Udhayanidhi : `அக்காவும் இந்திக்கு வக்காலத்து வாங்குகிறார்!’ – தமிழிசைக்கு உதயநிதி ஸ்டாலின் பதில்

“ஒன்றிய அரசின் ‘டி.டி. தமிழை’ப்போல் – அக்காவும் இந்திக்கு வக்காலத்து வாங்கும் துரோகத்தை, தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்!” என்று தமிழிசைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டிருக்கிறார்.

தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, “தம்பி உதயநிதி ஸ்டாலின், நேற்று கிரிவலம் போயிருக்கிறார். பவன் கல்யாண் சொன்னது உதயநிதி மனதில் தைத்துவிட்டது என்று நினைக்கிறேன். தவறுகளைத் திருத்திக்கொண்டு கிரிவலம் போக ஆரம்பித்திருக்கிறார் என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி” எனத் தெரிவித்தார். மேலும், “தமிழ்த்தாய் வாழ்த்தில் சில வரிகள் விடுபடுவது எனக்கும் ஒப்புதல் கிடையாது.

தமிழிசை செளந்தரராஜன்

தமிழ்த்தாய் வாழ்த்து முழுமையாகப் பாடப்பட வேண்டும் என்பதில் நானும் உறுதியாக இருக்கிறேன். ஆனால், உள்நோக்கம் இல்லாமல் நடந்த ஒன்றுக்கு உள்நோக்கம் கற்பித்து பூதாகரமாக அரசியல் ஆக்குவது தவறு. முதல்வர் செல்லும் ஒரு நிகழ்வில் யாரோ தவறாகப் பாடினால் அதற்கு முதல்வர் பொறுப்பாக முடியாது” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழிசைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உதயநிதி ஸ்டாலின், “இந்நாள் ஆரியநர் செய்யும் சூழ்ச்சிகளை சுட்டிக்காட்டினால், முன்னாள் ஆளுநர் அக்காவுக்கு கோபம் வருகிறது! அக்கா அவர்களே,

திருவண்ணாமலையில் ‘கிரி’வலம் வரும் பக்தர்களுக்கு எல்லா வசதிகளும் ‘சரி’யாக இருக்கிறதா என்று ஆய்வு தான் செய்தோம். நீங்கள் குதூகலிப்பது போல அது கிரிவலம் அல்ல – ‘சரி’ வலம். ஓடாத தேரை ஓட வைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். ஆயிரக்கணக்கான கோவில்களுக்கு திருப்பணிச் செய்தவர் எங்கள் முதல்வர். ‘எல்லோருக்கும் எல்லாம்’ என உழைக்கும் எங்களைப் போன்ற மக்கள் பிரதிநிதிகளைப் பார்த்தால், மக்களால் பல முறை நிராகரிக்கப்பட்ட அக்காவுக்கு கோபம் வரத்தான் செய்யும்.

நியாயம் தானே. நீங்கள் எவ்வளவு சத்தமிட்டாலும், அரசியலும் – ஆன்மீகமும் தமிழ்நாட்டில் என்றைக்கும் கலக்காது. ஒன்றிய அரசின் ‘டி.டி. தமிழை’ப்போல் – அக்காவும் இந்திக்கு வக்காலத்து வாங்கும் துரோகத்தை, தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்” என்று பதிவிட்டிருக்கிறார்.