தமிழ்நாடு ஆளுநர் கலந்துகொண்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலில் “தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்” என்ற வரி நீக்கப்பட்டது அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது.
இது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தே இருக்காது” எனக் கருத்து தெரிவித்தது அதிர்சியை ஏற்படுத்தியது.
இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சீமான் தமிழ்த்தாய் வாழ்த்து பற்றிய கேள்வியை எதிர்கொண்டார். அப்போது, “நான் ஆட்சிக்கு வந்தால் பாரதிதாசன் எழுதிய பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக மாற்றுவேன். தமிழகத்திலும் புதுச்சேரியிலும் ஒரே தமிழ்த்தாய் வாழ்த்து இருக்கட்டும்” என்று பேசினார்.
பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய ‘வாழ்வினில் செம்மையை செய்பவள் நீயே’ என்று தொடங்கும் பாடலே புத்துச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்தாக இருக்கிறது.
புதுச்சேரி தமிழ்தாய் வாழ்த்தின் வரிகள்:
வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே
மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே!
வீரனின் வீரமும் வெற்றியும் நீயே!
தாழ்ந்திடு நிலையினில் உனைவிடுப்பேனோ
தமிழன் எந்நாளும் தலைகுனிவேனோ
சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய்
தோன்றுடல் நீ உயிர் நான் மறப்பேனோ?
செந்தமிழே! உயிரே! நறுந்தேனே
செயலினை மூச்சினை உனக்களித்தேனே
நைந்தாய் எனில் நைந்துபோகும் என் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்கும் தானே!
முந்திய நாளினில் அறிவும் இலாது
மொய்த்த நன் மனிதராம், புதுப்புனல் மீது
செந்தாமரைக் காடு பூத்தது போல
செழித்தஎன் தமிழே ஒளியே வாழி
இந்தப் பாடல் பாரதிதாசன் எழுதிய இசையமுது என்ற தொகுப்பின் இரண்டாம் பகுதியின் முதல் பாடலாக இடம் பெற்றிருந்தது.
இசையமுது இரண்டாம் தொகுதி நூல், 1952ம் ஆண்டு வெளியானது குறிபிடத்தக்கது.
அந்தக் காலத்தில் மேடைகளில் பாடுவதற்கென்றே பாரதிதாசன் பல பாடல்களை எழுதியிருக்கிறார். அப்படி எழுதப்பட்டதே இந்த பாடலும்.
பாரதிதாசனின் மறைவுக்குப் பிறகு 1971ம் ஆண்டு முதல் இந்த பாடலை அரசு விழாக்களிலும், பள்ளிகளிலும் பாட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 1991 ஆம் ஆண்டில், இசையமைப்பாளர் எல். கிருஷ்ணன் இந்த பாடலுக்கு இசையமைத்தார்.