சென்னை கொண்டுவரப்பட்ட முரசொலி செல்வம் உடல்; உடைந்து அழுத முதல்வர் ஸ்டாலின்!
மறைந்த முரசொலி செல்வத்தின் உடல் பெங்களூரிலிருந்து இன்று மாலை சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. கோபாலபுரத்தில் தற்போது பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் முரசொலி செல்வத்தின் உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முரசொலி செல்வத்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய திமுக தலைவரும், மாநில முதல்வருமான ஸ்டாலின், உடைந்து அழுது கலங்கினார்.
உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், ஆ.ராசா மற்றும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
தி.மு.க தலைவரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் மகள் செல்வி. இவரின் கணவர் முரசொலி செல்வம். திமுக-வின் கொள்கைப் பரப்பு பத்திரிகையான முரசொலி பத்திரிகையில், சுமார் 50 ஆண்டுகளாக நிர்வாக ஆசிரியராக பணியாற்றினார். 84 வயதான முரசொலி செல்வம், வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் காலமானர். முரசொலி செல்வத்தின் உடல் இன்று கோபாலபுரத்துக்கு கொண்டுவரப்பட்டு தொண்டர்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் என தகவல் வெளியாகியிருக்கிறது. முரசொலி செல்வத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், “முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் அன்பு மருமகனும், அவரது மனசாட்சியான முரசொலி மாறனின் இளவலும், தங்கை செல்வியின் கணவருமான என் அன்புக்குரிய முரசொலி செல்வம் மறைந்தார் என்ற செய்தி இடி போல என் நெஞ்சத்தைத் தாக்கி, வேதனைக் குருதியை வடியச் செய்கிறது.
தலைவர் கலைஞரின் மூத்த பிள்ளையான முரசொலியின் பணிகளைத் தன் தோளில் சுமந்துகொண்டு இளமைப் பருவம் முதலே திறம்பட செயலாற்றியவர் அண்ணன் முரசொலி செல்வம். தலைவர் கலைஞரும் அவரின் மனசாட்சியான முரசொலி மாறனும் மனதில் நினைப்பதை எழுத்தில்-செயலில் நிறைவேற்றியவர் பாசத்திற்குரிய முரசொலி செல்வம். கழகத்தின் போர்வாளான முரசொலி நாளேட்டின் ஆசிரியராகப் பொறுப்பேற்று தன் எழுத்துகளால் ஜனநாயகக் குரலாக ஒலித்தவர்.
அடக்குமுறைக்கு அஞ்சாமல் சட்டமன்றத்தில் கூண்டிலேறி கருத்துரைத்தவர். “முரசொலி சில நினைவுகள்” என்ற அவரது புத்தகத் தொகுப்பு முரசொலி எதிர்கொண்ட நெருக்கடிகளையும் முரசொலியோடு செல்வத்துக்கு இருக்கும் பின்னிப் பிணைந்த உறவையும் எடுத்துரைப்பது ஆகும். தேர்தல் களம் முதல் திரைப்படப் பணிகள் வரை அனைத்து துறைகளிலும் முத்திரையைப் பதித்தவர். எந்த நிலையிலும் கழகமே மூச்சு என வாழ்ந்த கொள்கைச் செல்வம் அவர்.
அதிர்ந்து பேசாதவர். ஆனால், ஆழமான கொள்கைவாதி. சிலந்தி என்ற பெயரில் முரசொலியில் அவர் எழுதிய நையாண்டியும் நகைச்சுவையும் ததும்பும் கட்டுரைகள் கழகத்தின் இளைய தலைமுறையினருக்கு கொள்கை இரத்தம் பாய்ச்சும் வலிமை கொண்டவை. நேற்று முன்தினம்கூட முரசொலியில் கட்டுரை எழுதிய அவர், இன்று காலையில் அடுத்த கட்டுரைக்கான குறிப்புகளை எடுத்துவைத்துவிட்டு, சற்று கண்ணயர்ந்த நேரத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார் என்பதைக் கேட்டதும் இதயம் அதிர்ந்து, நொறுங்கிவிட்டேன்.
சிறுவயது முதலே எனக்கு அண்ணனாக – வழிகாட்டியாக, இயக்கப் பணிகளில் ஆலோசனைகள் வழங்கி, நெருக்கடி நேரங்களில் தெளிவான தீர்வுகளை முன்வைத்து, கழகத்துடனான என் வளர்ச்சியில் தோளோடு தோள் நின்றவர் என் பேரன்பிற்குரிய அண்ணன் முரசொலி செல்வம். தலைவர் கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்த பிறகு, நான் சாய்வதற்கு கிடைத்த கடைசித் தோளை, கொள்கைத் தூணை இழந்து நிற்கிறேன். என்னை நானே ஆற்றுப்படுத்த முடியாத நிலையில், கழகத்திலும் குடும்பத்திலும் யாருக்கு எப்படி ஆறுதல் சொல்லப் போகிறேன்! செல்வமே.. முரசொலி செல்வமே.. பண்பின் திருவுருவமே… திராவிட இயக்கத்தின் படைக்கலனே… கழகத்தின் கொள்கைச் செல்வமே.. நெஞ்சிலும் நினைவிலும் என்றும் நிலைத்திருப்பீர்!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb