நேற்று (அக்டோபர் 6) சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் (Air show) 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு, கூட்ட நெரிசலிலும் போக்குவரத்து நெருக்கடியிலும் சிக்கித் தவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திருக்கிறது.
10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் மெரினாவில் ஒன்று கூடியதால் சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசல், கூட்ட நெரிசல், குழந்தைகளை வைத்துக் கொண்டு எங்கும் நகர முடியாத நிலை என மக்கள் தவித்துப் போய் கடும் வெயிலில் நின்றனர்.
ரயில், மெட்ரோ, பேருந்துகளில் தொங்கியபடி செல்லும் நிலை ஏற்பட்டிருகிறது. ஒரு ரயிலுக்காக ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. குடிநீர், சரியான திட்டமிடல், லட்சக்கணக்கான மக்கள் திரும்பி செல்வதற்கான ஏற்படுகள், போக்குவரத்து ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகளின் போதாமையால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியிருக்கின்றனர்.
கூட்ட நெரிசல் மற்றும் வெயில் தாக்கம் காரணமாக பலர் மயக்கம் போட்டு விழுந்திருக்கின்றனர். அதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில், இதுவரை ஐந்து பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர்.
இந்த அசாம்பாவிதங்கள் அரசின் கவனக்குறைவையும், அலட்சியத்தையுமே காட்டுகிறது எனப் பலரும் கண்டித்து வருகின்றனர். அரசியல் தலைவர்கள் பலரும் இதுகுறித்து கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திமுக கூட்டணி கட்சியான ‘விடுதலை சிறுத்தைகள் கட்சி’, “இந்த சாவுகள் கூட்ட நெரிசலால் (stampede) ஏற்படவில்லை. வெயிலின் தீவிரத்தால் உண்டான நீர்ச்சத்து குறைவு காரணமாகவே ஏற்பட்டிருக்கின்றன” என்றும் “பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணமும், இதுகுறித்த உயர்மட்ட விசாரணையும் வேண்டும்” என்றும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
‘விசிக’வின் இந்த அறிக்கையில் “சென்னை மெரினா கடற்கரையொட்டிய வான்வெளியில் இந்திய விமானப்படை நடத்திய சாகச நிகழ்ச்சியைக் காண இலட்சக்கணக்கான மக்கள் கூடினர். அவர்களில் நூற்றுக் கணக்கானோர் மயக்கமுற்றனர் என்பதும் 5 பேர் உயிரிழந்திருப்பதும் மிகுந்த அதிர்ச்சி மற்றும் வேதனையளிக்கிறது. இப்பெருந்துயரம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு ஆணையிடவேண்டுமென்றும்; உயிரிழந்த குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்!
இந்திய விமானப்படை ஒவ்வொரு ஆண்டும் ‘விமானப்படை நாளைக்’ கடைபிடித்து வருகிறது. தலைநகர் தில்லியில் மட்டுமே நடைபெற்று வந்த இந்த நிகழ்ச்சி நாட்டின் பல்வேறு இடங்களிலும் நடத்தப்பட வேண்டும் என்று இந்திய ஒன்றிய அரசு எடுத்த முடிவின் அடிப்படையில், கடந்த ஓரிரு ஆண்டுகளாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் என்னும் இடத்தில் இது நடைபெற்றது.
இந்த ஆண்டு தமிழ்நாட்டில் – மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படை இந்த சாகச நிகழ்வை நடத்தியுள்ளது. இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை விமானப்படையும் தமிழ்நாடு அரசும் இணைந்து மேற்கொண்டன. இது தொடர்பாக முன்கூட்டியே ஊடகங்களில் வெளியான செய்திகள் பொது மக்களை வெகுவாக ஈர்த்ததால் இலட்சக்கணக்கானவர்கள் மெரினா கடற்கரையில் கூடிவிட்டனர். இந்நிலையில் தான், ஐந்து பேர் பலியாகும் அவலம் நடந்துள்ளது. இந்த சாவுகள் கூட்ட நெரிசலால் (stampede) ஏற்படவில்லை. வெயிலின் தீவிரத்தால் உண்டான நீர்ச்சத்து குறைவு காரணமாகவே ஏற்பட்டிருக்கின்றன எனத் தெரிய வருகிறது.
தமிழ்நாடு அரசின் சார்பில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். எனினும் வெயிலின் கொடுமையால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பது குறித்து இன்னும் தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
வெயிலின் கொடுமையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென்றும், இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டில் குறைபாடுகள் ஏதும் இருந்ததா என்பதை விசாரித்து அதற்குப் பொறுப்பானவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதற்கு உயர்மட்ட விசாரணைக்கு ஆணையிட வேண்டுமென்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்” என்று கூறப்பட்டிருக்கிறது.