திருப்பூர் பாண்டியன் நகர் பொன்னம்மாள் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவியான சத்யபிரியாவின் சகோதரரான சரவணன், ஈரோடு மாவட்டம் நம்பியூரில் கோயில் திருவிழாக்களுக்கு பட்டாசு தயார் செய்து விற்பனை செய்யும் தொழில் நடத்தி வருகிறார். தற்போது, திருவிழா காலம் என்பதால் அதிக அளவிலான ஆர்டர் சரவணனுக்கு வந்துள்ளது. இதனால், சகோதரியான சத்யபிரியாவின் வீடு அமைந்துள்ள பொன்னம்மாள் நகரில் வைத்து அரசிடம் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக சரவணன் பட்டாசு தயாரித்து வந்துள்ளார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கிருந்த வெடி மருந்துகள் திடீரென வெடித்துச் சிதறியது. இதைத் தொடர்ந்து தயார் செய்து வைக்கப்பட்டிருந்த வெடிகளும் ஒன்றன்பின் ஒன்றாக வெடிக்கத் தொடங்கின. இந்த வெடி விபத்தில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த பெண் உடல் சிதறி உயிரிழந்தார். அவரது உடல் பாகங்கள் 200 மீட்டர் தொலைவிற்கு வீசப்பட்டது. 9 மாத பெண் குழந்தையான ஆலியா செரின், குமார் ஆகிய இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்த வெடி விபத்தில் கார்த்திக் வீட்டின் முன்புறம் முழுவதுமாக இடிந்து தரைமட்டமானது. வீட்டின் முன் பகுதியில் இருந்த மளிகைக் கடை முற்றிலும் இடிந்து சேதம் அடைந்தது. மேலும் எதிர்புறமாக இருந்த 20 ஓட்டு வீடுகள் கடுமையாக சேதமடைந்தன. மேலும், இந்த விபத்தில் எதிர்வீட்டில் இருந்த 3 குழந்தைகள் உள்பட 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், இருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில் போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
விபத்து நிகழ்ந்த இடத்தை ஆய்வு செய்தபின் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் லட்சுமி செய்தியாளர்களிடம் கூறுகையில், ” கார்த்திக் வீட்டில் வைத்து சட்டவிரோதமாக திருவிழாக்களுக்கு வானவேடிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்றுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்போதுதான் இந்த வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. இதில், அடையாளம் தெரியாத பெண் உள்பட மூவர் உயிரிழந்துள்ளனர். சரவணக்குமார் பட்டாசு தயாரிப்புக்கான உரிமத்தை புதுப்பிக்கவில்லை. விதிமுறைகளுக்குப் புறம்பாக வீட்டில் வைத்து தயாரித்ததால் விபரீதம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மேலும் விசாரித்து வருகிறோம் என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…