இடிந்த கட்டடங்கள், சிதைந்த மனித உடல்கள், இருண்ட மனித முகங்கள் என எங்கும் அவலம் பீறிடும் நிலைக்கு வந்திருக்கிறது காஸா. பாலஸ்தீன மக்கள் வீடுகளை இழந்து, குடும்பத்தினரை இழந்து, உணவுக்கும் தண்ணீருக்கும் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.
மனித உயிர்களைக் குடித்துக் கொழுத்த பூதத்தைப் போல இந்தப் போர் லெபனான், ஏமன், ஈரான் எனப் பெருத்துக்கொண்டேப் போகிறது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்குமான சண்டையாகத் தொடங்கிய இந்தப்போர் மூன்றாம் உலகப் போரா? அணு ஆயுதப்போரா என அச்சப்பட வைக்கும் ஒன்றாக மாறிய இந்த ஒரு வருட காலத்தில் நடந்த முக்கியச் சம்பவங்கள் என்னவெனக் காணலாம்.
அக்டோபர் 7, 2023
காஸாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு திடீரென இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டப்பட்டனர் என்றும் 250க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பணயக் கைதியாக பிடித்துச் செல்லப்பட்டனர் என்றும் கூறியது இஸ்ரேல்.
ஹமாஸ் அமைப்புக்கு அமெரிக்கா முதலான உலக நாடுகல் கடுமையான கண்டனங்களை முன்வைத்தன. அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் அமைப்பு மீது குற்றம்சாட்டியது இஸ்ரேல்.
இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி வழங்கப்படும் என்றும் சூளுரைத்தது.
ஹமாஸ் தாக்கியது ஏன்?
இஸ்ரேல் ராணுவம் பெரும் சக்தி வாய்ந்தது என்றும், அரசியல் பின்புலம் உள்ளது என்றும் இஸ்ரேலைச் சுற்றியிருக்கும் சிறிய, ஏழ்மையான இஸ்லாமிய நாடுகளுக்கு நன்றாகவேத் தெரியும்.
இஸ்ரேலுக்கு எதிராக தன்னைத் தற்காத்துக்கொள்ள நீண்டகாலம் போராடி வரும் பாலஸ்தீன அமைப்பான ஹமாஸ், இஸ்ரேல் மற்றும் அதன் வலிமையான கூட்டாளிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தும் வகையில் திடீர் தாக்குதல் நடத்தவேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது என ஆராய வேண்டியது அவசியம்.
இது உடனடி தாக்குதல் என்றாலும் அதற்கு முந்தை 30 ஆண்டுகளில் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் பல தாக்குதல்களை மேற்கொண்டிருக்கிறது. பாலஸ்தீனத்துக்கு அடுத்தடுத்த காயங்களை ஏற்படுத்திக்கொண்டே இருந்தது இஸ்ரேல். அதேவேளையில் பிற அரேபிய நாடுகளிடையே அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொண்டது.
இஸ்ரேல் என்ற நாடு அறிவிக்கப்பட்டது முதலே சுற்றியிருந்த அரேபிய நாடுகள் இஸ்ரேல் மீது போர் தொடுத்து வந்தன. அரை நூற்றாண்டுக்கும் மேலாக போர்கள் நடந்தாலும் ஒரு கட்டத்தில் அமெரிக்காவின் தொடர் வலியுறுத்தலால் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. எகிப்துடன் இராஜாந்திர உறவுகள் ஏற்பட்டன. சவுதி அரேபியா, ஜோர்தான் நாடுகள் இஸ்ரேலுடன் உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்டன.
இஸ்ரேல் இந்த ஒப்பந்தங்களில் அரேபிய நாடுகள் முன்வைக்கும் பல அம்சங்களை ஏற்றுக்கொண்டாலும், பாலஸ்தீனம், ஜெருசலேம் குறித்த கோரிக்கைகளை மறுத்து வந்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், சூடான், மொராக்கோ என அடுத்தடுத்த இஸ்லாமிய நாடுகளுடன் சமாதானமானது இஸ்ரேல். எனினும் பாலஸ்தீனம், லெபனான், சிரியா போன்ற நாடுகளுடன் தகராறு தொடர்ந்தது.
இதற்கிடையில் பாலஸ்தீனத்தில் உள்நாட்டு பிரச்னைகள் எழுந்து காஸா தனித்தீவானது. காஸாவின் ஆட்சிப்பொறுப்பு ஹமாஸ் அமைப்பிடம் இருக்கிறது.
