திருவண்ணாமலை மாவட்டத்தில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை வருகைத் தந்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அவருக்கு வழிநெடுகிலும் தி.மு.க-வினர் வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து, திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற `திருக்கார்த்திகை தீபத்திருவிழா’ முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டார் உதயநிதி ஸ்டாலின். இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள். ஆய்வுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், “திருவண்ணாமலை மாநகரில், கார்த்திகை தீபத்திருவிழா டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. டிசம்பர் 10-ம் தேதி திருத்தேர் ஊர்வலம் நடைபெறுகிறது. அன்றைய தினம் 6 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபத் திருவிழா டிசம்பர் 13-ம் தேதி நடைபெறவிருக்கிறது. அன்று மட்டும் 40 லட்சத்தில் இருந்து 50 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி, இன்றைய தினம் பக்தர்கள் கூடும் இடங்களில் முதலமைச்சரின் உத்தரவின்பேரில் கள ஆய்வு மேற்கொண்டோம். அதைத்தொடர்ந்து, தீபத்திருவிழாவுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பாகவும் உயர்நிலை ஆய்வுக்கூட்டத்தை நடத்தியிருக்கிறோம். தி.மு.க அரசு அமைந்ததில் இருந்து, திருவண்ணாமலை மாநகரில் பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு துறைகள் சார்பாக 30 கோடி ரூபாய்க்கு மேல் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பக்தர்கள் எந்த சிரமத்துக்கும் ஆளாகாமல் இருப்பதற்காக குடிநீர் வசதி, நடைப்பாதை வசதி, வடிகால் வசதி, சுகாதார வசதிகளை மேம்படுத்தும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்றுள்ளன.
மேலும், மக்களின் பாதுகாப்புக்காக முக்கிய இடங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் அதிகமாகப் பொருத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவார்கள் என்பதால், முதலுதவி மையங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. 400-க்கும் அதிகமாக நடமாடும் கழிவறை வசதிகளும் செய்து கொடுக்கப்படும். கிரிவலப் பாதையில் பலர் அன்னதானம் வழங்குவார்கள். எனவே, உணவுப் பாதுகாப்புத்துறை மூலமாக உணவின் தரத்தை ஆய்வு செய்யவும் தனியாக அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். உள்ளாட்சி அமைப்புகளின் சார்பாக விளக்கு வசதிகள், தற்காலிகப் பேருந்து நிலையங்கள், பேருந்து சேவைகளும் ஏற்படுத்தித் தரப்படும்.
நம்முடைய முதலமைச்சர் ரூ.37 கோடி மதிப்பீட்டில் திருவண்ணாமலை கோயிலுக்காக `மாஸ்டர் பிளான்’ திட்டங்களையும் அறிவித்துள்ளார். கோயிலுக்குள் காத்திருப்பு மண்டபம், அன்னதானக் கூடம், சமூக நலக்கூடம், கோயில் குளம் தூர்வாருவது போன்ற ஏராளமான பணிகள் விரைவில் தொடங்கப்படும். இவற்றில் சிலப் பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுவிட்டன. அடுத்த 6 மாதங்களுக்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்படும். கூடுதலாக, ரூ.5 கோடி மதிப்பீட்டில் கோபுரங்கள் மற்றும் கோயில் விமானங்களில் நிரந்தர மின்னொளி வசதி ஏற்படுத்தித் தரப்படும். தீபத்திருநாளில் பக்தர்கள் பாதுகாப்போடும், மகிழ்ச்சியோடும் வந்துசெல்லும் வகையில், அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது’’ என்றார் விரிவாக.
தொடர்ந்து அவரிடம், அண்ணாமலையார் கோயிலுக்கு `யானை’ கொண்டு வருவது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “வனத்துறை சட்டத் திட்டங்களுக்குஉட்பட்டே கோயிலுக்கு யானையைக் கொண்டு வர முடியும். இப்போதைக்கு வனத்துறை சட்டத்தின்படி, யானையைக் கொண்டுவரும் சூழல் இல்லை’’ என்றார்.
ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பு கிரிவலப் பாதையில் பக்தர்களின் வசதிக்காகச் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளையும் ஆய்வு செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். கிரிவலப் பாதையில் கட்டப்பட்டு வரும் நவீன சுகாதார வளாக கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி மையத்திலும் ஆய்வு மேற்கொண்டார். மேலும், அங்கு ரூ.1.20 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் 6 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி மையங்களுக்கானப் பணிகளையும் விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். இதையடுத்து, மேம்படுத்தப்பட்டு வரும் அருணகிரிநாதர் மணிமண்டபத்துக்கானப் பணிகள், பக்தர்கள் தங்கும் இடம், பேவர் பிளாக் மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்தார்.
இதையடுத்து, திருவண்ணாமலையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாணவியர் விளையாட்டு விடுதியிலும் ஆய்வு மேற்கொண்டார் உதயநிதி ஸ்டாலின். மாணவியருக்கு வழங்கப்படும் உணவு மற்றும் உணவுத் தயாரிப்பதற்கான மளிகைப் பொருள்களின் இருப்பு உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்து, அவற்றின் தரம் குறித்து மாணவிகளிடமே கேட்டுத் தெரிந்து கொண்டார். அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் திடீர் ஆய்வுக்குச் சென்றார். பொது நோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு ஆகியவற்றைப் பார்வையிட்டு, அங்கு சிகிச்சையில் உள்ளோரிடமும் நலம் விசாரித்தார் உதயநிதி ஸ்டாலின். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், மருத்துவமனையின் அன்றாட செயல்பாடுகள் குறித்தும் மருத்துவர்கள் விளக்களித்தார்கள்.
அப்போது, “திருவண்ணாமலை மாவட்டம் மலைக் கிராமங்கள் நிறைந்த பகுதி என்பதால், பாம்புக்கடி போன்ற பாதிப்புகளோடு வருவோருக்கான மருந்துகள் போதிய அளவில் இருப்பு உள்ளதா…?’’ என்பதையும் கேட்டறிந்தார் உதயநிதி ஸ்டாலின். இதையடுத்து, அனைவருக்கும் தரமான சிகிச்சைக் கிடைப்பதை உறுதி செய்யவும் அதிகாரிகளிடமும், மருத்துவப் பணியாளர்களிடமும் அறிவுறுத்திவிட்டு புறப்பட்டார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.