I
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்.
லோக்கல் டிரெயின் ஒன்றில் ஏதோ ஒரு பெட்டி…
‘ஏய்… நீ எந்த காலேஜ்? உன் ஐடி கார்டு எங்க?’
‘……’
‘என்ன கம்முனு இருக்க… ஐடி கார்டை வெளிய எடு… இப்போ எடுக்கப் போறீயா… இல்லையா?’ என்ற அந்த கறார் குரல் ஓங்கும்போது, அந்த மாணவன் திறுதிறு முழியுடன் பேக்கில் இருந்து ஐ.டி கார்டை வெளி எடுக்கிறான்.
அந்த ஐடி கார்டில்தான் ஒளிந்திருக்கிறது அந்த திறு திறு மாணவனின் நிகழ்காலம்.
‘என்ன இது… காலேஜ்… ஐ.டி கார்டு’ என்று யோசிக்கிறீர்களா மக்களே… இப்படி தான் ரூட்டுகளில் பிரச்னை தொடங்குகிறது.
சமீபத்தில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூட் மோதலில் ஒரு மாணவர் உயிரிழந்தது தமிழ்நாடு எங்கும் பலத்த அதிர்ச்சியைக் கிளப்பியது. ரூட் மோதலில் இது ஒன்றும் முதல் மரணம் அல்ல… ஏற்கெனவே பல நடந்திருக்கிறன.
ஒரு மாணவன்… அவனைச் சுற்றி 10 – 15 சக மாணவர்கள் – இப்படி தான் தொடங்குகிறது ரூட் கேங். கேங்கை வழி நடத்தும் மாணவர் ‘ரூட் தல’. அவனைச் சுற்றியிருக்கும் மற்ற மாணவர்கள் ரூட் தலையின் விழுதுகள்.
ரூட் தலைகளும், மோதல்களும் தமிழ்நாட்டிற்கோ, சென்னைக்கோ புதியது அல்ல… அது பல பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. அதுவும் சென்னையில் உள்ள குறிப்பிட்ட இரு கல்லூரிகளுக்கிடையே இந்த மோதல்கள் ஆண்டுக்கணக்காக நீள்கின்றன. அதைத் தாண்டி, இப்போது ஒரே கல்லூரிக்குள் பல ரூட்டுகளும், பிரச்னைகளும் உருவாகி உள்ளது புதுக்கதை.
அரக்கோணம், வேலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு என்று பல இடங்களிலிருந்து சென்னை கல்லூரிகளுக்குத் தினமும் மாணவர்கள் பஸ்களிலும், டிரெயின்களிலும் வந்து செல்கின்றனர். அப்படி அவர்கள் வரும் பஸ் அல்லது டிரெயினையும், வந்துபோகும் ரூட்டையும் தங்களுடையதாக மாற்றிக்கொள்வதில் தான் உருவாகிறது ரூட்டுகளுக்கான பிரச்னை.
அரக்கோணம் டூ சென்னை பஸ்ஸில் ஒரு ரூட் கேங் மாணவர்கள் தினம் பயணிக்கிறார்கள் என்றால், வேறு எந்த ரூட் கேங்கும், வேறு கல்லூரி மாணவர்களும் அந்த பஸ்ஸில் ஏறக்கூடாது. பஸ்ஸில்தான் இப்படி என்றால், டிரெயினில் பெட்டி. ஒரு ரயில் பெட்டி முழுவதையும் ஒரு ரூட் கேங் மாணவர்கள் தனதாக்கிக் கொள்வார்கள். வேறு எந்த ரூட் கேங்கும், வேறு எந்த கல்லூரி மாணவர்களும் அதில் ஏறக்கூடாது. அது மட்டுமல்லாமல், இந்த ஸ்டேஷனில் இந்த கல்லூரி மாணவர்கள் ஏறக்கூடாது என்றெல்லாம் பல பல சட்டங்கள் ரூட் கேங்குகள் வகுத்துக்கொள்கிறார்கள்.
இந்த சட்டங்களை மீறி ஒருவர் வேறு ரூட் பஸ்ஸிலோ, வேறு ரயில் நிலையத்திலோ ஏறும்போதுதான் மோதல்கள் தொடங்குகின்றன. வேறு கல்லூரி மாணவனோ, வேறு ரூட் மாணவனோ ஒரு ரூட் கேங்கில் சிக்கிக்கொண்டால், அவனை அடித்து மன்னிப்பு கேட்க வைத்து வீடியோ எடுத்து தங்களுக்குள் இருக்கும் வாட்ஸ்ஆப் குரூப்களில் சுற்ற விட்டு கெத்து காட்டுகிறார்கள். அந்த வீடியோ எதிர் ரூட் கேங்கிற்குச் செல்லும்போது மோதல் ஏற்படுகிறது.
இது எல்லாம் ரூட்டுகளின் ஒரு பக்கம். இன்னொரு பக்கம்…
ஒரு கல்லூரியில் 20 சதவிகித மாணவர்களே ரூட்டுகளில் இருப்பவர்கள். மீதி 80 சதவிகிதம் பேர் ‘தானுண்டு… தான் வேலை உண்டு’ என்று இருப்பவர்கள். ஆனால், இந்த ரூட்டு பிரச்னைகளில் சிக்கித் தவிப்பதே இந்த 80 சதவிகித மாணவர்கள் தான்.
