திமுக அரசை கண்டித்து மதுரை மாவட்டம் சோழவந்தானில் அதிமுக நடத்திய மனிதச்சங்கிலி போராட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசினார். ,
அப்போது அவர், “திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணத்தை உயர்த்த மாட்டோம், சொத்துவரியை உயர்த்த மாட்டோம் என்று கூறினார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் மூன்று முறை மின்கட்டணத்தை உயர்த்தியது மட்டுமன்றி தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் உயர்த்தப் போவதாக கூறுகிறார்கள். முன்பெல்லாம் மின்சார வயரை தொட்டால் ஷாக் அடிக்கும், இப்போது மின்கட்டண ரசீதை பார்த்தாலே மக்களுக்கு ஷாக் அடிக்கிறது.
ஏற்கனவே 150 சதவிகிதம் உயர்த்தப்பட்ட சொத்து வரியை மீண்டும் 6 சதவிகிதம் உயர்த்தி விட்டார்கள். இப்படியே போனால் யாருமே சொத்து வாங்க முடியாது. தமிழ்நாட்டில் ஒரு குடும்பம் மட்டும்தான் சொத்து வாங்க முடியும், அது ஸ்டாலின் குடும்பம் மட்டும்தான்.
அதேபோல் சட்டம் ஒழுங்கு மிகவும் கேள்விக்குறியாக உள்ளது. தேர்தல் வாக்குறுதியை எதையும் நிறைவேற்றவில்லை இன்றைக்கு விவசாயிகள், அரசு ஊழியர்கள், மாணவர்களுக்கு கொடுத்த வாக்குறுதி என்னாச்சு ஸ்டாலின் அண்ணாச்சி என்று மக்கள் கேட்கிறார்கள்
ஏற்கனவே 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மெஜாரிட்டியாக உள்ளார்கள், சட்டமன்றத்திலும் மெஜாரிட்டியாக உள்ளார்கள். ஆட்சி அதிகாரம் அவர்கள் கையில் இருந்தும் ஜனநாயகத்தின் உரிமை காக்க போராடுகிறோம் என்று பச்சை பொய்யை முதலமைச்சர் கூறுகிறார்.
முல்லைப் பெரியாறு அணையை மீட்டு தர அரசுக்கு துப்பில்லை, இன்றைக்கு முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ள ஜெயலலிதா பெற்றுத்தந்த தீர்ப்பைக் கூட ஸ்டாலின் நிறைவேற்றவில்லை. இதுகுறித்து அமைச்சர் துரைமுருகனுக்கும் கவலை இல்லை.
இன்றைக்கு மீனவர்கள் செத்து மடிகிறார்கள், இது குறித்து எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டால், முதலமைச்சரோ மத்திய அரசுக்கு கடிதம் எழுதி தன் கடமை முடிந்துவிட்டதாக கூறுகிறார்.
இந்த மனித சங்கிலி போராட்டம் திமுக அரசிற்கு முடிவுரை எழுதும் போராட்டமாக அமையும். மக்கள் சேவையில் திமுக பூஜ்ஜியமாக உள்ளது, ஆனால், அதை மறைக்கும் வகையில் விளம்பர ராஜ்ஜியமாக உள்ளது.
கூட்டணி கட்சிகளும் புகழ்ந்து வருகிறார்கள். ஒரு வாரத்துக்கு முன்பு மதுரையில் உதயநிதி பட்டா கொடுக்கும் நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பங்கேற்றார். தற்போது பட்டா கிடைக்கவில்லை என்று மக்களை திரட்டி ஊர்வலமாக சென்று கலெக்டரிடம் மனு கொடுக்கிறார். திமுக ஆட்சியில் கேட்டால் கிடைக்காது. ஆனால், கேட்காமல் கொடுக்கும் ஒரே அரசு அதிமுக அரசுதான்.
சென்னையில் வான்வழி சாகச நிகழ்ச்சியில் மக்களுக்கு தேவையான குடிநீர், மருத்துவ வசதி ,கழிப்பறை வசதி உள்ளிட்ட எதையும் செய்யவில்லை. இதில் 5 பேர் இறந்து போயுள்ளார்கள். முதலமைச்சரும், அவர் மனைவியும் கூலிங் கிளாஸ் அணிந்து நிகழ்ச்சியை பார்த்தார்கள். முதலமைச்சர் அணிந்த கூலிங் கிளாஸில் விமானம் மட்டும்தான் தெரியுமாம், மக்கள் தெரிய மாட்டார்களாம். முதலமைச்சரின் கண்ணுக்கு அவருடைய சொந்தங்கள்தான் தெரிகிறார்கள், மக்கள் தெரிவதில்லை.
எடப்பாடி பழனிசாமி இது குறித்து அறிக்கை விட்டால், ஏன் அதிமுக ஆட்சியில் நடக்கவில்லையா என்று வியாக்கியானம் பேசுகிறார்கள். 13 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது வான்வெளி சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது 10 லட்சம் மக்கள் திரண்டு வந்தபோதும் எந்த அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை.
ஒரு தண்ணீர் பாட்டில் இருந்தால் ஒரு உயிரை காப்பாற்றி இருக்கலாம் என்று உயிரிழந்த உறவினர்கள் கண்ணீருடன் பேசியுள்ளனர். தொடர்ந்து மக்கள் மீது மெத்தன போக்கை கடைப்பிடித்து வரும் திமுக அரசுக்கு சரியான பாடத்தை நீங்கள் புகட்ட வேண்டும். நாளை நடைபெறும் உண்ணாவிரத்தில் அனைவரும் பங்கேற்று அரசுக்கு பாடம் புகட்டுங்கள்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88