மகாராஷ்டிராவில் அடுத்த மாதம் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு பா.ஜ.க கூட்டணிகள் கட்சிகள் தொகுதி பங்கீட்டில் ஈடுபட்டுள்ளன. பல சுற்றுப்பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் தொகுதி பங்கீட்டில் ஒருமித்தக் கருத்து எட்டப்படாமல் இருக்கிறது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தனது சிவசேனா கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் கேட்டு நிர்ப்பந்தம் செய்து கொண்டிருக்கிறார். இதனால் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது. இது குறித்து மகாராஷ்டிரா பா.ஜ.க தலைவர் சந்திரசேகர் பவன்குலே அளித்த பேட்டியில், ”தொகுதி பங்கீட்டில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சலுகை காட்டவேண்டும். பா.ஜ.க தேசிய கட்சி, அதோடு பா.ஜ.க-விற்கு தற்போது 105 எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர். எனவே வாரியங்களில் பா.ஜ.க-விற்கு கூடுதல் இடங்கள் ஒதுக்கப்படுவது அவசியம். தொகுதி பங்கீட்டில் இருக்கும் சிக்கல் உடனே தீர்க்கப்படவேண்டும். இதன் மூலம் பிரசாரத்தை தீவிரப்படுத்த முடியும். பா.ஜ.க ஏற்கெனவே மாநிலம் முழுவதும் கணக்கெடுப்பு நடத்தி இருக்கிறது.
அக்கணக்கெடுப்பு அறிக்கை கட்சி தலைமையிடம் தாக்கல் செய்யப்படும். அதன் அடிப்படையில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும். சிவசேனாவுடன் சில தொகுதிகளை மாற்றிக்கொள்ள இருக்கிறோம்” என்றார். மத்திய அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் மும்பை வந்திருந்த போது முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அவரை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேசினார். இந்த சந்திப்பின்போது முதல்வர் பதவியை பா.ஜ.க தியாகம் செய்ததை அமிஷ் ஷா ஏக்நாத் ஷிண்டேயிடம் சுட்டிக்காட்டினார். உத்தவ் தாக்கரே அரசை கவிழ்த்த பிறகு பா.ஜ.கவின் தேவேந்திர பட்னாவிஸ்தான் முதல்வராக பதவியேற்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.
எனவே வரும் தேர்தலில் பா.ஜ.க 150 முதல் 160 தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. சிவசேனாவிற்கு தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்து கொடுக்கவும் பா.ஜ.க திட்டமிட்டுள்ளது. முன்னதாக பா.ஜ.க கூட்டணி அரசு இரண்டரை ஆண்டில் செய்த சாதனைகள் குறித்த அறிக்கை புத்தகத்தை வெளியிட்டது. அதில் பா.ஜ.க கூட்டணியால்தான் மும்பையில் 3-வது மெட்ரோ ரயில் திட்டம் அமலுக்கு வந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிடப்போவதாக தெரிவித்து இருக்கிறது.