எந்த வம்புக்கும் போகவில்லை என்றாலும், இவர்கள் தங்களது கல்லூரி ரூட் மற்றும் இவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள ரூட் தவிர வேறு எந்த ரூட்டிலும் செல்லக்கூடாது. மீறினால் ‘அதோகதி’ தான். உடல்நிலை சரியில்லை… வீட்டில் பிரச்னை என்று ஏதோ ஒரு அவசர காரணத்திற்காக இந்த மாணவர்கள் செல்லும்போது, வேறு ரூட் அல்லது வேறு பஸ்/டிரெயினில் பயணித்தால் அவர்களுக்கு ஒவ்வொரு நொடியும் திக்…திக்…திக்…
‘உன்ன இந்த ரூட்டிலேயே பார்த்தது இல்லையே… எந்த காலேஜ்?’, ‘ஐ.டி கார்டு எங்கே?’ என்று விசாரணை தொடங்கும். அந்த விசாரணைக்கும் ஒத்துழைத்தாலும் பிரச்னை… ஒத்துழைக்காவிட்டாலும் பிரச்னை.
‘சரி… இந்தப் பிரச்னையினால்தான் இதில் பயணிக்கிறேன் என்று சொல்லித்தான் பார்ப்போமே’ என்றால், ரூட்டுகளால் கேட்கக்கூட முடியாது. காரணம், ‘போதை’. ஆம்…பெரும்பாலான ரூட் மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடிமை. அவர்களுக்கே, தாங்கள் என்ன செய்கிறோம்… ஏது செய்கிறோம் என்று தெரியாது.
தூர இடங்களிலிருந்து வரும் மாணவர்களால்தான் இந்தப் பிரச்னைகள் நடக்கின்றன என்று கல்லூரி நிர்வாகங்கள் கூறுவதோடு, தூர இடங்களிலிருந்து வரும் அப்பாவி மாணவர்களுக்கும் சீட் தர யோசிக்கிறது. அவர்கள் சுற்றத்தில் நல்ல கல்லூரி இல்லாததால் தானே, இங்கே சேர்கிறார்கள். அதற்கு இடையூறாக இருக்கிறது ரூட் மாணவர்கள் செயல்கள்.
இந்த பக்… பக்கும், திக்… திக்கும் தினம் பயணிக்கும் மாணவர்களுக்கு மட்டுமல்ல… அவர்களது பெற்றோர்களுக்கும் ஒட்டிக்கொள்கின்றன. ‘சாமி… என் புள்ள நல்லபடியா திரும்பி வரவேண்டும்’ என்ற பெற்றோர்களின் வேண்டுதல்கள் தினம் தினம் கடவுள்களின் காதை எட்டுகின்றன.
‘ஸ்டேஷன்லதான் போலீஸ் இருப்பாங்களே?’ என்று கேள்வி எழுவது நியாயமானதுதான். ஸ்டேஷனில் மட்டும் ரூட்டுகள் வால்கள் சுருண்டு இருக்கும். ரயில் ஓடிக்கொண்டிருக்கும் போது, போலீஸ் ரோந்துகளில் ரூட்டுகள் மாட்டும் சூழ்நிலை ஏற்பட்டால், சங்கிலியை இழுத்துவிட்டு ஓடிவிடுவார்கள்.
சங்கிலியை இழுத்தற்கான ஃபைனை, ரூட்டுகளின் காலேஜை சேர்ந்த அப்பாவி மாணவர்களின் தலையில் கட்டிவிடுவார்கள் போலீஸார்கள். இந்த அப்பாவி மாணவர்கள் அனைவரிடமும் பணம் இருக்கும் என்று கூறமுடியாது. ‘போக…வர…’ 20 ரூபாய். இடையில் சாப்பிட 50 ரூபாய் என்று கணக்கோடு வாழும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூட அதில் இருப்பார்கள். இவர்களுக்கு ரூட்டுகளால் மன ரீதியான கஷ்டம் மட்டுமல்லாமல், பண ரீதியாகவும் கஷ்டம்தான்.
‘பெண்களுக்குப் பாதுகாப்பு’, ‘என்ன பிரச்னை என்றாலும் துணிச்சலாக வந்து நிற்போம்?’ என்று பல பிம்பங்கள் ரூட்டுகளின் மேல் கட்டமைக்கப்பட்டாலும், இது எல்லாம் 10-15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவை என்பது யாராலும் மறுக்க முடியாது.
கடந்த வாரம் ஏற்பட்ட ஒரு மரணத்தோடு இந்த ரூட் பிரச்னைகள் முடிந்துவிடும் என்று யாராலும் அடித்துக் கூற அல்ல… கூறக் கூட முடியாது. ரூட்டுகளில் பிறரைக் கேலி செய்யும் கானா பாடிக்கொண்டு போலி கெத்தோடு செல்லும் சீனியர்களை… ‘நம்மளும் இப்படி ஆகணும்’ என்று ஆச்சரியம் ததும்பும் கண்களோடு ஜூனியர்கள் பார்க்கும் வரை இது ஓயாது.
– விகடன் வாசகரின் அனுபவம்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb