இர்ஃபான்: பாலினம் அறிதல் டு தொப்புள்கொடி அறுப்பு – `கானல் நீர்’ நடவடிக்கை – திருத்துமா அரசு?

யூடியூபர் இர்ஃபான் சர்ச்சைக்குரிய வீடியோக்களை தனது யூ-டியூப் சேனலில் வெளியிடுவதும், பின்னர் சட்டரீதியிலான குற்றச்சாட்டுகள் எழ அதை நீக்குவதும், இதை தமிழக அரசு கண்டிப்பதுபோல கண்டித்து பெரிய அளவில் நடவடிக்கை எடுக்காமல் விடுவதும் தொடர்கதையாகிக்கொண்டு வருகிறது என்கிறார்கள் ஒரு தரப்பினர். அந்த வகையில், தற்போது மனைவியின் பிரசவத்தின்போது பிரசவ அறைக்குச் சென்று வீடியோ எடுத்ததுடன், மருத்துவர்கள் முன்னிலையில் பிறந்த குழந்தையின் தொப்புள்கொடியை கத்தரிகோலால் வெட்டி, அந்த வீடியோவை தனது சேனலில் வெளியிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் யூடியூபர் இர்ஃபான்.

இர்ஃபான்

சட்டவிரோதமாக குழந்தையின் பாலினத்தை கண்டறிந்த சர்ச்சை:

கடந்த மே மாதம், இர்ஃபானின் மனைவி ஆலியா கர்ப்பம் தரித்திருக்க, தம்பதி இருவரும் துபாய்க்கு சென்று அங்கிருக்கும் ஒரு மருத்துவமனையில் வயிற்றிலிருக்கும் சிசு ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்று கண்டறியும் பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். அதன்பிறகு, இர்ஃபான், தனது குழந்தையின் பாலினத்தை அறிவிக்கும் ஒரு விழாவையே தனது வீட்டில் நடத்தி குழந்தையின் பாலினத்தை பொதுவெளியில் அறிவித்து அதிரவைத்தார். அதுமட்டுமல்லாமல் அவை அனைத்தையும் வீடியோவாகப் பதிவுசெய்து தனது `Irfan Views’ யூடியூப் சேனலில் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். குழந்தையின் பாலினத்தைத் தெரிந்துகொள்வது இந்திய சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்பதால் பல்வேறு தரப்பினரும் இர்ஃபானின் செயலுக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்த, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, “இந்தியாவில் சிசுவின் பாலினம் அறிவதும் அறிவிப்பதும் பாலின தேர்வை தடை செய்தல் சட்டம் 1994-ன் படி தடை செய்யப்பட்டுள்ளது. இர்ஃபானால் யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோவை சமூக வலைதளங்களிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும். இர்ஃபானுக்கு பாலினத் தேர்வை தடை செய்தல் சட்ட விதிகளை மீறியதற்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும்!” என்று தெரிவித்தது.

இதையடுத்து, இர்ஃபான் தான் வெளியிட்ட வீடியோவை தனது யூடியூப் பக்கத்திலிருந்து நீக்கினார். பின்னர், சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் நேரில் சென்று மன்னிப்பு கடிதம் கொடுத்து, இனி இதுபோல் நடக்காது என்று உறுதியளித்ததாகவும், மேலும் யூடியூப் பக்கத்திலும் மன்னிப்பு வீடியோ வெளியிடுவதாகக் கூறியதாகவும், சுகாதாரத்துறை அதிகாரிகளால் அந்த மன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகின.

ஊருக்கே வீடியோ போட்ட இர்ஃபான்…

இதனால் அதிருப்தியடைந்த சமூக ஆர்வலர்கள், “இர்ஃபான் செய்த குற்றத்திற்கு பிரிவு 25-ன் கீழ் குறைந்தபட்சம் மூன்று மாத சிறைத் தண்டனையும் 1,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சாதாரண மன்னிப்பு கடிதத்தை ஏற்றுக்கொண்டு அவரை விட்டுவிட்டனர். இதுவே சாதாரண நபர் ஒருவர் இந்தத் தவறை செய்துவிட்டு, மன்னிப்பு கேட்டுவிட்டால் அவரை சும்மா விட்டுவிடுவார்களா? ஆளும் கட்சி அரசியல் பெரும்புள்ளிகளின் செல்வாக்கு இருப்பதனால் இர்ஃபானுக்கு தண்டனையிலிருந்து விதிவிலக்கா? அவர்மீது எப்.ஃஐ.ஆர் கூட பதிவு செய்யவில்லையா? எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையா? இது என்ன நியாயம்?” என சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.

