Samsung Employees Strike: “சங்கத்தைப் பதிய அரசுக்கு அதிகாரம் இருக்கு; பின் தயக்கம் ஏன்?” – திருமா

சாம்சங் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கி நேற்றோடு ஒரு மாதம் முடிந்துவிட்டது. பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும், இன்னும் எந்தவொரு சுமுக தீர்வும் எட்டப்படவில்லை. கடந்த திங்கள்கிழமை அமைச்சர்கள் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையிலும் கூட, எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை.

இன்று (அக்டோபர் 9) காலையில், போராட்டம் நடத்தும் தொழிலாளர்களை காவல்துறை கைது செய்த நிலையில், போராட்டம் மேலும் தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில், தி.மு.க., கூட்டணிக் கட்சித் தலைவர்களான தொ. திருமாவளவன், கே. பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டோர் போராட்ட களத்திற்கு நேரில் சென்று ஆதரவு அளித்துள்ளனர்.

சாம்சங் தொழிலாளர்கள்

அப்போது பேசிய திருமாவளவன், “அமைதியாக அறவழியில் போராடிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது வழக்குப் போடப்பட்டுள்ளது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கைத் திரும்பப் பெற வேண்டும். மேலும் கைது செய்த அனைவரையும் உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும். இந்தப் பிரச்னையில் முதல்வர் நேரடியாகத் தலையிட வேண்டும். அப்போதுதான் இந்தப் பிரச்னைக்குச் சுமுகமான தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம்.

தோழமை கட்சியினர் இணைந்து இரண்டொரு நாளில் முதல்வரை நேரில் சந்தித்து இந்த பிரச்னையை வலியுறுத்த உள்ளோம். ‘நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது’ எனச் சாக்குப் போக்குச் சொல்லக்கூடாது. அரசால் இதில் முடிவு எடுக்க முடியும். அரசு தலையிட்டால் அந்த வழக்குச் செயலிழந்து போகும். அதற்கான அதிகாரம் அரசுக்கு உள்ளது.

தொழிலாளர் நலத்துறையின் பதிவாளராக இருக்கும் இணை ஆணையருக்குச் சங்கத்தைப் பதிவு செய்யும் அதிகாரம் உள்ளது. அதற்கான அதிகாரம் சட்டத்திலும் உள்ளது. அதில் அரசுக்கும், அதிகாரிகளுக்கு என்ன தயக்கம்? அதுதான் பிரச்னையின் புள்ளியாக உள்ளது.

இந்த தயக்கத்தை உடைத்து சங்கத்தைப் பதிவு செய்ய முன்வர வேண்டும். பின்னர், அந்த சங்கம் நிர்வாகத்தோடு பேசி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தும்.

16-17 ஆண்டுகளாக இந்த நிறுவனத்திலே தொழிற்சங்கம் வைக்க அனுமதிக்காததே ஒடுக்குமுறை ஆகும். நாங்கள் சாம்சங் நிறுவனத்திற்கு எதிராக இல்லை… அதன் அடக்குமுறை போக்கிற்கு எதிராக உள்ளோம். பன்னாட்டு நிறுவனங்களின் முதலீட்டுக்கு எதிராக இல்லை… ஆனால், அவர்கள் தொழிலாளர்களைச் சுரண்டுவதற்கு எதிராக இருக்கிறோம். சங்கம் வைப்பது ஜனநாயக உரிமையாக இருக்கும்போது, அதை நிறைவேற்ற அரசை வலியுறுத்துகிறோம்.” என்று பேசியுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs