“கேரள முதல்வர் பினராயி விஜயன் மீது விசாரணை…” போலீஸாருக்கு உத்தரவிட்ட கோர்ட்..!

கேரள முதல்வர் பினராயி விஜயன் கடந்த ஆண்டு நவகேரளா சதஸ் என்ற பெயரில் பேருந்தில் மாநிலம் முழுவதும் யாத்திரை நடத்தினார். பினராயி விஜயன் யாத்திரை சென்ற இடங்களில் எல்லாம் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் முதல்வர் பினராயி  விஜயனுக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தை நடத்தினர். சி.பி.எம் கட்சியின் இளைஞர் அமைப்பான டி.ஒய்.எஃப்.ஐ நிர்வாகிகள் போராட்டம் நடத்தும் காங்கிரஸ் தொண்டர்களை தடுத்து நிறுத்துவதும், தாக்குதல் நடத்திய சம்பவங்களும் அரங்கேறின.

அப்போது 2023 நவம்பர் 20-ம் தேதி கண்ணூர் மாவட்டத்தில் நவகேரள சதஸ் யாத்திரையின்போது கறுப்புகொடி காட்டி போராட்டம் நடத்திய இளைஞர் காங்கிரஸ்  நிர்வாகிகள் மீது டி.ஒய்.எஃப்.ஐ நிர்வாகிகள் தாக்குதல் நடத்தினர்.

ஆலப்புழா, கோதமங்கலம் பகுதிகளில் காங்கிரஸ் தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தும் வீடியோக்கள் வெளியாயின. இது குறித்து அப்போது கருத்து தெரிவித்த முதல்வர் பினராயி விஜயன், “சிலர் ஓடி வந்து பேருந்துக்கு இடையில் விழுவதற்கு முயன்றனர். அவர்களின் உயிரை பாதுகாக்கும் வகையில் நடக்கும் ‘ரக்‌ஷா பிரவர்த்தனம்’ தான் இது. அவர்களை தடுக்காமல் இருந்தால் பேருந்துக்கு முன் விழுந்திருப்பார்கள்” என கருத்து தெரிவித்திருந்தார்.

பினராயி விஜயன்

இதுகுறித்து எர்ணாகுளம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் முஹம்மது சியாஸ் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்திய நிகழ்வை பாதுகாப்பு நடவடிக்கை என முதல்வர் பினராயி விஜயன் நியாயப்படுத்தி கூறியதன் பிறகு மேலும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. எனவே முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என அந்த மனுவில் முஹம்மது சியாஸ் குறிப்பிட்டு இருந்தார்.

இது குறித்து எர்ணாகுளம் சென்ட்ரல் போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என எர்ணாகுளம் சீப் ஜூடிசியல் மஜிஸ்திரேட் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த கோர்ட் உத்தரவிட்டுள்ள சம்பவம் அரசியல் ரீதியாக பரபரப்பை கிளப்பி உள்ளது.

கேரள முதல்வர் பினராயி விஜயன்

வழக்குத் தொடர்ந்த முஹம்மது சியாஸ் கூறுகையில், “நவகேரள சதஸுக்கு எதிராக ஜனநாயக முறைப்படி போராடியவர்களுக்கு எதிராக முதலமைச்சர் பேசியதற்கான பதில்தான் கோர்ட் உத்தரவு. இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கைக்காக எந்த கடைசிக்கும் செல்லுவோம். அந்த தாக்குதல்களை நியாயப்படுத்தியதுடன், மேலும் அதை தொடர்ந்து நடத்த ஊக்குவிக்கும்படி முதல்வரின் பேச்சு இருந்தது. அதற்கு எதிராக மக்கள் விரும்பிய பதில் இப்போது கோர்ட் மூலம் கிடைத்துள்ளது” என்றார்.

இந்த வழக்கு வரும் டிசம்பர் 7-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group… இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…