கால ஓட்டத்தில் வலிமையான நாடாக வளர்ந்துவிட்ட இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் பாதுகாப்புக்கு உறுதியான ஒப்பந்தங்கள் எதுவும் கையெழுத்திடாமல் தொடர் அச்சுறுத்தலாக இருந்துவந்ததே ஹமாஸின் தாக்குதலுக்கு காரணம்.
அமெரிக்கா நிதியுதவி
இஸ்ரேலுக்கு உலக அரங்கில் இருக்கும் ஆதரவாளர்களில் மிக முக்கிய நாடு அமெரிக்கா. அக்டோபர் 7, 2023ல் போர் தொடங்கியது முதல் கடந்த மே மாதம் வரை 12.5 பில்லியன் டாலர்கள் நிதி பெற்றுள்ளது இஸ்ரேல்.
இஸ்ரேல் காஸாவில் நிகழ்த்தும் மனித உரிமை மீறல்களை கண்டித்தாலும், “இஸ்ரேலுக்கு தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முழு உரிமை இருக்கிறது” என்ற கருத்தை முன்னிறுத்தித் தொடர்ந்து போருக்கு நிதியுதவி செய்து வருகிறது அமெரிக்கா.
காஸாவில் இஸ்ரேலால் வீடுகளை இழந்து உள்நாட்டு அகதிகளாய் பசியை சுமந்துகொண்டுத் திரியும் மக்களுக்கு மனிதநேய அடிப்படையிலான உணவு, மருந்துகள் போன்ற உதவிகளையும் செய்துள்ளது அமெரிக்கா.
அமெரிக்கா மட்டுமல்லாமல் பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் இஸ்ரேலுக்கு தொடர்ச்சியாக ராணுவ, நிதி உதவிகளைச் செய்துவருகின்றன.
காஸா சந்தித்த இழப்புகள்
அக்டோபர் 13, 2023 இஸ்ரேல் ஹமாஸ் மீது தாக்குதல் நடத்துவதனால் வடக்கு காசாவில் இருக்கும் மக்கள் தெற்கு நோக்கி நகருமாருமாறு அறிவுறுத்தியது இஸ்ரேல்.
காஸா மக்களை ஹமாஸ் கேடையமாகப் பயன்படுத்துகிறது என குற்றம் சாட்டிய இஸ்ரேலின் ஏவுகணைகள் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள் என அனைத்தையும் தரை மட்டமாக்கியது.
ஹமாஸ் அமைப்பு முழுமையாக அழியும் வரை தாக்குதல் தொடரும் என்கிறது இஸ்ரேல் அரசு. இஸ்ரேல் காஸாவை முழுமையாக கைப்பற்ற நினைக்கிறதா என்ற சந்தேகம் உலக அரசியல் நிபுணர்களுக்கு எழாமல் இல்லை.
அதிரவைக்கும் போரின் ஏவுகணை சத்தத்தையும், கண்ணீரையும், ரத்தம் வழியும் காயங்களையும், பிணங்களையும் தினம் தினம் பார்த்துவரும் காஸா மக்கள் உளவியல் ரீதியாக அடைந்துள்ள பாதிப்பு நம் கற்பனைக்கு எட்டாதது. இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு இந்த அவலத்தின் சுமையைத் தாங்க வேண்டியிருக்கும் என்பதும் தெரியாது.
போரின் உடைமை, உறவு இழப்புகளைக் கடந்து வாட்டி வதைக்கும் பசியும் தாகமும் காஸா மக்களை துரத்தி வருகின்றன. சுகாதார வசதிகள் பெயரளவுக்குக் கூட இல்லாதநிலை ஏற்பட்டிருக்கிறது.
இஸ்ரேலின் தாக்குதலுக்கு அஞ்சி, கூடாரங்களுடன் தெற்கு நோக்கி நகர்ந்த காஸா மக்கள் தென்கோடியான ராஃபா பகுதியில் குவிந்தனர். கடந்த மே மாதம் சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ராஃபாவில் தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்.
இஸ்ரேலின் தாக்குதலில் 41,000 பாலஸ்தீனர்கள் இதுவரை இறந்திருக்கிறார்கள். அதில் 11,000 குழந்தைகள் அடக்கம். 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர்.
விரிவடையும் போர்
காஸாவுக்கு எகிப்து வழியாகவும் வான் வழியாகவும் பல நாடுகள் நிவாரண பொருட்களை வழங்கியிருக்கின்றன. மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவும், இந்தியாவுக் கூட இருக்கின்றன.
