வேட்டையன் திரைப்படம் வெளியாகி பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. அப்படத்தின் முக்கியமான காட்சி ஒன்றில் BUDS Act குறித்துப் பேசப்படுகிறது. அந்தச் சட்டம் குறித்துப் பார்க்கலாம்.
BUDS என்பது ஒழுங்குபடுத்தப்படாத வைப்புத் திட்டங்களை தடை செய்யும் சட்டமாகும். Banning of Unregulated Deposit Scheme.
முதலீட்டுத் திட்டங்களைக் காட்டி மக்களை வசீகரித்து ஏமாற்றும் செயல்களைத் தடுப்பதில் இந்தச் சட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
நம் ஊரில் பெரும்பானோர் எம்.எல்.எம் நிறுவனங்களின் பெயரில் ஏமாற்றப்பட்டிருப்பதைக் கண்டிருக்கிறோம். இந்த ஏமாற்று வேலைகளைத் தடுப்பதற்காக 2019-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது பட்ஸ் சட்டம்.
எம்.எல்.எம், சிட் ஃபண்ட் போன்ற முதலீட்டுத் திட்டங்கள் பற்றிக் கேட்பதற்கு மிகச் சரியான ஒன்றாகவே தோன்றும். அதில் சட்ட விரோதச் செயல்கள் இருப்பதாக சந்தேகம் வராது என்பதுடன் அதிலிருந்து சிலர் பணமும் சம்பாதித்திருப்பார்கள்.
ஒரு சிலர் முதலீடு செய்தவுடன், அவர்களைக் காட்டி புதிய முதலீட்டாளர்களை ஈர்த்து, புதிய முதலீட்டாளர்களின் பணத்தில் ஒரு பாதியை பழைய முதலீட்டாளர்களுக்கு லாபம் என்ற பெயரில் கொடுத்துவிடுவார்கள். இந்தச் சுழற்சி தொடரும்.
புதிதாக முதலீடு செய்ய ஆட்கள் சேராதபோது பணம் கொடுக்கப்படுவது நிறுத்தப்படும். அப்போதுதான் இதுவொரு ஏமாற்று வேலை என்பது தெரியவரும். இதில், முதலீடு என்றில்லாமல் வைப்பு நிதி என்ற பெயரில் பணத்தைப் பெறுவார்கள்.
இவ்வளவு தூரம் வருவதற்கு முன்னர் இந்த வைப்பு நிதி நடவடிக்கைகளை சட்டத்துக்கு உட்பட்டது அல்லது சட்டத்துக்குப் புறம்பானது என வரையறுக்க பட்ஸ் சட்டம் உதவுகிறது.
இந்தச் சட்டத்தின் படி தண்டிக்கப்படும் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும்.