இர்ஃபான்

தொப்புள்கொடி அறுத்து, குழந்தை பிரசவ வீடியோ வெளியிட்டு சர்ச்சை:

இந்த சூடே தணியாத நிலையில், தற்போது மீண்டும் மனைவியின் பிரசவம் தொடர்பான சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். அதாவது, பிரசவத்திற்காக சோழிங்கநல்லூரில் உள்ள ஓர் தனியார் மருத்துமனையில் தனது மனைவியை அனுமதித்திருந்த இர்ஃபான் பிரவசத்தின்போது, பிரசவ அறைக்கேச் சென்று வீடியோ எடுத்திருக்கிறார். குறிப்பாக, மருத்துவர்கள் முன்னிலையில் பிறந்த குழந்தையின் தொப்புள்கொடியை கத்தரிகோலால் வெட்டும் காட்சியும் இடம்பெற்றிருக்கும் அந்த வீடியோவை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு மீண்டும் அதிர்ச்சியைக் கிளப்பினார். இந்த வீடியோ சமூக வலைதளங்கள், செய்தி சேனல்களில் வைரலாக, விவகாரம் பெரிதாகியிருக்கிறது. `உரிய பயிற்சி-அனுபவம் இல்லாமல் கத்தரிக்கோலால் தாய்-சேயின் தொப்புள்கொடியை வெட்டியது தவறு; இதை சம்மந்தப்பட்ட தனியார் மருத்துவர்கள் அனுமதித்தது மேலும் தவறு; அதை வியூஸ்களுக்காக வீடியோ எடுத்து யூடியூப் சேனலில் வெளியிட்டது மிகத் தவறான முன்னுதாரணம்’ என மருத்துவர்களே கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

மருத்துவர்கள் எதிர்ப்பு, நடவடிக்கை எடுக்க கோரிக்கை:

குறிப்பாக, சமூக ஆர்வலரும் மகப்பேறு மருத்துவருமான அனுரத்னா , “கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் பார்ப்பது சட்டப்படி குற்றம் என இருந்தும் இர்ஃபான் தனது யூடியூப்(youtube) பக்கத்தில் தன் மனைவி கருத்தரித்து இருப்பதும், அவர் வயிற்றில் இருப்பது பெண் குழந்தை என்றும் காணொளி வெளியிட்டார். அது விவாதம் ஆனதும் பலரும் அதை எதிர்க்க தொடங்கியதும் இங்கு எங்கும் கருவின் பாலினம் கண்டுபிடிக்க வில்லை, தான் வெளிநாட்டில் தான் தன் மனைவியின் கர்ப்பபையில் இருப்பது ஆணா பெண்ணா என பார்த்ததாக சொல்லி, வெளிநாட்டில் இதற்கு அனுமதி உண்டு என்றும் சொல்லி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மன்னிப்பும் கேட்டார் இதற்கு. இன்றைய செய்தியில் மீண்டும் அவர் சர்ச்சையில் சிக்கினார் என்று பார்த்ததும் ஒரு மகப்பேறு மருத்துவர் என்கிற முறையில் அவரின் யூடியூப் சென்று பார்த்தேன்.

இர்ஃபான் விவகாரம்…

அவ்வளவு அதிர்ச்சி எனக்கு காத்திருந்தது அதில். யோனி பிரசவம் பார்க்கும் இடத்தில் மட்டுமே ஒரு உடனாளி(birth companion) இருக்க அரசு அனுமதிக்கிறது. ஒவ்வொரு யோனி பிரசவத்தின் போதும் அந்த தாயின் உறவினர் ஒருவர் உடன் இருக்கலாம், அது பிரசவம் சார்ந்த பயத்தினை போக்கி குடும்ப சூழலோடு ஒரு பயமற்ற பாதுக்காப்பான பிரசவத்தை அந்த தாய்க்கு தரும் என்பதால். ஆனால் இந்த காணொளியில் எல்லாத்தையும் காட்டி இருக்கிறார் இர்பான். அறுவை சிகிச்சை அரங்கிற்குள் செல்கிறார். Unsteriled ஆக தான். ஊதா நிறத்தில் ஒரு துணியை போட்டால் அது sterile என அந்த மருத்துவமனை நிர்வாகம் நினைக்கிறதா எனத் தெரியவில்லை எனக்கு.

