`தமிழகத்தில் இந்தி மாத கொண்டாட்டம்’ – விழாவை நிறுத்த திமுக மாணவரணி போராட்டம்

இந்தி மாத கொண்டாட்டம்!

சென்னை மெரினா கடற்கரை அருகில் உள்ள சிவானந்த சாலையில் டி.டி.தமிழ் தொலைக்காட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த சென்னை தொலைக்காட்சியின் பொன்விழா இன்று (18.10.2024) கொண்டாடத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்தவிழாவுடன் சேர்ந்து இந்தி மாத கொண்டாட்டத்தின் நிறைவு விழாவும் கொண்டாடப்பட இருப்பதாக அறிவிப்புகள் வெளியானது. மேலும், இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

திமுக மாணவரணி போராட்டம்

இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்தது. மேலும், “தமிழகத்தின் ஆளுநராக இருப்பவர், தமிழ் மொழியைப் புறக்கணிக்கும் ‘இந்தி மாத கொண்டாட்டத்தில்’ பங்கேற்பது செம்மொழித் தமிழ், தமிழக மக்களைப் புறக்கணிக்கும் செயலக இருக்கும். இந்தி நாள் கொண்டாட்டத்தின் மூலம் இந்தியைத் திணிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று சொல்லி மத்திய அரசைக் கண்டித்து திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்தது.

முதல்வர் வேண்டுகோள்!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் இந்தி மாத நிறைவு விழா கொண்டாடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லி பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதில், “சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா நிகழ்ச்சிகளுடன் இணைந்து 18.10.2024 அன்று நிறைவடையும் ‘இந்தி மாத’ நிறைவு விழா நடைபெறுவது குறித்து பிரதமரின் கவனத்துக்குக் கொண்டுவரவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். அவ்விழாவுக்குத் தமிழக ஆளுநர் தலைமை தாங்கி நடத்தவிருக்கிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்த மொழிக்கும் தேசிய மொழி என்ற அந்தஸ்தை வழங்கவில்லை. சட்டமியற்றுதல், நீதித்துறை மற்றும் தகவல் தொடர்பு போன்ற அலுவல் நோக்கங்களுக்காக மட்டுமே இந்தி மற்றும் ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது.

முதல்வர் ஸ்டாலின்

இந்தியா போன்ற பல்வேறு மொழிகள் பேசும் நாட்டில், இந்திக்குத் தனி இடம் அளிப்பதும், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மாதம் கொண்டாடப்படுவதும் பிற மொழிகளைச் சிறுமைப்படுத்தும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. எனவே, இந்தி பேசாத மாநிலங்களில் இதுபோன்ற இந்தி மொழி சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவதைத் தவிர்க்கலாம். அல்லது மத்திய அரசு இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த விரும்பினால், அந்தந்த மாநிலங்களின் உள்ளூர் மொழிக்கான மாதக் கொண்டாட்டங்களையும் அதேபோல் கொண்டாட வேண்டும். மேலும், இந்திய அரசு செம்மொழியாக அங்கீகரித்துள்ள அனைத்து மொழிகளின் சிறப்பையும் செழுமையையும் கொண்டாட இதேபோன்று சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்று பரிந்துரைக்கிறேன். இது அனைவரிடையேயும் ஒரு சுமுகமான உறவை மேம்படுத்தும்” என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

திமுக போராட்டம்!

திமுக மாணவரணி சார்பில் சென்னை தொலைக்காட்சி அலுவலகம் முன்பாக போராட்டம் நடைபெற்றது. இதில் மாணவரணிச் செயலாளர் எழிலரசன், தலைவர் ராஜீவ்காந்தி உள்ளிட்ட மாணவரணி நிர்வாகிகள், திமுக மூத்த நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். போராட்டத்தில் மத்திய பாஜக அரசைக் கண்டித்துக் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மாணவரணிச் செயலாளர் எழிலரசன், “மோடி அரசு இந்தியை எல்லா வழியிலும் திணிப்போம் என்று முனைப்புக் காட்டுகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்தியைத் திணிக்கும்போதெல்லாம் திமுகவும், தமிழ்நாடும், தமிழ் அறிஞர்களும், மாணவர்களும் தொடர்ந்து எதிர்த்துக்கொண்டிருக்கிறது. தமிழ் உட்பட பல்வேறு மொழிகளும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. . இந்தி, ஆங்கிலம் இரண்டு மொழிகளும் அலுவல் மொழி மட்டுமே. இந்தியாவில் எந்த மொழியும் தேசிய மொழி கிடையாது. அப்படியான நிலையில் இந்தியை மட்டும் இந்தியாவின் மொழியாகக் கொண்டாட விரும்புகிறது மோடி அரசு.

செயலாளர் எழிலரசன்

இந்தி தேசிய மொழி என்ற பிம்பத்தை ஏற்படுத்த முன்னிற்படுகிறது. என்ன என்ன வாய்ப்பிருக்கிறதோ அவை அனைத்தின் வழியாகவும் இந்தியைத் திணிக்க முனைப்புக் காட்டுகிறது. இந்தியை விரும்பும், இந்தியை மொழியாகக் கொண்டிருக்கும் மாநிலத்தில் இந்த விழாவை நடத்தலாம். தமிழை உயிருக்கும் மேலாகத் தமிழர்களிடம், தமிழகத்தில் வேண்டுமென்றே இந்த விழாவை நடத்துகிறார்கள். இந்தியைத் திணிப்பதும் அரசியலமைப்பு சட்டத்துக்கு, மொழி உரிமைக்கு, பன்முகத்தன்மைக்கு விரோதமானது. அந்தந்த மாநில மொழியில் விழா கொண்டாடுவதே சரியாக இருக்கும். அதுவே நாட்டின் பன்முகத்தன்மையை உறுதிப்படுத்தும். சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் இன்று நடைபெறும் பொன்விழா நிகழ்ச்சியுடன் இந்தி மாத நிறைவு விழாவை நடத்த முனைப்புக் காட்டப்படுகிறது. அந்த விழாவில் ஆளுநர் கலந்து கொள்ளவிருக்கிறார். மாணவரணி சார்பில் எங்கள் தலைவரின் வழிகாட்டுதலுடன் இந்த போராட்டம் நடைபெற்றது” என்றார் விரிவாக.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb