தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகிற அக்டோபர் 27 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து மாநாடு நடக்கவிருக்கும் வி.சாலை பகுதிக்கு நேரடி விசிட் அடித்திருந்தோம்.
சென்னையிலிருந்து விழுப்புரம் செல்லும் வழியில் விக்கிரவாண்டி டோல்கேட்டுக்கு சரியாக 6 கி.மீ க்கு முன்பாக இருக்கும் வி.சாலை கிராமத்தில்தான் மாநாடு நடைபெறவிருக்கிறது. நாம் அங்கே சென்றவுடனேயே பத்திரிகையாளர்கள் என அறிந்துகொண்டதால் மக்கள் தாமாகவே வந்து பேசினர். மிகப்பெரிய ஒரு நிகழ்வு தங்களின் ஊரில் நடைபெறப் போவதால் ஒருவித உற்சாகத்தில் மக்கள் இருக்கின்றனர். ‘சென்னைல பஸ் ஏறி வி.சாலைல இறங்கணும்னு சொன்னா முன்னாடி யாருக்குமே தெரியாது. ஆனா, இப்போ விஜய் மாநாட்டால இந்த ஊருக்கே ஒரு அடையாளம் கிடைச்சிருக்கும். வி.சாலைங்றது எல்லோருக்குமே தெரிஞ்ச ஊரா மாறியிருக்கு. அதுவே எங்களுக்கு பெரிய சந்தோசம்தான்.’ நாம் பேச்சுக் கொடுத்ததில் பெரும்பாலானோர் இப்படித்தான் சொல்கின்றனர்.
இன்னும் சிலர் மாநாட்டு தினத்தன்று காவல்துறையினர் நெருக்கடியை தவிர்க்க கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்கின்றனர். ‘இடைத்தேர்தல் சமயத்தில் தி.மு.க-வின் பொதுக்கூட்டம் ஒன்று நடந்தது. நெடுஞ்சாலையின் அருகேயே இருப்பதால் கூட்டம் கூடி போக்குவரத்து இடையூறு செய்துவிடுகின்றனர். மேலும், தொண்டர்கள் தங்களின் வாகனங்களையும் வீடுகளின் முன்பாக நிறுத்திவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். காவல்துறை போக்குவரத்தை மாற்றிவிட்டு பார்க்கிங் வசதிகளை முறையாக ஏற்படுத்திக் கொடுத்து மக்களுக்கு இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.’ என்றும் சிலர் கூறினர்.
மக்களின் கருத்துகளை வாங்கிக் கொண்டு ஆஞ்சநேயர் சிலை வரவேற்று நிற்கும் மாநாட்டுத் திடலின் பக்கவாட்டுப் பாதை வழியாக உள்ளே சென்றோம். உள்ளூர் நிர்வாகிகள், தொண்டர்கள் என நிறைய பேர் மாநாட்டுத் திடலுக்கு வந்து ஒரு ரவுண்ட் அடித்து செல்கின்றனர். மாநாட்டு வேலைகளுக்காக உள்ளூரில் இருக்கும் மக்களையே அதிகமாக பயன்படுத்தியிருக்கிறார்கள். டிராக்டர்கள் மற்றும் வேன்களில் காலையிலேயே மக்கள் கூட்டமாக மாநாட்டுத் திடலுக்கு வருகை தருவதை பார்க்க முடிந்தது. அப்படியே உள்ளே சென்றால் மாநாட்டுத் திடலுக்கு 100 அடிக்கு முன்பாகவே பேரிகார்டுகள் அமைத்து தனியார் பவுன்சர்களின் மூலம் வெளியாட்களை தடுத்துவிடுகிறார்கள்.
பத்திரிகையாளர்களுக்கே இதே நிலைதான். நம்மையும் மாநாட்டுத் திடலின் வெளியே வரைத்தான் அனுமதித்தார்கள். ஏன் என்று கேட்டபோது, ‘நீங்கள் பேசாமல் வந்து மழை பெய்வதையும் கம்பு கட்டைகள் தொங்கிக் கொண்டிருப்பதையும் வீடியோ எடுத்து அபாய நிலையில் மாநாட்டுத் திடல், என்ன செய்யப்போகிறார்கள்?’ என இஷ்டத்துக்கு செய்தி வெளியிட்டு விடுகிறீர்கள். அதனால்தான் ஊடகங்களுக்கும் அனுமதி கொடுக்க வேண்டாம் என மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருக்கிறது என்றார்கள். மேலும், மாநாட்டுத் திடல் முழுக்க பவுன்சர்களின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாகவும் பில்டப் செய்தனர்.
