்டமிட்டிருக்கிறார்கள். மாநாடு அன்று 2 மணிக்குள் திடலுக்குள் அனைவரும் கூடியிருக்க வேண்டும் என்பது தலைமையின் உத்தரவாம். மாநாட்டு வரவிருக்கும் தொண்டர்களுக்கு திடலிலேயே உணவு சமைத்து வழங்குவதைப் பற்றி எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இதனால் அந்தந்த தொகுதிப் பொறுப்பாளர்களே அவர்கள் தலைமையில் வரும் தொண்டர்களுக்கு உணவுகளை வழங்க அறிவறுத்தப்பட்டிருக்கிறதாம்.
சென்னை மற்றும் வட மாவட்டங்களிலிருந்து கிளம்புபவர்களுக்கு பெரிய பிரச்சனை இருக்காது. மாநாடு அன்று காலையில் கிளம்பினால் போதும். அவர்களுக்கு உணவுக்கு மட்டும் ஏற்பாடு செய்தால் போதும். ஆனால், தொலைதூரத்திலிருந்து வரும் தொண்டர்களுக்கு நிர்வாகிகள் தங்கும் இடத்தையும் பார்க்க வேண்டியிருக்கிறது. தென் மாவட்ட நிர்வாகிகள் சிலரிடம் பேசுகையில் சனிக்கிழமை இரவு கிளம்பி அதிகாலையில் திருச்சியை அடைய திட்டமிட்டிருக்கிறார்கள். அங்கே சில மணி நேர வாடகைக்கு கல்யாண மண்டபங்களை பேசி முடித்திருப்பதாகவும் சொல்கிறார்கள். அங்கே குளித்து கிளம்பி காலை உணவை முடித்துவிட்டு விக்கிரவாண்டியை நோக்கி கிளம்புகிறார்கள்.
விக்கிரவாண்டியில் லோக்கலில் கடை வைத்திருப்பவர்களிடம் பல்க்காக பிரியாணி ஆர்டர் கொடுத்திருக்கிறார்கள். நாம் பேசிய வரைக்கும் பல மாவட்டத் தலைவர்களும் விக்கிரவாண்டி, விழுப்புரம், திண்டிவனம் ஆகிய பகுதிகளின் லோக்கல் ஹோட்டல்களிடம்தான் பார்சலுக்கு ஆர்டர் சொல்லியிருக்கிறார்கள். மதிய உணவை முடித்துவிட்டு அப்படியே மாநாட்டுத் திடலுக்குள் சென்றுவிடுவதே திட்டம் என்கிறார்கள். இரவு மாநாடு முடிந்த பிறகு உளுந்தூர்ப்பேட்டையில் கூடி அங்கே இரவு உணவை முடித்துவிட்டு ஊருக்கு கிளம்புகிறார்கள். மண்டபம் கிடைக்காதவர்கள் தொண்டர்கள் ரெஃப்ரஸ் ஆக மட்டும் எதாவது இடம் கிடைத்தால் போதும் என இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஒரே இடத்தில் அனைவரும் குளித்து ரெடியாக இடம் இல்லாவிடிலும் போகிற வழியில் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே இருக்கும் தங்கும் விடுதிகளையோ ஹோட்டல்களையோ பயன்படுத்திக் கொள்ளலாம் எனும் முடிவிலும் இருக்கிறார்களாம்.
‘மாநாட்டுத்திடலிலேயே உணவு சமைத்து சில மாநாடுகளில் பிரச்சனையாகியிருக்கிறது. அதெல்லாம் சமூகவலைதளங்களில் கடும் விமர்சனங்களை பெற்றது. அந்த மாதிரி எதுவும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் மாநாட்டுத் திடலில் உணவு சமைப்பது பற்றி தலைமை எதுவுமே சொல்லவில்லை. ஆனாலும், சிற்றுண்டி எதாவது ஏற்பாடு செய்யவும் வாய்ப்பிருப்பதாகவும் சொல்கிறார்கள். எங்களுக்கு வந்த உத்தரவுப்படி நாங்கள் அழைத்துவரும் தொண்டர்களுக்கு நாங்களே உணவுப் பொட்டலங்களை ஏற்பாடு செய்துவிட்டோம்.’ என்கிறார்கள் நிர்வாகிகள் சிலர்.
மாவட்டத்துக்கு 150 பேர் என்ற விகிதத்தில் மாநாட்டில் பணி செய்ய சில தொண்டர்களை நியமித்திருந்தார்கள். அந்த சில ஆயிரம் தொண்டர்கள் + மாவட்டங்களின் முக்கிய நிர்வாகிகள் இன்றே விக்கிரவாண்டியை அடைகிறார்கள். கூட்டத்தை எப்படி நிர்வகிக்க வேண்டும் என இவர்களுக்கு சில அறிவுரைகள் வழங்கப்படவிருக்கிறது.
மாநாட்டில் மிக முக்கியமாக சில தீர்மானங்களை நிறைவேற்றவிருப்பதாக சொல்கிறார்கள். இதற்காக தீர்மானக் குழு என்ற ஒன்றையே விஜய் தனியாக அமைத்திருந்தார். ஆனந்த் தலைமையில் தலைமைக்கு நெருக்கமான சில நிர்வாகிகள்தான் இந்தக் குழுவில் இடம்பிடித்திருந்தனர். ஆனால், இப்போது வரைக்குமே மாநாட்டில் என்னென்ன தீர்மானங்களை நிறைவேற்றப் போகிறார்கள் என்பதை இந்தக் குழுவிடமே கூட தெரிவிக்கவில்லையாம். விஜய்க்கு நெருக்கமான ஒரு சிலருக்கு மட்டுமே தீர்மானங்களைப் பற்றிய விவரமெல்லாம் தெரியுமாம். கட்சிக் கொடி அறிமுக விழாவுக்கு முன்பே கொடியைப் பற்றிய தகவல்கள் கசிந்ததில் விஜய் கடும் அப்செட்டாம். அதனால் இந்த முறை வெளியே எந்தத் தகவலும் கசிந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்களாம்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs