இந்தியாவின் ‘டாப் ஒன்’ பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் சுயட்சையாக ஹரியானாவில் போட்டியிட்டு கிட்டதட்ட 20,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
யார் இந்த சாவித்ரி ஜிண்டால்?
சாவித்ரி ஜிண்டால் பிறந்த மாநிலம் அசாம். இவர் திருமணத்திற்கு பிறகு ஹரியானாவிற்கு இடம் பெயர்ந்துள்ளார். ஜிண்டால் குழுமத்தை தொடங்கிய தன் கணவர் ஓம் பிரகாஷ் ஜிண்டாலுக்கு, சாவித்ரி ஜிண்டால் பக்க பலமாக இருந்துள்ளார். எதிர்பாராத விதமாக, 2005-ம் ஆண்டு ஓம் பிரகாஷ் காந்தி ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார்.
அதன் பிறகு, ஜிண்டால் குழுமத்தின் தலைமை பொறுப்பை ஏற்று, இப்போது வரை அந்த பதவியில் தொடர்கிறார் சாவித்ரி ஜிண்டால். கடந்த ஆகஸ்ட் மாதம் போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட பட்டியலில் ‘இந்தியாவின் பணக்கார பெண்மணி’ என்ற இடத்தைப் பிடித்தார். தேர்தல் விண்ணப்பத்தின் போது, இவர் கொடுத்த தகவலின் படி, இவருடைய தற்போதைய சொத்து மதிப்பு ரூ.270 கோடி ஆகும்.
அரசியல் பிண்ணனி…
இவரது குடும்பம் பாரம்பரியமாகவே காங்கிரஸ் கட்சியில் தான் இருந்துள்ளது. இவரது கணவர் ஹரியானா மாநிலத்தில் அமைச்சராக இருந்தார். கணவரின் இறப்பிற்கு பிறகு, கணவர் போட்டியிட்ட ஹிசார் தொகுதியிலேயே காங்கிரஸ் சார்பாக மூன்று முறை போட்டியிட்டு 2005 மற்றும் 2009 தேர்தல்களில் வெற்றி பெற்று, ஒரு முறை அமைச்சராகவும் இருந்தார். ஆனால், 2014 தேர்தலில் தோல்வியை தழுவினார்.
தொடர்ந்து காங்கிரஸ் கட்சியிலேயே இருந்து வந்தவர், இந்த ஆண்டு மார்ச் மாதம் பாஜக கட்சியில் இணைந்தார். இவருடன், இவரது மகன் நவீன் ஜிண்டாலும் பாஜகவில் இணைந்தார். நவீன் ஜிண்டாலுக்கு பாஜக, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தது. அதில் வெற்றி பெற்று, தற்போது நவீன் ஜிண்டால் ஹரியானா மாநிலத்தின் குருசேத்திரா தொகுதியின் எம்.பி-யாக இருக்கிறார்.
மகனுக்கு வாய்ப்பளித்த பாஜக, ஏனோ அம்மாவிற்கு வாய்ப்பளிக்கவில்லை. பாஜக சார்பாக சட்டசபை தேர்தலில் போட்டியிட சாவித்ரி ஜிண்டால் வாய்ப்பு கேட்டார். ஆனால், பாஜக அவருக்கு சீட் கொடுக்கவில்லை. இதனையடுத்து அவர் சுயட்சை வேட்பாளாராக ஹிசார் தொகுதியில் களமிறங்கி கிட்டதட்ட 20,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அநேகமாக, இவர் தான் இந்தியாவில் டாப் பணக்கார பெண் எம்.பி-யாகவும் இருப்பார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…