Rain Alert: சென்னைக்கு ரெட் அலர்ட்; 25 மாவட்டங்களில் தொடரும் மழை… ஆய்வு மேற்கொள்ளும் முதல்வர் | Live Updates

சென்னை மழையை எதிர்க்கொள்ள நிவாரண முகாம்கள் தயார்!

சென்னை மாநகராட்சி

“சென்னையில் கனமழையை எதிர்கொள்ள 169 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. மழைநீரை வெளியேற்ற 900 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மரக்கிளைகளை அகற்ற 280 மரம் அறுக்கும் இயந்திரங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. சிந்தாதிரிப்பேட்டை, கோபாலபுரத்தில் மணிக்கு 1,500 பேருக்கு உணவுப் பொட்டலம் தயாரிக்க சமையற் கூடங்கள் தயார். 15 மண்டலங்களுக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து கண்காணிக்க உத்தரவிட்டிருக்கிறோம்” என்று சென்னை மாநகராட்சி தெரிவித்திருக்கிறது.

வடகிழக்கு பருவமழை; தீவிர நடவடிக்கையில் அரசு

சென்னையில் கடந்தாண்டு மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 180 இடங்களில் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரமாக்கப்பட்டிருக்கிறது. மெட்ரோ ரயில் பணிகள் நடக்கும் பகுதிகளில் 25 இடங்களில் மழைநீர் தேங்கும் என கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் கவனம் செலுத்தவும் மழைநீர் வடிகால் இணைப்பு பணிகள் முழுமை பெறாமல் உள்ள 43 இடங்களில் பணிகளை விரைந்து முடிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.

தன்னார்வலர்களை வரவேற்கிறோம்

வானிலை பற்றிய முன்னறிவிப்பு, நிகழ்நேர தகவல், கள நிலவரத்தை அறிய, வாட்ஸ்அப் குழுவில் சேர – மேற்கு (GCP), இந்த எண்ணை தொடர்புக் கொள்ளவும்(99947 90008) என்று -சென்னை காவல்துறை இணை ஆணையர், விஜயகுமார் X தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்.

தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று காலை 5.30 மணியளவில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் வட தமிழ்நாடு, புதுச்சேரியை நோக்கி நகரக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

பருவமழை – ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு கடிதம்

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி இருக்கிறது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரப்படுத்த அறிவுரை வழங்கி இருக்கிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதுடன், மரக்கிளைகள் முறிந்து போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. அதுமட்டுமின்றி மலைப் பகுதிகளில் மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் கூடுதல் கவனத்துடன் ஆட்சியர்கள் செயல்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி இருக்கிறது.

பள்ளி, கல்லூரிகள் இன்று செயல்படும்

சென்னை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் இன்று பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்திருக்கிறது.

காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட 25 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

வடகிழக்கு பருவமழை தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை!

ஸ்டாலின்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, உயர் அதிகாரிகளுடன் இன்று காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறார். சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் அதில் பங்கேற்க உள்ளனர்.

ரெட் அலர்ட் எச்சரிக்கை

சென்னை மற்றும் புறநகர்களில் நேற்று நள்ளிரவு இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அக்டோபர் 16-ம் தேதி அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், இன்று முதல் மழையின் அளவு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

சென்னையில் உள்ள சுரங்கப் பாதைகளின் தற்போதைய நிலை!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதலே மழை பெய்து வரும் நிலையில், அனைத்து சுரங்கப் பாதைகளிலும் போக்குவரத்து சீராக உள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. சுரங்கப்பாதைகளின் தற்போதைய படங்களை வெளியிட்டுள்ளது சென்னை மாநகராட்சி.

தமிழ்நாட்டில் 5 நாள்கள் மழை

மழை

வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி. தமிழ்நாட்டில் 5 நாள்கள் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.