தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, விருதுநகர் மாவட்டம், சாத்தூர், சிவகாசி, வெம்பக்கோட்டை, தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், திருவேங்கடம், வேலூர் மாவட்டம், குடியாத்தம், கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் ஆகிய பகுதிகளில் தீப்பெட்டி உற்பத்தி நடந்து வருகிறது. இதில், 80 சதவிகித தீப்பெட்டிகள், கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் 50 முழு இயந்திரத் தீப்பெட்டி ஆலைகளும், 320 பகுதி இயந்திரத் தீப்பெட்டி ஆலைகளும், 2,000-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி பேக்கிங் சார்பு ஆலைகளும் இயங்கி வருகின்றன. நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில்,90 சதவீதம் பெண்களே பணிபுரிந்து வருகிறார்கள். இங்கு உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிகள் இந்தியாவின் பல மாநிலங்கள் மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஏற்கெனவே மூலப்பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது சீன லைட்டர்களின் வருகையால் தீப்பெட்டித் தொழில் பாதிக்கப்பட்டது. தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வந்தனர். ஒரு சீன லைட்டரின் விற்பனை, 20 தீப்பெட்டிகளின் விற்பனையை பாதித்தது.
எனவே சீன லைட்டர்களின் விற்பனையை தடை செய்ய வேண்டும் என தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து ரூ.20-க்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் லைட்டர்களுக்கு தடை விதித்தது, அரசு. இருப்பினும், சீனாவிலிருந்து நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் திருட்டுத்தனமாக கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து, நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளரான சேது ரத்தினத்திடம் பேசினோம். “மோடி அரசு பதவியேற்றதும் சிறுதொழில்கள் பட்டியலில் இருந்து தீப்பெட்டித் தொழிலை நீக்கியதுதான் எங்களுக்கு முதல் பாதிப்பு. தீப்பெட்டி உற்பத்திக்கு விதிக்கப்பட்ட 18 சதவீத ஜி.எஸ்.டி-யை 5 சதவீதமாக் குறைக்கணும்னு அஞ்சு வருஷமாப் போராடியும் 12 சதவீதமாகத்தான் குறைக்கப்பட்டிருக்கு.
தீப்பெட்டி உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருட்களான அட்டை, பேப்பர், மெழுகு, சிவப்பு பாஸ்பரஸ், பொட்டாசியம் குளோரைடு ஆகியவற்றின் விலையும் தொடர்ந்து அதிகரிச்சது. இதனாலதான், ஒரு ருபாய்க்கு விற்பனை செஞ்ச ஒரு தீப்பெட்டியோட விலையை 14 வருஷத்துக்குப் பிறகு, கடந்த 2021 டிசம்பர் 1-ம் தேதியில இருந்து ரெண்டு ரூபாயா விலையை உயர்த்துனோம். அதுக்குப்பிறகும் மூலப்பொருளோட விலை உயர்வு அதிகரிச்சுது. கடந்த மூணு மாசத்துல மட்டும் எட்டு தடவையா மொத்தம், 40 சதவீதம் வரைக்கும் விலை அதிகரிச்சிருக்கு.
இதனால, 600 தீப்பெட்டிகள் கொண்ட ஒரு பண்டலின் விலையை ரூ.300-ல இருந்து ரூ.350-ஆக உயர்த்துனோம். ஆனா, வியாரிகள் இந்த விலையேற்றத்தை ஏத்துக்கல. இதனால, ஆர்டர்களும் குறைஞ்சிடுச்சு. தீப்பெட்டி உற்பத்திக்குத் தேவையான எல்லா மூலப்பொருட்களையும் தமிழக அரசின் ’சிட்கோ’ மூலம் மானிய விலையில் தரணும்னு பல வருஷமா கோரிக்கை வச்சுட்டு வர்றோம். இந்த நிலைமையில சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கினாலான சிகிரெட் லைட்டர்களின் இறக்குமதியால், தீப்பெட்டி விற்பனை மந்தமாகி தொழிலுக்கே ஆபத்தா வந்திருக்கு. புகை பிடிப்பவர்கள் மட்டுமில்லாம, பெண்களும் வீட்டு அடுப்படிகள்ல பயன்படுத்துற அளவுக்கு வளர்ந்திடுச்சு.
அந்த லைட்டர்கள்ல கேஸ் அடைக்கப்பட்டிருக்குறதுனால, பெரும் தீ விபத்து போன்ற அபாயத்தை ஏற்படுத்தும்னு இன்னும் புரியல. இருபது வருஷத்துக்கு முன்னால பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தீப்பெட்டிகளால் தமிழ்நாட்டுல தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்பட்டுச்சு. தமிழகம் முழுவதும் ஒரு மாசத்துல ரூ.500 கோடி மதிப்பிலான தீப்பெட்டி உற்பத்தியாகுது. இதுல இப்போ மூணு மாசமா லைட்டர்களால 100 கோடி வரை விற்பனை மந்தம் ஆகிடுச்சு. இந்த பாதிப்பால் சீன லைட்டர்களின் விற்பனையை முற்றிலும் தடை செய்யணும்னு கோரிக்கை வச்சிருந்தோம். இந்த நிலையிலதான் மத்தியரசு, சீன லைட்டர்களின் உதிரிபாகங்கள் இறக்குமதிக்கு தடை விதிச்சிருக்கு. இதை உற்பத்தியாளர்கள் வரவேற்கிறோம். இந்த தடையால் தீப்பெட்டி உற்பத்தி அதிகரிக்கும்” என்றார்.