2 குழந்தைகளுடன் விபரீத முடிவெடுத்த பெண்; காவலரான கணவரிடம் விசாரணை – சேலத்தில் சோகம்!

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள புறக்காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருபவர் கோவிந்தராஜ் (வயது 38). இவரது மனைவி பெயர் சங்கீதா (வயது 22). இவர்களுக்கு தர்ஷினி (வயது 4), ரோகித் (வயது 8) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களில் ரோகித் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். தர்ஷினி எல்.கே.ஜி படித்து வந்தார்.

கோவிந்தராஜ் அவரது மனைவி குழந்தைகளுடன் கொண்டலாம்பட்டி காவல் நிலையம் அருகே உள்ள காவலர்கள் குடியிருப்பில் வசித்து வந்தார். கடந்த சில நாள்களாக கணவன் மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில் நேற்று இரவு சங்கீதா அவரது இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, பின்னர் அவரும் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

மரணம்

இதனையறிந்த அருகில் வசிப்பவர்கள் உடனே கொண்டலாம்பட்டி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸார் விரைந்து வந்து மூன்று சடலங்களை மீட்டு உடற்கூறாய்வு செய்ய சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூன்று பேர் இறந்ததால் கொண்டலாம்பட்டி போலீஸ் உதவி கமிஷனர் முரளியிடம் சம்பவம் தொடர்பாக விசாரிக்குமாறு, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினவு உத்தரவிட்டு உள்ளார்.

இந்த நிலையில் தலைமைக் காவலர் கோவிந்தராஜ் நேற்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனால் அவரை கொண்டலாம்பட்டி காவல் நிலைய போலீஸார் அழைத்து சென்று தற்போது கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். சங்கீதா இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டதால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் திரளாக மருத்துவமனைக்கு வந்துள்ளனர். இது தவிர சங்கீதாவின் தந்தை, கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலர் கோவிந்தராஜ் மீது புகார் செய்துள்ளார்.

சேலம்

குடும்பத் தகராறு காரணமாகத்தான் தனது மகள் இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இதனால் தலைமைக் காவலர் கோவிந்தராஜிடம் விசாரிக்க வேண்டும் என மனு கொடுத்துள்ளார். இதனையடுத்து தற்போது கோவிந்தராஜிடம் விசாரணை நடக்கிறது.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.