கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோற்ற முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, இந்தத் தேர்தலில் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு, காங்கிரஸ் – தேசிய மாநாட்டு கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
யார் இந்த உமர் அப்துல்லா?
1970-ம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்தவர் உமர் அப்துல்லா. இவரது தாய் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் ஆவார். இவரது குடும்பமே அரசியல் குடும்பம். இவரது தாத்தா ஷேக் அப்துல்லா, இவரது தந்தை ஃபரூக் அப்துல்லா மற்றும் இவர் என மூவருமே ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சர்களாக இருந்துள்ளனர்.
இவரது தாத்தா ஷேக் அப்துல்லா தான் தேசிய மாநாட்டு கட்சியை தொடங்கியவர். மேலும் அவர் தான் ஜம்மு காஷ்மீரின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர். அவருக்கு பிறகு ஷேக் அப்துல்லாவின் மகனும், உமர் அப்துல்லாவின் தந்தையுமான ஃபரூக் அப்துல்லா அந்தக் கட்சியின் தலைவராக இருந்தார்.. இப்போது இருக்கிறார்.
அரசியல் பயணம்…
உமர் அப்துல்லா முதன்முதலாக 1998-ம் ஆண்டு தனது 28-வது வயதில் எம்.பி-யாக தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அடுத்து ஒரு ஆண்டிலேயே பாஜக அரசில் மத்திய அமைச்சராக பதவியேற்றார்.
2002-ம் ஆண்டு ஜூன் மாதம், இவர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவராக பதவியேற்றார். மாநில அளவில் கவனம் செலுத்துவதற்காக அதே ஆண்டு அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார். அதன் பின்னர், மாநில அளவில் வந்த முதல் தேர்தலிலேயே தோல்வியை தழுவினார்.
2004-ம் ஆண்டு மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார். பின்னர், 2008-ம் ஆண்டில் நடந்த ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, 2009-ம் ஆண்டு ஆட்சி அமைத்தார். ஜம்மு காஷ்மீரின் இளம் முதல்வராக திகழ்ந்தார். 2009-ம் ஆண்டு தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பதவியில் இருந்து இவர் விலக, மீண்டும் இவரது தந்தை அந்தப் பொறுப்பை ஏற்றார்.
அப்போது தேசிய மாநாட்டு கட்சி காங்கிரஸ் கூட்டணியுடன் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஃபரூக் அப்துல்லாவிற்கு பிறகு, 5 ஆண்டு காலமும் முழுமையாக முதலமைச்சராக இருந்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட இவர், சுயட்சை வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார்.
காங்கிரஸ் கூட்டணி!
2019-ம் ஆண்டு பாஜக அரசு, இந்திய அரசமைப்பின் சட்டப்பிரிவு 370 கீழ் ஜம்மு காஷ்மீருக்கு இருக்கும் சிறப்பு அந்தஸ்த்தை திரும்ப பெற்றப்போது உமர் அப்துல்லா கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய ‘இந்தியா’ கூட்டணியில், தேசிய மாநாட்டு கட்சிக்கு எதிராக இருக்கும் மக்கள் ஜனநாயக கட்சி இடம்பெற்றிருந்தாலும், அந்தக் கட்சி இந்த தேர்தலில் தனித்தே போட்டியிட்டது. காங்கிரசுடன் கூட்டணி அமைத்து தேசிய மாநாட்டு கட்சி களம் கண்டது. உமர் அப்துல்லா கண்டேர்பால் மற்றும் புட்கம் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டிலுமே காலையில் இருந்து முன்னிலை வகித்த நிலையில், தற்போது இரண்டு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளார். கண்டேர்பால் தொகுதியில் கிட்டதட்ட 10,000 வாக்கு வித்தியாசத்திலும், புட்கம் தொகுதியில் கிட்டதட்ட 18,000 வாக்கு வித்தியாசத்திலும் வென்றுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் தொங்கு சட்டமன்றம் அமையும் என தேர்தலுக்கு பின்பான கருத்து கணிப்பு கூறியிருந்த நிலையில், காங்கிரஸ் – தேசிய மாநாடு கட்சி கூட்டணி எதிர்பாராத வெற்றியை பெற்றுள்ளது. முதலமைச்சராக யார் பொறுப்பேற்பார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அநேகமாக உமர் அப்துல்லா முதலமைச்சராகலாம் என்பது எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா, “மக்கள் தங்கள் தீர்ப்பை தெரிவித்துவிட்டனர். உமர் அப்துல்லா முதலமைச்சர் ஆவார்” என்று கூறியுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…