அ.தி.மு.க அமைப்புச் செயலாளராகவும், குமரி கிழக்கு மாவட்டச் செயலாளராகவும், கன்னியாகுமரி எம்.எல்.ஏ-வாகவும் இருப்பவர் தளவாய் சுந்தரம். கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் கட்சியை ஆக்டிவாக வைத்திருந்தாலும் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வந்தார்.
சமீபத்தில் கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணத்தை கண்டித்து தலைமை அறிவித்த போராட்டத்தை கட்சி அலுவலகம் முன்பு நடத்தியதாக தளவாய் மீது புகார் எழுந்தது. அதுபற்றி கேட்டதற்கு, பொதுவெளியில் போராட்டங்கள் நடத்தினால் வழக்குகள் வருவதால் பெண் நிர்வாகிகள் கலந்துகொள்ளத் தயங்குகிறார்கள். எனவேதான் அலுவலகம் முன்பு தங்களை எதிர்ப்பை பதிவு செய்ததாக தளவாய் சுந்தரம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன் தினம் (அக்.6) விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்துக்குட்பட்ட ஈசாந்திமங்கலத்தில் தொடங்கி பூதப்பாண்டிவரை நடைபெற்றது. இதில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் சீருடையில் கலந்துகொண்டு அணிவகுப்பு பேரணி நடத்தினர். ஈசாந்திமங்கலத்தில் நடந்த தொடக்க விழாவில் கலந்துகொண்ட தளவாய் சுந்தரம் பேரணியை கொடி அசைத்து தொடங்கிவைத்தார். அதில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தென் மாநில துணை பிரசாரகர் சுரேஷ் உள்ப்பட பலர் கலந்துகொண்டனர்.
தளவாய் சுந்தரம் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை தொடங்கி வைக்கும் போட்டோவை அவரது எதிரணியைச் சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை எனச் சொன்ன பிறகும் தளவாசுந்தரம் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை ஆரம்பித்து வைத்தது சரியா என அ.தி.மு.க-வைச் சேர்ந்த தளவாய் சுந்தரத்தின் எதிர் அணியினர் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பினர். அதே சமயம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வேறு, பா.ஜ.க வேறு என்ற ரீதியில் தளவாய் சுந்தரம் தரப்பு கருத்து தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் திடீரென தளவாய் சுந்தரத்தின் மாவட்டச் செயலாளர் பதவி மற்றும் அமைப்புச் செயலாளர் பதவியை தற்காலிகமாக பறித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாகவும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு நடந்துகொண்டதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டி இருப்பதால் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த என். தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ வகித்து வரும் கழக அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார்” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…