மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு அடுத்த மாதம் 20-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கு ஆளும் பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. நேற்று முன் தினம் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் அஜித் பவார், தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் டெல்லி புறப்பட்டு சென்றனர். இவர்கள் டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினர். தொகுதி பங்கீடு இன்னும் அறிவிக்கப்படவில்லை. வரும் 22-ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. இதையடுத்து இன்று பா.ஜ.க 99 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை அறிவித்து இருக்கிறது. இதில் நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் தேவேந்திர பட்னாவிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 151 தொகுதிகளில் பா.ஜ.க போட்டியிடுவதாக அறிவித்து இருக்கிறது. மாநில பா.ஜ.க தலைவர் சந்திரசேகர் பவன்குலே காமாதி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பெரும்பாலான எம்.எல்.ஏ-க்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சயான் கோலிவாடாவில் மீண்டும் கேப்டன் தமிழ்செல்வத்திற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர தானே தொகுதியில் சஞ்சய் முகுந்த் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தானே தொகுதி தங்களுக்கு வேண்டும் என்று சிவசேனா(ஷிண்டே) கேட்டுக்கொண்டிருந்தது. ஆனால் அதற்கும் சேர்த்து பா.ஜ.க வேட்பாளரை அறிவித்து இருக்கிறது. ஐரோலி தொகுதியில் கணேஷ் நாயக்கும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கொலாபாவில் சபாநாயகர் ராகுல் நர்வேகரும், மலபார் ஹில் தொகுதியில் மங்கல் பிரபாத் லோதாவும், பாந்த்ரா மேற்கு தொகுதியில் மும்பை பா.ஜ.க தலைவர் ஆசிஷ் ஷெலாரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் பா.ஜ.க-வில் சேர்ந்த முன்னாள் முதல்வர் அசோக் சவானின் மகளுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சுதிர் முங்கந்திர்வாருக்கு பல்லர்புர் தொகுதியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 99 பேரில் 13 பேர் பெண்கள் ஆவர்.
அறிவிக்கப்பட்டுள்ள தொகுதிகள் அனைத்திலும் ஏற்கெனவே கடந்த முறை பா.ஜ.க வெற்றி பெற்றவையாகும். வேட்பாளர் பட்டியல் குறித்து பா.ஜ.க தலைவர்களிடம் பேசியபோது, தொகுதி பங்கீடு முடிந்துவிட்டது என்று தெரிவித்தனர். மற்றொருபுறம் எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடியில் தொகுதி பங்கீட்டில் சிக்கல் நீடித்து வருகிறது. காங்கிரஸ் கோட்டையாக கருதப்படும் விதர்பாவில் தங்களுக்கு தொகுதிகள் ஒதுக்கவேண்டும் என்று உத்தவ் தாக்கரே பிடிவாதம் பிடித்துக்கொண்டிருக்கிறார். இதனால் தொகுதி பங்கீடு இறுதியாவதில் சிக்கல் நீடித்து வருகிறது.