வருகின்ற 9-ம் தேதி திமுக அரசை எதிர்த்து அதிமுக-வின் சார்பு அமைப்பான ஜெயலலிதா பேரவை சார்பில் மதுரையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. பேரவையின் மாநிலச் செயலாளரான சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் இதற்கான ஏற்பாடுகளை பெரிய அளவில் செய்து வருகிறார்.
இந்த நிலையில் திருமங்கலம் தொகுதியிலுள்ள டி.குன்னத்தூர் ஜெயலலிதா கோயில் வளாகத்தில் உண்ணவிரத்தில் கலந்துகொள்ளும் இளைஞர்களுக்கு 5 நாள் பயிற்சி முகாமை நடத்தி வருகிறார்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் இளைஞர் கூட்டத்தை அதிகம் காட்ட வேண்டுமென்பதற்காக மாவட்டம் முழுவதுமிருந்து இளைஞர்களை அழைத்து வர கட்சி நிர்வாகிகளுக்கு ஆர்.பி.உதயகுமார் உத்தரவிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து 5 நாள் பயிற்சி முகாம் டி.குன்னத்தூரிலுள்ள ஜெயலலிதா கோயில் வளாகத்தில் ஏற்பாடு செயப்பட்டது. தினமும் கட்சி நிர்வாகிகளால் அழைத்து வரப்பட்டு இளைஞர்களுக்கு அரசியல் சூழல் குறித்தும் உண்ணாவிரதப் போராட்டம் குறித்தும் ஆர்.பி.உதயகுமார் விளக்கி பேசி வருகிறார். கலந்து கொள்ளும் அனைவரும் சாப்பாடு, ஸ்நாக்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயிற்சி முகாமின் மூன்றாவது நாளில் கலந்துகொண்டு பேசிய ஆர்.பி.உதயகுமார், “சாமானிய முதலமைச்சருக்கு இலக்கணம் படைத்த எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை கண்டித்து மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் வாய்ப்பை ஜெயலலிதா பேரவைக்கு வழங்கியுள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் 520 தேர்தல் வாக்குறுதிகளை திமுக அளித்தது, அதில் குறிப்பாக, 5 ஆண்டுகளில் 50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்குவோம் என்றும், ஐந்தரை லட்சம் அரசு காலி பணியிடங்களை நிரப்புவோம் என்றும் கூறினார்கள். ஆனால், எதையும் செய்யவில்லை.
இன்றைக்கு நாட்டு மக்களை பற்றி சிந்திக்க முதலமைச்சருக்கு நேரமில்லை… தன் வீட்டு மக்களை நலனை நினைத்துதான் செயல்பட்டு வருகிறார்.
இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு துரும்பைக்கூட ஸ்டாலின் கிள்ளி போடவில்லை, இன்றைக்கும் இளைஞர்களுக்கு காவல் அரணாக எடப்பாடி பழனிசாமி உள்ளார். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் மடிக்கணினி திட்டத்தை வழங்கி உலகமே திரும்பி பார்க்கும் வகையில் தமிழகத்தை உயர்த்தினார்கள். ஆனால், இன்று மடிக்கணினி பயன்படுத்தவேண்டிய மாணவர்களின் கைகளில் போதைப்பொருள் உள்ளது. உலகத்தின் போதைப் பொருள் கேந்திரமாக தமிழகத்தை உருவாக்கிவிட்டார் ஸ்டாலின்.
உலகமே இன்று வலைதளங்களில் இயங்கி வருவதால் இளைஞர், பெண்கள், தொழிலாளர் நலனை முன்னிறுத்தி நாள்தோறும் அறிக்கை, பேட்டி வாயிலாகவும் எடப்பாடி பழனிசாமி இயங்கி வருவதால் வலைதளங்களில் இளைஞர்களை அதிகம் ஈர்த்த தலைவராக உள்ளார் .
திமுக அரசை கண்டித்து வருகின்ற 9-ம் தேதி மதுரை பழங்காநத்தத்தில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டம் தமிழகத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் அமையும். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொள்ளும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் திமுக அரசுக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள்.” என்றார்.