துபாயை சேர்ந்த ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் பவுன்சர்கள்தான் விஜய்யின் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படுகிறார்கள். விஜய்யின் கல்வி விருது வழங்கும் விழா, கொடி அறிமுக விழா என விஜய்யின் அத்தனை ஈவென்ட்டுகளுக்கும் அவர்கள்தான் பாதுகாப்பு ஏற்பாடு. இந்த மாநாட்டுக்கும் அவர்களைத்தான் பாதுகாப்புக்காக நியமித்திருக்கிறார்கள். மாநாடு நடைபெறுவதற்கு சரியாக ஒரு வாரத்துக்கு முன்பாக நேற்றிலிருந்து அந்த மாநாட்டுத் திடலை அந்த நிறுவனம் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது. ஊடகங்கள் பறக்கவிட்ட ட்ரோன்களை கூட விரட்டிப் பிடித்து ‘காப்பி ரைட்’ அடித்துவிடுவோம் என கறாராக எச்சரித்தெல்லாம் அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.
ஒரு சில காவலர்கள் மட்டுமே அந்தத் திடல் பகுதியில் கூடியிருந்தனர். அவர்களிடம் விசாரித்த போது `இன்னும் எங்களின் கட்டுப்பாட்டுக்குள் நாங்கள் இந்த மைதானத்தை எடுக்கவில்லை. செட் அமைக்கும் பணிகளெல்லாம் முடிந்த பிறகு, நாங்கள் திட்டங்களை தீட்டி எப்படி பாதுகாப்பு வழங்கலாம் என்பதைப் பற்றியெல்லாம் முடிவெடுப்போம்’ என்றனர்.
த.வெ.க வின் பொதுச்செயலாளர் விக்கிரவாண்டி அருகில்தான் ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருக்கிறார். அருகிலிருக்கும் கோயிலுக்கு சென்று பூஜையை முடித்துவிட்டு காலை 10 மணிக்கு மேல் தினமும் மாநாடு பணிகள் நடைபெறும் இடத்துக்கு வந்துவிடுகிறார். மாநாட்டுப் பந்தலுக்கு அருகேயுள்ள அறையில் நிர்வாகிகளோடு ஆலோசனையில் ஈடுபடும் அவர் மாநாடு நடைபெறும் பந்தலுக்குள் முழுமையாக ஒரு ரவுண்ட் அடித்து அத்தனைப் பணிகளையும் மேற்பார்வையிடுகிறார். நாம் சென்ற அந்த சமயத்தில் மாநாடு விளம்பரங்களை ஏந்திய லோடு வண்டிகளை கொடியசைத்து தொடங்கி வைத்துக் கொண்டிருக்கிறார். அங்கேயே மதியம் வரை இருந்து பணிகளை மேற்பார்வையிட்டுவிட்டுத்தான் விடைபெறுகிறார்.
நாம் செல்ல முடிந்த தூரம் வரைக்கும் சென்று பார்க்கையில் மேடையிலிருந்து நேரடியாக தொண்டர்கள் கூட்டத்துக்குள் விஜய் சென்று அவர்களை காணும் வகையில் ஒரு ரேம்ப் அமைத்திருக்கிறார்கள். அதேமாதிரி, முகப்பில் ஜார்ஜ் கோட்டை வடிவிலான செட் அமைக்கும் வேலைகளும் வேகமாக நடந்துவருகிறது. இன்னும் ஒரு வாரமே இருப்பதால் வேலையாட்கள் கொஞ்ச நேரம் மட்டுமே ஓய்வெடுத்துவிட்டு இரவு பகலாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
மாநாடு நடைபெறவிருக்கும் பகுதி விசாலமானதாக இருந்தாலும் மாநாட்டுப் பந்தலுக்குள் நுழையும் வழிகள் அத்தனை விசாலமாக இல்லை. மேலும், நெடுஞ்சாலையிலிருந்து 100 மீ தொலைவில்தான் மாநாட்டுப் பந்தல் அமைந்திருக்கிறது. தொகுதிக்கு 1500 பேர் வீதம் 4.5-5 லட்சம் பேர் வரை திரள்வார்கள் என த.வெ.க சார்பில் கணிக்கிறார்கள். மாநாட்டுப் பந்தலுக்குள் 75,000 இருக்கைகள் வரைதான் போடவிருப்பதாகவும் சொல்கிறார்கள். அத்தனை லட்சம் பேரும் முறையாக மாநாட்டுப் பந்தலுக்குள் சென்று நிகழ்வை முடித்துவிட்டு நெருக்கடியில்லாமல் திரும்ப வேண்டும். இதை நிர்வகிப்பதுதான் த.வெ.க ஒருங்கிணைப்பாளர்களுக்கு பெரிய தலைவலியாக இருக்கப்போகிறது.