தெற்கு லெபனானில் இஸ்ரேல் டேங்கர் நுழைந்தது குறித்து ‘விதியை மீறி நுழைந்தது’ என்று ஐக்கிய நாடுகள் அமைதிப் படையும், ‘தெரியாமல் நுழைந்துவிட்டோம்’ என்று இஸ்ரேலும் இரு வேறு கருத்துகளை கூறுகின்றன.
சமீபத்தில், தெற்கு லெபனானில் இஸ்ரேலின் இரண்டு டேங்கர்கள் நுழைந்து, பின்னர் வெளியே சென்றுள்ளது. இது குறித்து ஐக்கிய நாடுகள் அமைதிப் படை, “இஸ்ரேலின் டேங்கர்கள் தெற்கு லெபனானில் இருக்கும் ராணுவ தளத்தின் கதவை உடைத்து அத்துமீறி நுழைந்தது.
அந்த டேங்கர்கள் வெளியேறிய பின், ராணுவ தளத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் சில ஷெல்கள் வெடித்தது. அதிலிருந்து கிளம்பிய புகை 15 வீரர்களுக்கு கேஸ் மாஸ்குகள் போட்டிருந்தும் உடல்நிலை கோளாறை ஏற்படுத்தியது” என்று குற்றம்சாட்டியுள்ளது. 1978-ம் ஆண்டிலிருந்து தெற்கு லெபனானில் ஐக்கிய நாடுகள் அமைதிப் படை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து இஸ்ரேல், “காயப்பட்ட ராணுவ வீரர்களை மீட்கும்போது, தெரியாமல் ஐக்கிய நாடுகள் படை பகுதிக்கு சென்றுவிட்டோம்” என்று கூறியுள்ளது.
தரவுகளின்படி, வடக்கு லெபனானில் இஸ்ரேல் தரைப்படை தாக்குதலில் 5 அமைதிப் படை வீரர்கள் காயமடைந்திருக்கின்றனர்.
அமைதிப் படை இஸ்ரேல் டேங்கர்கள் அவர்கள் பகுதியில் அத்துமீறியதற்கான காரணத்தை இஸ்ரேலிடம் கேட்டுள்ளது.
நீண்ட நாள்களாக, ஐக்கிய நாடுகள் லெபனானில் இருந்து தங்களது படைகளை திரும்பப் பெற வேண்டும் என்று இஸ்ரேல் கேட்டு வருகிறது. தற்போது இந்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.