சென்னையில் விமானப் படையின் 92-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடந்த விமான சாகச நிகழ்வில் ஏற்பட்ட நெருக்கடியில் 5 பேர் இதுவரை உயிரிழந்திருக்கின்றனர். இதற்கு தமிழக அரசை கேள்வி கேட்டு பல கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், நடிகரும் த.வெ.க தலைவருமான விஜய் இது சம்பந்தமாக ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘சென்னையில் இந்திய விமானப் படை சார்பில், மெரினா கடற்கரையில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்த நிகழ்வு, வேதனையளிக்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நிகழ்ச்சியின் போது, அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை மீது அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள், தங்கள் வேதனையை வெளிப்படுத்திய செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன.
இப்படி மக்கள் அதிக அளவில் கூடுகிற இடங்களில் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைக்கான வசதிகளையும் பாதுகாப்பையும் திறம்படச் செயல்படுத்துவதில், இனி வரும் காலங்களில் கவனம் செலுத்த வேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தமிழக அரசு இதேமாதிரியான நிகழ்வுகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என விஜய் கூறியிருப்பதைப் பற்றி உங்களின் கருத்துகளை கமென்ட் செய்யுங்கள்..