ஸ்டார் ஹோட்டல் விருந்து டு பாத்திரம் கழுவுதல் – பேராசிரியர்கள் மீது மேடையிலே ஆளுநரிடம் பகீர் புகார்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில், 39-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என். ரவி, உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பி.ஹெச்.டி மாணவர்களுக்கு வழிகாட்டியாக உள்ள பேராசிரியர்கள், லட்சக்கணக்கில் பணம் கேட்பதாகவும், ஹோட்டல்களில் விருந்து வைக்க நிர்பந்திப்பதாகவும், தனிப்பட்ட வேலைகளை செய்யச் சொல்வதாகவும் ஆளுநரிடம் புகாரளிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற வந்த பிரகாஷ் என்ற மாணவர், ஆளுநரிடம் அளித்த புகாரால் பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ஆராய்ச்சி மாணவர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு எதிராக பல்வேறு பிரச்னைகள் இருக்கின்றன. பட்டமளிப்பு விழாவில் ஆளுநரிடம் மனு கொடுத்ததற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால் தான் புகார் கொடுத்துள்ளேன்.

பல்கலைக்கழகத்தில் பயிலும் ஆராய்ச்சி மாணவர்களை வழி நடத்தும் பேராசிரியர்கள் , அவர்களது வீட்டு வேலைக்கு பயன்படுத்துகின்றனர். அவர்களது குழந்தைகளை பார்ப்பதற்கும், பாத்திரம் கழுவுதல், வங்கி வேலைக்கும் மாணவர்களை பயன்படுத்துகின்றனர்.

பல்கலைக்கழக வளாகத்தில் ஆதிதிராடவிடர் பிரிவு ஆராய்ச்சி மாணவர்களுக்கு இரண்டு விடுதிகள் உள்ளன. அந்த விடுதிகளை பொது விடுதியாக பயன்படுத்துகின்றனர். ஆதிதிராவிடர் விடுதிகளே இல்லை.

ஆராய்ச்சி மாணாவர்களின் ஆய்வுக்கட்டுரையை சமர்பித்த பிறகு, ரூ.50,000 – 1 லட்சம் வரை பணம் கேட்டு வற்புறுத்துகின்றனர். இது எல்லா பல்கலைக்கழகங்களிலும் நடைமுறையில் உள்ளன. இதை ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளேன்.

பல்கலைக்கழக விடுதி பராமரிப்புக்காக ஆண்டுக்கு ரூ.1 கோடி செலவு செய்கிறார்கள். ஆனால் கம்பர் விடுதியில் கழிவறை கூட சரியாக கட்டப்படவில்லை. சேக்கிழார் விடுதியிலும் முறையாக பராமரிப்பதில்லை. அந்த ஒரு கோடி ரூபாய் எங்கே போகிறது என்று தெரியவில்லை.

பல்கலைக்கழகத்தில். மாணவர்கள் விளையாடுவதற்கு இரண்டு மைதானங்கள் இருந்தும் பயன்படுத்த அனுமதிப்பதில்லை. விடுமுறை நாள்களில் தனியாருக்கு இரண்டு மைதானங்களையும் வாடகைக்கு விடுகின்றனர். இங்குள்ள தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை விளையாட அனுமதிப்பதில்லை. கடந்த 5 ஆண்டுகளாக விளையாட்டு தினம் நடத்தாமல் பணத்தை மட்டும் வசூலித்து வருகின்றனர்.’ என்று புகார் கூறினார். பட்டமளிப்பு விழா மேடையிலே ஆளுநரிடம் மாணவர் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb