திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஜோலார்பேட்டை ரயில் நிலையம் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை செல்லும் முக்கிய ரயில்கள் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை கடந்துதான் செல்லும். தினமும் 190-க்கும் மேற்பட்ட ரயில்கள் நின்று செல்கின்றன.
தமிழகத்தின் மிகப்பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாக விளங்கும் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் அடிப்படை வசதி இல்லாமல், சுகாதார கேடாக உள்ளது என்று பயணிகள் கவலையுடன் கூறுகின்றனர்.
ஆண்கள், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த ரயில் நிலையம் வந்துசெல்கின்றனர். இருப்பினும், இந்த ரயில் நிலையத்தில் கழிவறை, குடிநீர், கேன்டீன் வசதி, ஓய்வறை போன்ற பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லை.
மேலும், ரயில் நிலையத்தில் பயணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் அடிக்கடி குடிநீர் வராமல் போய்விடுவதாகவும் கூறப்படுகிறது. முக்கியமாக இங்கு பொதுக் கழிவறை இல்லாததால் இங்கு வரும் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். சிலர் ஆங்காங்கே வெட்டவெளியில் சிறுநீர் கழிப்பதால் பலரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
இதனால், இங்கு வரும் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் எளிதில் நோய் பரவும் அபாயம் உருவாகியிருக்கிறது. இது குறித்து இங்கு வந்துசெல்லும் ஒரு பயணியிடம் பேசியபோது, `இந்த ரயில் நிலையத்தில் பத்து நிமிடங்களுக்கு ஒரு ரயில், பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு பேருந்து வருகிறது. ஆனால், இதெல்லாம் இருந்து என்ன பயன்? அவசரத்துக்கு ஒரு கழிவறை இல்லையே’ என்று அவர் வேதனையடைந்தார். அதேபோல், பெண் பயணி ஒருவர், `இவ்வளவு மக்கள் வந்து செல்லும் இடத்தில் அடிப்படையாக ஒரு கழிவறை கூட இல்லையென்றால் எப்படி. பெண்கள் நாங்களெல்லாம் எங்கே செல்வது?’ என ஆதங்கப்பட்டார்.
இவர்களைப் போல மக்கள் பலரும் தினமும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். “அதிகாரிகள் உடனடியாக இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது வருகின்றோம். ஆனால், ரயில்வே நிர்வாகம் இந்த கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்குமா? என்று தெரியவில்லை” என்கின்றனர் பொதுமக்கள்.