வயிற்றை கிழிப்பதை பார்க்கிறார். எல்லாமே காணொளியாக பதிவு செய்கிறார்கள். குழந்தை பிறக்கிறது. பெண் குழந்தை என உடனே அறுவைசிகிச்சை செய்த மகப்பேறு மருத்துவர் சொல்கிறார். அடுத்தது “do you want to cut the cord” என அதே மருத்துவர் கேட்கிறார் இர்ஃபானிடம், இர்ஃபான் தலை அசைத்ததும் உடனே அவருக்கு glove கொடுங்க என்கிறார் அதே மருத்துவர். உடனே ஒரு set gloves கொடுக்கப்படுகிறது, அதை அணிகிறார் இர்ஃபான், உடனே அவர் கையில் sterile scissor கொடுக்க படுகிறது, அவர் உடனே தொப்புள் கொடியை வெட்டுகிறார். அவர் ஏதோ பிறந்தநாளுக்கு கேக் வெட்டுவதுபோல் அவரை ஊக்கப்படுத்தகிறார் அந்த மகப்பேறு மருத்துவர்.

இர்ஃபான்

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் இந்த youtuber மீது வழக்கு தொடுக்க வேண்டும். சென்றமுறை தன் அரசியல் பழக்கவழக்கத்தால் தப்பித்தார் என்பதே உண்மை. மன்னிப்பு கேட்டார் விட்டுட்டோம் என்றால் இதற்கு முன் கருவின் பாலினம் கண்டறிதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எல்லாரிடமும் மன்னிப்பு கடிதம் வாங்கி விட்டு, அவர்களை விடுவித்து விட வேண்டியது தானே! நாளைக்கு இன்னொருத்தர் அதே தவறை செய்வார், அத்தவறை செய்யும் முன்பே மன்னிப்பு கடிதம் முன்கூட்டியே எழுதி வச்சுருப்பார். இந்த பிரசவம் நடந்த மருத்துவமனையில் உள்ள scan machine எல்லாம் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். கருவின் பாலினம் இதே மருத்துவரால் இதே மருத்துவமனையில் சொல்லப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கிறேன்.

இந்த பிரசவம் நடந்த மருத்துவமனையை முழுக்க ஆய்வு செய்ய வேண்டும். NABH accreditation அது இது சொல்லிக்கொண்டு ஒரு unsterile common manஐ அறுவை சிகிச்சை அரங்கில் விட்டு கத்தியை கொடுத்து தொப்புள் கொடியை வெட்டிய மருத்துவமனையின் அனைத்து quality related certificates-ஐ திரும்ப பெற வேண்டும். இதை அனுமதித்த, ஊக்கப்படுத்திய அந்த மகப்பேறு மருத்துவருக்கு குறிப்பிட்ட காலம் ஆகினும் மருத்துவப்பணி செய்ய தடைவிதிக்க வேண்டும். இர்ஃபானின் அரசியல் பழக்கம், அல்லது செல்வாக்கு என்ன, அந்த மருத்துவமனையின் அரசியல் பின்புலம் என்ன, அந்த மகப்பேறு மருத்துவரின் பின்புலம் என்ன என்று பார்த்து மன்னிப்பு கடிதம் பெற்றுக்கொண்டு மன்னித்து விட்டுச்சொல்ல இது பாவமன்னிப்பு வழங்கும் இடம் அல்ல இது சட்ட திட்டங்களை கடைபிடிக்கும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் என்பதை தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நிலைநாட்டும் என நம்புகிறேன்.

இல்லையேல் நாளைக்கே ஆயிரம் பேர் வீட்டில் இருந்தே கத்திரிக்கோலோடும் ஒரு வீடியோ கேமராவோடும் பொண்டாட்டிக்கு பிரசவம் ஆகும் மருத்துவமனைக்கு வந்து நாங்களும் ஆபரேஷன் தியேட்டர்குள்ள வருவோம், தொப்புள் கொடியை வெட்டுவோம், அதை பதிவு செய்வோம்,அதை வியாபாரமாக்கி அதில் தான் சோறு திண்போம் என வந்தால் நாம் அந்த ஆயிரம் பேரையும் அனுமதிக்க முடியுமா???” என கடுமையாக குற்றம்சாட்டி கேள்வி எழுப்பினார்.