ராணுவ ரீதியில் ஹமாஸுக்கு முதலில் உதவ முன்வந்தது ஈரான் பின்புலம் கொண்டு லெபனானில் இயங்கும் ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பு.
லெபனான் இஸ்ரேலின் வடக்கு எல்லையில் உள்ள நாடு. அங்கு ஹிஸ்புல்லா – இஸ்ரேல் ராணுவம் இடையே அடிக்கடி துப்பாக்கிச் சூடு நடைபெறுவது வழக்கம். காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்த பிறகு, அக்டோபர் 8ம் தேதியே இந்த மோதல்கள் அதிகரித்தன.
மேலும் ஹமாஸ் அமைப்பு லெபானானில் இருந்து தாக்குதல் நடத்த அனுமதித்தது ஹிஸ்புல்லா .
ஹிஸ்புல்லாவுக்கு ஆயுதங்கள், நிதி வழங்கி ஆதரவளிப்பதாலேயே ஈரான் இஸ்ரேலின் எதிரிகள் பட்டியலில் இடம் பிடித்தது. கடந்த ஏப்ரல் மாதம் சிரியாவில் இருந்த ஈரான் தூதரகத்தைத் தாக்கியது இஸ்ரேல், இதில் 13 பேர் மரணமடைந்தனர்.
இரண்டு வாரங்கள் கழித்து ஏப்ரல் 13-ம் தேதி 300 ஏவுகணைகள் மூலம் தாக்குதல் மேற்கொண்டது ஈரான். இந்த தாக்குதலில் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜோர்டான் நாடுகளின் உதவியுடன் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியது இஸ்ரேல். இந்த தாக்குதல் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் இஸ்ரேல் நிலப்பரப்பில் ஈரான் நேரடியாக தாக்குதல் மேற்கொள்வது இதுவே முதன்முறை.
ஹிஸ்புல்லா போலவே ஏமனில் இருந்து செயல்படும் ஹௌதி கிளர்ச்சியாளர் படையின் பின்புலத்திலும் ஈரான் செயல்படுகிறது. ஹௌதி படைக்கு ஆயுதங்கள் பரிமாறப்படும் முக்கிய துறைமுகங்களைக் குறிவைத்துத் தாக்கியது இஸ்ரேல். ஜூலை 20ம் தேதி ஏமனில் முதல் தாக்குதல் நடத்தப்பட்டது.
இஸ்ரேலின் வடக்கு பகுதியிலிருந்தும், லெபனானின் தெற்கு பகுதியில் இருந்தும் பல லட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
லெபனான், ஈரான், ஏமன் என இந்த போரின் எல்லைகள் விரிவடைந்துகொண்டே செல்கின்றன. லெபனானில் இஸ்ரேல் நடத்தியதாகக் கூறப்படும் பேஜர் தாக்குதலும், இஸ்ரேலில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலும் இந்தப் போரை அமைதியிலிருந்து வெகு தொலைவுக்கு எடுத்துச் சென்றிருக்கின்றன.
தலைவர்கள் கொலை
பேஜர் தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்காவிட்டாலும், உலக நாடுகள் இதை இஸ்ரேல் தான் செய்திருக்க முடியும் என நம்புவதற்கு காரணம் இஸ்ரேலின் வலிமையான உளவு அமைப்பான மொசாட். பல நாடுகளுக்குள் புகுந்து வெற்றிகரமாக ஆப்பரேஷன்களை முடிக்கும் திறன் கொண்ட மொசாட், போர் சமயத்தில் ராணுவத்துடன் இணைந்து எதிரி அமைப்புகளின் தலைவர்கள், தளபதிகளை வேட்டையாடி வருகிறது.
ஹமாஸ் துணைத் தலைவர் சலே அல்-அரௌரி (ஜனவரி 2, 2024), அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே (ஜூலை 31), ஹமாஸ் ஆயுத அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான முகம்மது தீஃப் (ஜூலை 13) ஆகியோர் இஸ்ரேலால் கொல்லப்பட்ட முக்கிய தலைவர்கள்.
ஹெசபொல்லா முக்கிய தளபதி டெலெப் அப்துல்லா, மூத்த தலைவர் முகம்மது நசீர், கமாண்டர் ஃபுவாட் ஷுக்ர், கமாண்டர் இப்ராஹில் அகில், ஹெசபொல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா ஆகியோரும் இஸ்ரேலால் கொல்லப்பட்டுள்ளனர்.
