`அரசியலுக்கு, அரசியல் பின்னணி இல்லாத ஒரு லட்சம் இளைஞர்கள்..!’ – பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்

ஒரு லட்சம் இளைஞர்கள்…

உத்தர பிரதேசத்தின் வாராணசியில் நடைபெற்ற விழாவில் ரூ.6,100 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அப்போது மைக் பிடித்தவர், “கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஊடகங்களில் ஊழல்கள் குறித்து மட்டுமே செய்திகள் வெளியாகி வந்தன. கோடிக்கணக்கில் ஊழல், லட்சக்கணக்கில் ஊழல் என்று செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இப்போது நலத்திட்டங்கள் குறித்து மட்டுமே செய்திகள் வெளியாகி வருகின்றன. மக்களின் வரிப்பணம் மக்களுக்காக மட்டுமே செலவிடப்படுகிறது. இதன் காரணமாக சர்வதேச அளவில் நமது நாடு அதிவேகமாக முன்னேறி வருகிறது. இந்திய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த அரசியல் பின்னணி இல்லாத ஒரு லட்சம் இளைஞர்களை அரசியலில் களமிறக்க விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த மத்திய அரசு உறுதி பூண்டிருக்கிறது” என்றார்.

பாஜக

மோடியின் அமைச்சரவையில் 20 வாரிசுகள்

ஆனால் அரசியல் பின்னணி இல்லாதவர்களை களமிறக்குவதாக சொல்லும் மோடியின் அமைச்சரவையில் 20 வாரிசுகள் இருக்கிறார்கள் என்கிறார்கள். “அரசியல் பின்புலம் இல்லாதவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது வரவேற்க கூடிய ஒன்றுதான். ஆனால் மோடியின் அமைச்சரவையிலேயே 20 வாரிசுகள் இருக்கிறார்கள்.” என்கிறார்கள்.

கர்நாடகவின் முன்னாள் முதல்வர் தேவே கௌடவின் மகன் குமாரசாமி தற்போது கனரக தொழில்துறை அமைச்சராக இருக்கிறார். திறன் மேம்பாடு மற்றும் தொழில்துறை அமைச்சராக இருக்கும் ஜெயந்த் சவுத்ரியின் தாத்தா சவுத்ரி சரண் சிங் முன்னாள் பிரதமர். மேலும் இரண்டு முறை உத்தர பிரதேச முதலமைச்சராகவும் இருந்துள்ளார்.

புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சராக இருக்கும் ராவ் இந்திரஜித் சிங்கின் தந்தை ராவ் பிரேந்திர சிங் ஹரியானாவின் முன்னாள் முதல்வர்.

உணவு பதப்படுத்தும் துறை அமைச்சராக இருக்கும் மஸிஹா ரவ்நீத் சிங் பிட்டுவின் தாத்தா பியாந்த் சிங், பஞ்சாப் முன்னாள் முதல்வர்.

இதேபோல் மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து அவரது அமைச்சரவையில் இருந்தவர் ராம் விலாஸ். இவரது மக்கள் சிராஜ் பஸ்வானுக்கு உணவு பதப்படுத்தும் துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

தகவல்தொடர்பு துறை அமைச்சர் பதவி ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரது தந்தை மாதவ்ராவ் சிந்தியாவும் விமான போக்குவரத்து துறை, சுற்றுலா, மனிதவள மேம்பாடு துறைகளின் அமைச்சராக இருந்துள்ளார்.

நட்டா

சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடுவின் தந்தை கிஞ்சரப்பு எர்ரன் நாயுடுவும் முன்னாள் அமைச்சர்தான்.

வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலின் தந்தை வேத் பிரகாஷ் கோயல், கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தந்தை தேவேந்திர பிரதான், பாராளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜூவின் தந்தை ரின்சின் கரு, சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவின் மாமியார் ஜெயஶ்ரீ பானர்ஜி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஜிதின் பிரசாதாவின் தந்தை ஜிதேந்திர பிரசாதா, சுற்றுசூழல்துறை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங்-ன் தந்தை மகாராஜ் ஆனந்த் சிங், மத்திய குழந்தைகள் மற்றும் மகளிர் நலத்துறை இணை அமைச்சராக உள்ள அனுப்பிரியா பட்டேல்-ன் தந்தை சோனே லால் பட்டேல் ஆகியோர் முக்கிய பொறுப்புக்களில் இருந்திருக்கிறார்கள்.

மேலும் அமைச்சர்கள் நிகில் கட்சே, கம்லேஷ் பஸ்வான், சாந்தனு தாகூர், அன்னபூர்ண தேவி, விரேந்திர குமார் கதிக் ஆகியோர் அரசியல் பின்புலம் கொண்டவர்கள்தான்” என்றனர்.

`மத்திய அரசின் தணிக்கை துறை…’

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், “ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ரூ.22.44 கோடி, துவாரகா சாலை விரிவாக்க திட்டத்தின்கீழ் ஒரு கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்கும் செலவான ரூ.18 கோடியை ரூ.250 கோடியாக அதிகரிப்பு, அயோத்தியா மேம்பாட்டு திட்டத்தில் ரூ.8 கோடி இழப்பு, பரனூர் உள்பட 5 சுங்கச்சாவடிகளில் ரூ.137 கோடி முறைகேடு, இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தில் விமான இயந்திரம் வடிவமைக்கும் திட்டத்தில் ரூ.159 கோடி இழப்பு, ஊரக வளர்ச்சித்துறையின் ஓய்வூதிய திட்ட நிதியை மத்திய அரசு தனது விளம்பரத்துக்கு முறைகேடாக பயன்படுத்தி உள்ளது என பாஜக ஆட்சியில் மொத்தமாக ரூ.7.50 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது என மத்திய அரசின் தணிக்கை துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை தெரிவித்த அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். பிறகு எப்படி அதிகாரிகள் துணிச்சலாக வெளியில் பேச முடியும்?.

குபேந்திரன்

வெறுப்பு அரசியலால்தான்…

எனவேதான் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் நடந்திருக்கிறது. பா.ஜ.க ஆட்சியில் இல்லை என சொல்கிறீர்கள். குடும்ப ஆட்சி இல்லாத இடத்தில் ஊழல் இல்லை என உங்களால் சொல்ல முடியுமா?. கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருந்தபோது 45% ஊழல் நடந்தது பேசு பொருளானது. வெறுப்பு அரசியலால்தான் உத்திரபிரதேசத்தில் கூட பாதி இடங்களுக்கு மேல் பா.ஜ.க-வுக்கு தோல்வி ஏற்பட்டது. 2024 தேர்தலில் கிடைத்த வெற்றி 2029-ம் ஆண்டில் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான். ஒவ்வொரு அரசியல் கட்சியும் இளைஞர்களை ஈர்ப்பதற்கு கவர்ச்சியாக பேசுவார்கள். சமையல் எரிவாயு மானியம், வாகன எரிபொருள் விலை குறைப்பு, இந்திய பொருளாதாரத்தை உயர்த்துகிறேன் என்றெல்லாம் மோடி பல காலமாக பேசினார். ஆனால் இதில் ஒன்றுகூட நடக்கவில்லை. அதுபோல ஒரு லட்சம் இளைஞர்கள் விஷயத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb