சொதப்பலில் முடிந்த நிர்வாகிகள் சந்திப்பு, பிசுபிசுத்துப் போன நடைப்பயணம் என தமிழக காங்கிரஸில் ஏற்கெனவே ஏகப்பட்ட சர்ச்சைகள் நிலவி வரும் சூழலில், ‘தனது ஆதரவாளர்களை மாவட்ட தலைவர்களாக்க துடித்து வருகிறார், செல்வப்பெருந்தகை’ என புது சர்ச்சையும் வெடித்துக் கிளம்பியிருக்கிறது!
இது குறித்து நம்மிடம் பேசிய சத்தியமூர்த்தி பவன் சீனியர்கள், “தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை பொறுப்புக்கு வந்த கையோடு முன்னாள் மாநிலத் தலைவர்களின் ஆதரவாளர்களை ஓரம்கட்டி வருகிறார். இது நிர்வாகிகள் பலரைக் கொதிப்படையச் செய்திருக்கிறது. இந்தச் சூழலில்தான் ஒருபடி மேலே சென்றவர் அனைத்து முடிவுகளையும் எடுப்பதற்கு தனக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது எனத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார். அதாவது சென்னை, சத்தியமூர்த்தி பவனில் கடந்த 19.9.2024 அன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் மாநில, மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளை மாற்றியமைப்பதற்கு செல்வப்பெருந்தகைக்கு இக்கூட்டம் அதிகாரம் அளிக்கிறது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு மாவட்ட தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனாலும் தலைமை கண்டுகொள்ளவில்லை.
அந்த தீர்மானத்துக்குச் செயல்வடிவம் கொடுக்கும் வகையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தனது ஆதரவாளர்களைப் பதவிக்குக் கொண்டுவரத் திட்டம் தீட்டியிருக்கிறார். அதாவது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் 77 கட்சி மாவட்டங்கள் இருக்கின்றன. இதில், தென்சென்னை மேற்கு ஈஸ்வர பிரசாத், காஞ்சிபுரம் அளவூர் நாகராஜன், திருநெல்வேலி கிழக்கு கே.பி.கே.ஜெயக்குமார் ஆகியோர் மரணமடைந்துவிட்டனர். முன்னதாக கடந்த 2022-ம் ஆண்டு கே.எஸ்.அழகிரி மீது ஏற்பட்ட அதிருப்தியால் தூத்துக்குடி வடக்கு காமராஜ், ராமநாதபுரம் செல்லத்துரை ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் அப்துல் கனி ராஜா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர், எஸ்.சி, எஸ்.டி பிரிவின் மாநில தலைவர் என இரண்டு பதவிகளில் ரஞ்சன்குமார் இருந்தார். அழகிரியின் தீவிர ஆதரவாளர் என்பதால் பெருந்தகை பதவிக்கு வந்ததும் மாவட்ட தலைவர் பதவியிலிருந்து ரஞ்சன்குமாரை நீக்கினார். இதனால் ஏழு இடங்களில் மாவட்ட தலைவர் பதவிகள் காலியாக இருக்கின்றன. இங்கெல்லாம் தனது ஆதரவாளர்களைக் கொண்டுவரப் பெருந்தகை முயன்று வருகிறார். இதேபோல் சென்னை, திருச்சி, விருதுநகர், வேலூர் என 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தனது ஆதரவாளர்களைக் கொண்டுவர முடிவு செய்திருக்கிறார். இதனால் கட்சியில் பெரிய பிரச்னை வெடிக்கும்” என்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் இனியன் ராபர்ட்டிடம் விளக்கம் கேட்டோம், “தலைவர் செல்வப்பெருந்தகை பதவிக்கு வந்தது முதல் கோஷ்டி அரசியல் செய்யாமல் இருக்கிறார். அவரது ஆதரவாளர்களுக்கு எந்த முக்கிய பதவியும் கொடுக்கவில்லை. பிற அணிகளைச் சேர்ந்தவர்கள்தான் முக்கிய பதவிகளில் இருக்கிறார்கள். கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்பதற்காக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். அதனடிப்படையில் தகுதியானவர்களுக்குப் பதவி வழங்கப்படும்” என்றார்.