வரும் நவம்பர் மாதம் மெக்ஸிகோவில் மிஸ் யுனிவர்சின் இந்த ஆண்டுக்கான இறுதிப்போட்டி நடக்கவுள்ளது. இதில் ஒவ்வொரு நாடும் தங்களின் சார்பாக போட்டியாளர்களை அனுப்பி வைப்பதற்காக, அழகிகளை தேர்வு செய்து வருகின்றன. இந்த நிலையில், உலக அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது, “வயது வெறும் எண்ணிக்கைதான், சாதனைகளுக்கு தடையல்ல” என நிரூபிக்க துடிக்கும் ஒரு 81 வயது அழகியின் கனவை நோக்கிய பயணம்… 2024 ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் கலந்து கொள்ளும் அதிக வயதான போட்டியாளராக வரலாற்றில் பெயர் பதிக்க இருக்கிறார் தென் கொரியாவைச் சேர்ந்த மாடல் சோய் சூன்-ஹ்வா.
தன்னுடன் போட்டியிட்ட 31 இளம்பெண்களையும் தாண்டி சிறந்த உடைக்கான (Best dressed) விருதை பெற்று அசத்தியுள்ளார். 72 வயதில் மாடலிங் பயணத்தை ஆரம்பித்த சோய் , தனது 74 வயதில் seoul fashion week-ல் முதல் முறையாக களம் கண்டார். அதற்கு பிறகு Harper’s Bazzar, Elle போன்ற பத்திரிகைகளில் இடம் பிடித்து, பிரபல விளம்பரங்களிலும் கால் பதித்துள்ளார். இதற்கு முன்பு மிஸ் யுனிவர்ஸ் போட்டிகளில் பங்கேற்க வயது வரம்பு 28 என இருந்தது, தற்போது வயது விதிகள் தளர்க்கப்பட்ட நிலையில், தன்னை உலக அரங்கில் ஒரு மாடலாக நிலை நிறுத்திக்கொள்ள ஒரு வாய்ப்பாக இதில் களம் இறங்கியுள்ளார் சோய்.
போட்டியில் தன் பங்கேற்பு குறித்து பகிர்ந்து கொண்ட சோய் , “மாடலிங் எனக்கு புதிய பாதையைக் காட்டியது, என் ஆரோக்கியம் , என் உற்சாகம் , ஆகியவற்றை உலகிற்கு காட்ட வேண்டும், வாழ்கையில் நமக்கு என்ன தேவை என்பதை அறிந்து அதில் முழுமையாக ஈடுபட வேண்டும். பெரியவர்களின் அழகு , திறமை உலக அரங்கில் காட்டப்பட வேண்டியது மிக அவசியம் . தற்போது என்னுடைய பேரக்குழந்தைகள்கூட தங்கள் பாட்டியை அழகானவர், சிறந்தவர் என சொல்கிறார்கள்” என பெருமிதத்தோடு கூறியுள்ளார். தன் நரைத்த முடியோடு மிஸ் யுனிவர்ஸ் மேடையில் மிடுக்காக வலம் வரும் சோய் சூன்- ஹ்வா , எல்லோருக்கும் முன்னுதாரணம் என பலரும் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.