விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை (அக்டோபர் 27) விக்கிரவாண்டியில் நடைபெறவிருக்கிறது.
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தலைவருமான விஜய், 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து, காய்களை நகர்த்தி வருகிறார். இதையொட்டி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் வி.சாலை பகுதியில் மிக பிரமாண்டமான மாநாட்டை நடத்தும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர் த.வெ.க கட்சி நிர்வாகிகள். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் அதிதீவிரமாக நடைபெற்று வருகின்றன. மிகப்பிரமாண்டமாக செட் வொர்க் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த இந்த சமயத்தில் கனமழை வந்துவிட்டதால், அதன் வேலைகள் தடைபட்டுள்ளன. இந்த கனமழை அக்டோர்பர் 18ம் தேதி (வெள்ளிக் கிழமை) வரை தொடரும் என்பதால் தவெக மாநாட்டு ஏற்பாட்டு நிர்வாகிகள் குழப்பத்தில் இருக்கின்றன.
ஏற்கனவே தீபாவளி சமயத்தில் மாநாடு நடைபெறுவதால் மாநாட்டில் பங்கேற்பவர்கள் மத்தியில் சிறு, சிறு குழப்பங்கள் ஏற்பட்டிருந்தது. மற்றொரு பக்கம், காவல்துறை பல கேள்விகளை அடுக்கியதில் மாநாட்டு ஏற்பாடு வேலைகளை ஆரம்பிக்கவே தமதமாகியிருந்தது. இப்படி பல தடைகளை எதிர்கொண்டு, தற்போது மாநாட்டு ஏற்பாடுகளை செய்து முடிக்கப்போகும் நிலையில், வடகிழக்குப் பருவமழை குறுக்கே வந்து பெரும் சாவலைக் கொடுத்திருக்கிறது தவெக கட்சியினருக்கு. இதுதொடர்பாக சில தவெக நிர்வாகிகளிடம் பேசியபோது, “அக்டோபர் 27ம் தேதி வரை இப்படியே கனமழை தொடர்ந்தால், மாநாடு நடைபெறுவதே கேள்விக் குறியாகிவிடும். அதை மீறி மாநாடு நடந்தாலும், மழையில் கூட்டம் வருவது சிரமம்தான். இந்த மழை சமயத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் கூட்டத்தைத் திரட்டி வருவது சவாலான விஷயம். மாநாட்டுக் களமும் சேறும் சகதியுமாக இருக்கிறது’ என்கிறார்கள்.
இந்நிலையில் காவல்துறையும் மேலும் சில கேள்விகளை ‘தவெக’ கட்சியிடம் கேட்டுள்ளது. அதில் முக்கியமாக, ” வடகிழக்குப் பருவ மழை பெய்து வருகிறது. வாகனம் நிறுத்தும் இடத்தில் தண்ணீர் தேங்கினால், வாகனங்களை நிறுத்த செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்னென்ன?” என்ற கேள்வியை அழுத்தமாகக் கேட்டுள்ளது.
மேலும், “1.5 லட்சம் மக்கள் வருவதாக வாய் மொழியாக தெரிவித்துள்ளதால், அதற்கு எந்த மாதிரியான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது?, மாநாட்டிற்கு மாவட்டம் வாரியாக வரும் வாகனங்களின் விவரங்கள் (கார், வேன், பஸ்) என்னென்ன?” என மேலும் சில கேள்விகளையும் கேட்டிருக்கிறது காவல்துறை. மழையும், காவல்துறையின் இந்த கிடுக்குப் பிடி கேள்விகளும் ‘தவெக’ வினர் மாநாட்டை நடத்துவதற்குப் பெரும் சவாலாக அமைந்திருக்கிறது.