இர்ஃபான்

ஸ்ட்ரிக்ட் ஆக்‌ஷன் எடுக்குமா மருத்துவத்துறை?

இதையடுத்து, தமிழ்நாடு மருத்துவத் துறை சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்க வேண்டும் என யூடியூப் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியது. இதையடுத்து, சம்மந்தப்பட்ட வீடியோவை வழக்கம் போல தனது சேனலிலிருந்து நீக்கினார் இர்ஃபான். இருந்தும் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் வலுத்தது. இந்த நிலையில், மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் இளங்கோவன், `உரிய பயிற்சியின்றி மருத்துவ உபகரணங்களை பயன்படுத்திய இர்ஃபான் மீதும், அவரை பிரசவ அறைக்கு அனுமதித்த டாக்டர் நிவேதிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் டாக்டர் நிவேதிதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், இர்ஃபானுக்கும் சோழிங்கநல்லூரில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.

யூடியூபர் இர்ஃபான்

`மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம்!’

இந்தநிலையில், இர்ஃபான் விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று தெரிந்துகொள்ளக் கூடாது என்ற சட்டம் இந்தியாவில்தான் இருக்கிறது. துபாயில் தடை இல்லை. அதனால், யூடியூபர் இர்ஃபான் தனது மனைவியை துபாய் அழைத்துச்சென்று தெரிந்துகொண்டுவிட்டார். தகவல் தெரிந்த உடனேயே அவர் மீது டி.எம்.எஸ் சார்பில் நடவடிக்கை எடுக்க நோட்டிஸ் அனுப்பினோம். பின்னர் அவர் `இனிமேல் இதுபோல் செய்யமாட்டேன்’ என வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார். இர்ஃபான் குழந்தையின் பாலினத்தை தெரிந்துகொண்டது துபாயில் அல்லாமல் நம் ஊரில் நடந்திருந்தால் சம்மந்தப்பட்ட நிறுவனத்தை மூடியிருப்போம்!

மா.சுப்பிரமணியன்

இந்த நிலையில் தற்போது அவருடைய குழந்தைக்கு அவரே தொப்புள் கொடியை அறுத்திருக்கிறார். இது கண்டிக்கத்தக்க செயல். அறுவை சிகிச்சை நடக்கும் அறைக்குள் மருத்துவர் அல்லாத ஒருவர் சென்று, தொப்புள் கொடியை துண்டித்திருப்பதென்பது National Medical Commission Act 2021, பிரிவு 34, செக்சன் 1,2-படி மீறுவதாகும். மருத்துவச் சட்ட விதிகளை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நோட்டிஸ் கொடுத்திருக்கிறோம். செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்க டி.எம்.எஸ் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அவர் மட்டுமல்லாமல் அவரை மருத்துவமனைக்குள் அனுமதித்த பெண் மருத்துவர் நிவேதிதா, தனியார் மருத்துவமனை மீதும் நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும், நிவேதிதா மீது மருத்துவ பயிற்சிக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மருத்துவ கவுன்சிலில் நோட்டிஸ் அளித்திருக்கிறோம். சட்ட ரீதியாகவும் துறை ரீதியாகவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இர்ஃபான் மீது நடவடிக்கை எடுப்பதில் அரசியல் பின்புலம் இல்லை. தவறு செய்தவர்களை இந்த அரசு நிச்சயம் தப்ப விடாது. இந்தமுறை இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும், அவரை விடமாட்டோம்!” என உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.

`நடவடிக்கை எடுக்கிறோம், காவல் நிலையத்தில் வழக்கு’ என்றெல்லாம் சொல்கிறார்கள். நீண்ட நாள் கழித்து பார்த்தால் நடவடிக்கை எதுவும் எடுத்தது போல் தெரியவில்லை. அது போல். கானல் நீர் நடவடிக்கையாக இல்லாமல் மற்றொருவர் இந்த தவறுகளை செய்ய யோசிக்கும் படியாக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இர்ஃபானை பொறுத்தவரையில், மில்லியன் ஃபாலோயர்ஸ்களை கொண்டிருக்கும் ஒரு நபர், சமூக பொறுப்புடன் இருக்க வேண்டியதும் அவசியம் என்பதை உணர வேண்டும்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88