ஈரான் மூத்த கமாண்டர் முகமது ரேசா ஜாஹிதியும் இஸ்ரேலால் கொல்லப்பட்டுள்ளார்.
இஸ்ரேலின் குறிப்பிடத்தக்க தலைவர்கள் யாரும் கொல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எந்தெந்த நாடுகள் யார் பக்கம் நிற்கின்றன?
காஸா இஸ்ரேல் போரில் உலக நாடுகள் பல தரப்பு கருத்துக்களை முன் வைக்கின்றன. வரலாற்றில் நீண்ட காலம் நடந்துவரும் மோதல் என்றாலும், உலகம் முழுவதுமிருந்து மக்கள் இந்தப் போருக்கு எதிராக குரலெழுப்பி வருகின்றனர். அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் அரசின் முடிவையே எதிர்த்து மக்கள் போராட்டங்களை முன்னெடுத்திருக்கின்றனர்.
அரசியல், பொருளாதர, ராணுவ பலமிக்க இஸ்ரேலுக்கு உறுதுணையாக, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான், ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இருக்கின்றன.
துருக்கி, ரஷ்யா, சீனா, லெபனான், ஏமன் உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலை எதிர்த்து வருகின்றன. குவைத், ஈராக், பாகிஸ்தான், பிரேசில் உள்ளிட்ட சில நாடுகள் இஸ்ரேலை கண்டித்திருக்கின்றனர்.
இனி என்ன?
இஸ்ரேல் ஈரானுக்கு பதிலடி கொடுக்க உறுதியேற்றிருக்கிறது. ஈரானை எச்சரிக்கும் விதமாக லெபனானில் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் ஈரானுக்கு என்ன மாதிரியான பதிலடியைக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளது எனும் கேள்விதான் நம்மை அச்சுறுத்துவதாக உள்ளது.
மத்திய கிழக்குப் பகுதியில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் அதன் , தாக்கம் நிச்சயமாக ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளைப் பாதிக்கும். அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் நாடு அதன் கூட்டணி நாடுகளின் ஆதரவை இழக்க நேரிடும்… இதுபோன்ற காரணங்களால் அணு ஆயுதங்கள் காட்சிக்குள் வராது என்றே எதிர்பார்க்கலாம்.
ஈரானின் அதிமுக்கியமான நட்பு நாடு என்றால் அது ரஷ்யாதான். ஆனால் ரஷ்யா குறிப்பிடத்தக்க வெற்றியை அடையாத போரில் 2 ஆண்டுகளாக சண்டையிட்டு வருகிறது. ரஷ்யாவோ, சீனாவோ தாமாக போரில் மூக்கை நுழைப்பதாற்கான சமிக்கைகள் எதுவுமில்லை. இஸ்ரேல்-ஈரான் இடையேப் முழுமையாக போர் தொடங்கினாலும் அது உலகப் போராக வெடிப்பதற்கான வாய்ப்புகாள் குறைவுதான் என்கின்றனர் சர்வதேச அரசியல் நிபுணர்கள்.
பல நாடுகள் தொடர்ந்து போர் நிறுத்தத்துக்காக இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. கடந்த முறை அமெரிக்காவில் நடைபெற்ற சமாதான உரையாடல் தோல்வியில் முடிந்ததால், மீண்டும் திருத்தப்பட்ட கோரிக்கைகளுடன் புதிய உடன்படிக்கை கையெழுத்தாகலாம்.
போரில் பின்னடைவு ஏற்பட்டாலோ அல்லது நட்பு நாடுகள் ஆதரவை நிறுத்தினாலோ இஸ்ரேல் போர் நிறுத்தத்துக்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
இஸ்ரேலின் ஹமாஸ் இல்லாத காஸா, ஹிஸ்புல்லா இல்லாத லெபனான், ஹௌதி இல்லாத ஏமன் போன்ற இலக்குகள் எட்டப்பட்டால் இஸ்ரேல் மிகப் பெரிய சக்தியாக உருவெடுக்கலாம். அதன் பிறகு சர்வதேச அரசியல் நிபுணர்கள் அச்சப்படுவதைப் போலவே இஸ்ரேல் அதன் எல்லையை விரிவுபடுத்தலாம்.
அமைதியும் இயல்பு நிலையும் மத்திய கிழக்குக்கு எட்டாக் கனியாகவே இருக்கின்றன. சமாதானத்துக்காக பிரார்த்தனைகள் மட்டும் உலகெங்கும் ஓயாமல் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb