வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம் குருவராஜபாளையத்தில் உத்திர காவிரி ஆற்றின் குறுக்கே நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 4.13 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலமானது கடந்த ஆகஸ்ட் 12 அன்று வேலூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக அடித்து செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதி மக்களின் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டு இருந்தது. பாலம் அடித்து செல்லப்பட்ட உடனே பொதுமக்கள் போக்குவரத்து பாதிக்கப்படாத வகையில் தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது.
தற்பொழுது இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை வேலூர் மாவட்ட ஆட்சியர் வே.இரா. சுப்புலெட்சுமி நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் சீனிவாசன், வட்டாட்சியர் வேண்டா ஆகியோர் உடன் இருந்தனர். பருவ மழை காலம் தொடங்கியதாலும், வேலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையின் காரணமாகவும் இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்பன குறித்து நேற்று வேலூர் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்