நடிகர் விஜய், `தமிழக வெற்றிக் கழகம்’ என தன்னுடைய கட்சியின் பெயரை அறிவித்ததில் தொடங்கி, கட்சியின் கொடி, அதில் இடம்பெற்ற சின்னம் என அனைத்தும் பேசு பொருளாகி வருகிறது. அந்த வரிசையில் அவரது மாநாடும் தற்போது இடம்பெற்றுவிட்டது. தவெக-வின் முதல் அரசியல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலையில் கடந்த செப்டம்பர் மாதம் 23-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் காவல்துறை எழுப்பிய கேள்விகள், காட்டிய கெடுபிடிகளால் அக்டோபர் 27-ம் தேதிக்கு மாநாட்டை மாற்றியது விஜய் தரப்பு. அதன்படி விக்கிரவாண்டியில் சில தினங்களுக்கு முன்பு மாநாட்டுப் பணிகள் தொடங்கப்பட்டது. அப்போதே வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தெரிந்தபோதும், திட்டமிட்டபடி மாநாடு நடக்க வேண்டும் என்று உற்சாகமாக பணிகளை தொடங்கினர் த.வெ.க-வினர்.
கடந்த இரண்டு நாட்களாக விழுப்புரத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையிலும், மாநாட்டுப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விஜய் மாநாட்டு மேடைக்கு காரில் செல்வதற்கான தார் சாலை போட்டு, அதன் இருபுறமும் பேரிகார்டுகளை அமைத்து வருகின்றனர். அதேபோல மேடையில் விஜய் நடந்து வருவதற்கு ரேம்ப் அமைத்தும் வருகின்றனர். அதேசமயம் தொடர்ச்சியான மழையால் மாநாட்டுக்கு தேர்வு செய்யப்பட்ட இடம் முழுவதும் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறியிருக்கிறது.
அதனால் அந்த இடத்தில் மண்ணை கொட்டி வருகின்றனர். அதேசமயம் வாகன பார்க்கிங்கிற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில், இன்னும் எந்த பணிகளும் தொடங்கப்படவில்லை. இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், அதற்குள் வானகங்களுக்கான பார்க்கிங் பணியை முடிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இது ஒருபுறமிருக்க, மாநாடு தொடர்பாக விளக்கம் கேட்டு, த.வெ.க-வினருக்கு மேலும் ஒரு நோட்டீஸ் வழங்கியிருக்கிறது விழுப்புரம் மாவட்ட காவல்துறை. விக்கிரவாண்டி டி.எஸ்.பி நந்தகுமார் வழங்கிய அந்த நோட்டீஸில், `மாநாட்டில் 1.50 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்றும், அதற்காக 50,000 இருக்கைகள் போடப்படும் என்று கூறியிருக்கிறீர்கள். அதேபோல மாநாட்டுக்கு வரும் பொதுமக்களும், தொண்டர்களும் பொதுப் போக்குவரத்தையே பயன்படுத்தப் போவதாகவும் கூறியிருக்கிறீர்கள்.
மாநாட்டுக்கு வரும் வாகனங்களை நிறுத்த, விழுப்புரம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 28 ஏக்கர் நிலமும், கூடுதலாக 15 ஏக்கர் நிலமும், வட தமிழகத்திலிருந்து வரும் வாகனங்களை நிறுத்த தனியாக 40 ஏக்கர் நிலமும் ஏற்பாடு செய்திருப்பதாக கூறியிருக்கிறீர்கள்.
அதற்கான திட்ட வரைபடத்தை காவல்துறைக்கு நீங்கள் வழங்க வேண்டும். இது வடகிழக்குப் பருவமழை காலமாக இருப்பதால், வாகன நிறுத்துமிடங்களில் மழைநீர் தேங்கி நிற்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதனால் எந்தவித சிரமமுமின்றி வாகனங்களை நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மாவட்ட வாரியாக மாநாட்டுக்கு வரும் கார், வேன், பஸ் போன்றவற்றின் விபரங்களையும் காவல்துறைக்கு வழங்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த மாநாட்டுக்கு ஏற்கெனவே 33 நிபந்தனைகளை விதித்த காவல்துறை, அதில் 17 நிபந்தனைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது காவல்துறை வழங்கியிருக்கும் புதிய நோட்டீஸ், த.வெ.க-வினரை விரக்தியடைய வைத்திருக்கிறது.