Maharashtra: வேட்பாளர் அறிவிப்பில் சொதப்பிய உத்தவ்… எதிர்க்கட்சிகளின் `85’ ஃபார்முலா!

மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் 20-ம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் ஆளும் பா.ஜ.க தலைமையிலான மகாயுதி கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான மகாவிகாஸ் அகாடி கூட்டணிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இரண்டு கூட்டணியும் முறைப்படி தொகுதி பங்கீட்டை இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் பா.ஜ.க 99 தொகுதிகளுக்கும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 45 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடியில் நேற்று மாலையே தொகுதி பங்கீடு அறிவிக்கப்படும் என்று சிவசேனா(உத்தவ்) எம்.பி.சஞ்சய் ராவத் அறிவித்தார். ஆனால் சொன்னபடி மாலை வரை அறிவிக்கவில்லை. ஆரம்பத்தில் தொகுதி பங்கீட்டில் தீர்வு எட்டப்பட்டாலும், விதர்பா மற்றும் மும்பையில் சில தொகுதிகளில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் கூட்டணி தலைவர்கள் உத்தவ் தாக்கரே, சரத் பவார், காங்கிரஸ் தலைவர்கள் முறைப்படி தொகுதி பங்கீட்டை அறிவிக்கவில்லை.

ஆனால் மாலையில் தற்போது நடத்தப்பட்டுள்ள பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட தொகுதிகளை மட்டும் அறிவிப்பது என்று மூன்று கட்சிகளும் முடிவு செய்து அறிவித்துள்ளன. இதனை காங்கிரஸ் மாநில தலைவர் நானா பட்டோலே மற்றும் சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவுத் ஆகியோர் கூட்டாக அறிவித்தனர். இதன் படி மூன்று கட்சிகளும் தலா 85 தொகுதியில் போட்டியிடுவது என்று முடிவு செய்திருப்பதாக இருவரும் அறிவித்தனர். 33 தொகுதிகளுக்கு இன்னும் முடிவு எட்டப்படவில்லை. இதில் 18 தொகுதிகளை பிற கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்க முடிவு செய்துள்ளனர் என்கிறார்கள். தீர்வு எட்டப்படாத தொகுதிகள் குறித்து இன்று மூன்று கட்சி தலைவர்களும் சந்தித்து பேசுகின்றனர். எந்த தொகுதி யாருக்கு என்பதில் கூட்டணி கட்சி தலைவர்களிடையே ஒரு மித்த கருத்து எட்டப்படாத காரணத்தால் கட்சி நிர்வாகிகள் குழப்பத்தில் இருந்தனர்.

எனவே தற்காலிக தீர்வாக 255 தொகுதிகளுக்கு தீர்வு எட்டப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகள் தங்களது முடிவில் உறுதியாக இருப்பதால் முடிவு எட்டப்படாமல் இருக்கிறது. விதர்பாவில் 12 மற்றும் மும்பையில் 3 என 15 தொகுதிகளில் முடிவு எட்டப்படாமல் இருக்கிறது. இத்தொகுதிகளை காங்கிரஸ் மற்றும் சிவசேனா பிரித்துக்கொள்ளுமா அல்லது அத்தொகுதியில் இரண்டு கட்சியும் நட்பு ரீதியில் போட்டியிடுமா என்பது ஓரிரு நாளில் தெரிய வரும்.

நேற்று தொகுதி பங்கீடு அறிவிக்கும் முன்பே உத்தவ் தாக்கரே தனது கட்சி வேட்பாளர்கள் 65 பேர் கொண்ட பட்டியலை அறிவித்துள்ளார். ஆனால் அப்பட்டியலில் அதிக அளவில் குளறுபடி இருந்தது தெரிய வந்தது. அத்தவறுகள் நிர்வாக தவறு என்று சஞ்சய் ராவத் தெரிவித்தார். காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கும் சிவசேனா வேட்பாளர்களை அறிவித்திருந்தது. இத்தவறு சரி செய்யப்படும் என்று சஞ்சய் ராவத் தெரிவித்தார். அவசரத்தில் தவறுகளுடன் பட்டியலை வெளியிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. எவ்வாறு தவறு நடந்தது என்பது குறித்து இன்று சிவசேனா தலைவர்கள் கூடி ஆலோசித்து தவறை சரி செய்வார்கள் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் அனில் தேசாய் தெரிவித்தார்.

உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரே வெளியிட்டுள்ள பட்டியலில் அவரது மகன் ஆதித்ய தாக்கரே ஒர்லி தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாகிம் தொகுதியில் சிவசேனா வேட்பாளரை நிறுத்தாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அத்தொகுதிக்கும் உத்தவ் தாக்கரே வேட்பாளரை அறிவித்து இருக்கிறார். மாகிம் தொகுதியில் ராஜ்தாக்கரே மகன் அமித் தாக்கரே போட்டியிடுகிறார். முதல்வர் ஏக்நாத் ஷிண்டே போட்டியிடும் கோப்ரி தொகுதியில் மறைந்த சிவசேனா தலைவர் ஆனந்த் திகேயின் உறவினரை உத்தவ் தாக்கரே வேட்பாளராக அறிவித்து இருக்கிறார். எனினும் புதிய பட்டியல் மீண்டும் வெளியாகும் என்று தெரிகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88