Samsung Employees Strike: “உரிமைக்காக போராடும் தொழிலாளர்களை ஏமாற்றும் சூழ்ச்சி” – வேல்முருகன்

சாம்சங் ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிட்டு தொடர்ந்து 30 நாள்களாக போராடி வருகின்றனர். இந்த நிலையில், சாம்சங் ஊழியர்கள் கைது செய்யப்பட்டதும், போராட்டக் கூடாரம் அகற்றப்பட்டதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்கள் திமுக அரசை கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

அதைத் தொடர்ந்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், தமிழர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளருமான வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாம்சங் நிறுவன தொழிலாளர்களின் நியாயமான உரிமைகளுக்கு துணை நிற்காமல், அவர்களின் போராட்டத்தை காவல்துறை மூலமாக ஒடுக்கி, ஆலை நிர்வாகத்துக்கு துணை போகும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கை ஏமாற்றமளிக்கிறது!

சீமான் – எடப்பாடி பழனிசாமி

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் இயங்கிவரும் பன்னாட்டு நிறுவனமான சாம்சங் தனியார் தொழிற்சாலையில், 1,500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இத்தொழிலாளர்கள், 8 மணி நேர வேலை, ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைக் கேட்டு, கடந்த செப்டம்பர் 9 முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொழிலாளர்களின் நியாயமான உரிமைகளை ஏற்க மறுக்கும் ஆலை நிர்வாகம், அவர்களின் போராட்டத்தை காவல்துறை மூலமாக ஒடுக்குவதற்கு முயற்சித்து வருவது கண்டனத்துக்குரியது. சாம்சங் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி, தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பெற்றுத்தர வேண்டிய தமிழ்நாடு அரசு, அதனைச் செய்யத்தவறியதுடன், புறவழியான சதி திட்டத்தின் மூலம் நிர்வாகத்துக்கு ஆதரவான ஒரு குழுவோடு பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு ஏற்பட்டதாக கூறுவது, தமிழ்நாட்டு மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவது கண்டனத்துக்குரியது.

வேல்முருகன்

அதாவது, திட்டமிடப்பட்ட அமைச்சர்களும், சாம்சங் நிறுவனமும் ஏற்படுத்தி வைத்திருக்க கூடிய ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ற ஆவணத்தை சாம்சங் தொழிற்சாலையில் இருந்து முன்கூட்டியே அழைத்து வரப்பட்ட ஒரு சில தொழிலாளர்களை கையில் வைத்துக்கொண்டு சாம்சங் நிறுவனமும், அமைச்சர்களும் ஒரு உடன்பாடு ஏற்பட்டதாக அறிக்கை வெளியிடுவது கண்டனத்துக்குரியது; உரிமைக்காக போராடும் தொழிலாளர்களை ஏமாற்றும் சூழ்ச்சியாகும்.

அதுமட்டுமின்றி, சாம்சங் நிர்வாக அதிகாரிகள் வீடுவீடாகச் சென்று தொழிலாளர் குடும்பங்களின் பெண்களிடம், உங்கள் கணவரை சங்கத்தில் இருந்து விலகச் சொல்லுங்கள், இல்லையேல் பணிநீக்கம் செய்து விடுவோம் என மிரட்டி இருப்பதும், இதற்கு காவல்துறை துணை போவதும் ஜனநாயகத்தின் விரோதப் போக்கு.

ஸ்டாலின்

குறிப்பாக, உரிமைக்காகப் போராடும் தொழிலாளர்களின் பக்கம் நிற்காமல், சாம்சங் நிறுவனத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு நிற்பது என்பது ஏற்புடைய செயல் அல்ல! சாம்சங் தொழிலாளர் சங்கத்திற்கு பதிவுச் சான்றிதழ் வழங்க வேண்டுமென்ற போராட்டம் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம் மட்டுமல்ல; அரசியல் சட்டத்தை பாதுகாக்கக் கூடிய போராட்டமாகும். அரசியல் அமைப்புச்சட்டம் பிரிவு 19(1)(சி), தொழிற்சங்கம் அமைப்பதற்கான உரிமையை அடிப்படை உரிமை என உறுதி செய்துள்ளது.

எனவே, சாம்சங் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் கோரும் அறப்போராட்டத்தை அடக்கி ஒடுக்குவதைக் கைவிட்டு, சாம்சங் தொழிலாளர் சங்கத்திற்கு பதிவுச் சான்றிதழ் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அச்சங்கத்தோடு சாம்சங் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்கள் பிரச்னைகளுக்கு தீர்வுகாண வேண்டும். கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் அனைவரையும் எவ்வித வழக்கும் பதியாமல் உடனடியாக விடுவிக்க தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…